ஏனெனில் குழந்தை கருவில் வளரும்போதே தாய் சாப்பிடும் உணவு பழக்கத்திற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கும். குழந்தை பிறந்ததும் தாய் வேறுசில உணவு பழக்கங்களை பின்பற்றும்போது அதன் தாக்கம் தாய்ப்பாலில் வெளிப்படும். தாய்ப்பாலின் சுவையும் மாறுபடும் என்பதால் பாலூட்ட முயற்சிக்கும்போது அழும். தாய்ப்பாலை குடிக்காமல் தவிர்க்கும். குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்துவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். தாய்ப்பாலின் சுவை மாறுபடுவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
மசாலா உணவுகள்: பெரும்பாலான பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் காரமான உணவுகளை தவிர்த்துவிடுவார்கள். காரமான மசாலா வகைகளையும் விரும்பமாட்டார்கள். ஆனால் குழந்தை பிறந்ததும் காரமான மசாலா உணவுகளை சாப்பிட தொடங்குவார்கள். அத்தகைய மசாலா உணவுகள் தாய்ப்பாலின் சுவையை மாற்றிவிடக்கூடும். அதனால் குழந்தைகள் தாய்ப்பால் பருகுவதற்கு அடம்பிடிக்கக்கூடும். அதேசமயத்தில் கர்ப்ப காலத்தில் கார உணவுகளை சாப்பிட்டிருந்தால் கருவில் வளரும் குழந்தைக்கும் அது விருப்பமானதாக மாறி இருக்கும். அதனால் தாய்ப்பால் பருகும்போது சுவை மாறியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடும்.
கடல் உணவுகள்: மீன் போன்ற கடல் உணவுகள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும். ஆனாலும் கர்ப்ப காலத்தில் கட்டுப்பாடுகளுடன்தான் கடல் உணவுகளை சாப்பிட வேண்டியிருக்கும். அதுபோலவே தாய்ப்பால் கொடுக்கும் சமயத்திலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானது. ஏனெனில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை மீன்கள் சாப்பிடும்போது அதன் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். அவை நச்சுப்பொருட்களாக மாறி, மீன் உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மேலும் மீனில் உள்ள நச்சுப்பொருட்கள் தாய்ப்பாலில் கலந்து குழந்தைக்கு அசவுகரியத்தை உண்டாக்கலாம். கர்ப்பகாலத்திலோ, பாலூட்டும்போதோ கடல் உணவுகளில் உள்ள பாதரச நச்சுக்கள் குழந்தையை சென்றடையும்போது அது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை பாதிப்புக்குள்ளாகும்.
இறைச்சி: கர்ப்பகாலத்தில் சிலர் இறைச்சி வகைகளில் ஈரல், குடல் போன்ற உள் உறுப்புகளை சமைத்து சாப்பிடுவார்கள். தாய்ப்பால் கொடுக்கும்போதும் தொடர்ந்து சாப்பிடுவார்கள். இத்தகைய உள் உறுப்புகளை அதிகம் சாப்பிடும்போது அதில் இருக்கும் நச்சுக்கள் தாய்ப்பாலில் கலந்துவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆதலால் பாலூட்டும் தாய்மார்கள் இத்தகைய இறைச்சி உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடுவதே நல்லது. ஏனெனில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் இத்தகைய விலங்குகளின் வளர்ச்சிக்கு ஹார்மோன் மருந்து, ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்செலுத்தி இருந்தால் அதில் இருக்கும் நச்சுக்கள் தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு பிடிக்காமல் போகலாம்.
தண்ணீர்: பாலூட்டும் தாய்மார்கள் சுத்தமான நீரை பருக வேண்டும். சமைப்பதற்கும் சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் மாசுபட்ட நீரை உட்கொண்டால் பாலின் சுவையும், தரமும் மாறுபடும். அசுத்தமான பாலை குழந்தைக்கு கொடுக்கும் நிலையும் உண்டாகும். அசுத்த நீரை தொடர்ந்து பருகும்போது தாயாரின் திசுக்களில் நச்சுகள் உருவாகிவிடும். அதனால் குழந்தை தாய்ப்பாலை குடிக்க விரும்பாது.
மருந்துகள்: பாலூட்டும் தாய்மார்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலக்காத ஆர்கானிக் உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் பூச்சிக்கொல்லி மருந்துகளில் கலக்கப்படும் கிளைபோசெட் எனும் ரசாயன பொருள் உடல் நல பாதிப்பில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகம் கலக்காத சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். தாய் உண்ணும் உணவு தான் தாய்பாலாக மாறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தாயார் ஏதேனும் உடல்நல பாதிப்பிற்கு மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளலாம். அந்த மருந்துகளின் வாசத்தால் கூட குழந்தைக்கு தாய்ப்பால் பிடிக்காமல் போகலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மாற்று மருந்தை பயன்படுத்துவது நல்லது. புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய் பாதிப்பு கொண்டவர்கள் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
கொழுப்பு: தாய்ப்பாலில் கலந்திருக்கும் லிபேஸ் என்னும் நொதி, குழந்தைக்கு பால் எளிதில் ஜீரணமாகுவதற்கு உதவும். தாய்ப்பாலில் லிபேஸ் நொதியின் அளவு அதிகமாக இருந்தால் ஒருவித புளிப்பு சுவை கொண்டதாக பால் மாறிவிடும். அந்த புளிப்பு சுவை குழந்தைகளுக்கு பிடிக்காது. அதனாலும் பால் குடிப்பதற்கு விரும்பாது.
மன அழுத்தம்: பாலூட்டும் தாய்மார்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்போது அதுவும் தாய்ப்பாலில் தாக்கத்தை உண்டாக்கும். மன அழுத்தத்தால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தாய்ப்பாலில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். தாய்ப்பாலின் சுவையையும் மாற்றிவிடும். ஆதலால் மன அழுத்தமாக இருக்கும் சமயத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது.
ஒப்பனை: பாலூட்டும் தாய்மார்கள் ஒப்பனை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள், உலோகங்களின் வீரியம் அதிகமாக இருந்தால் அதுவும் தாய்ப்பாலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.