ராஜிவ் காந்தியின் தலைமையில் இந்திய அரசு இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை தன் விருப்பத்திற்கு ஏற்ப கையாளத் தொடங்கி, ஈடுபட்டுவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களைப் போட்டு, 1985இன் ஆரம்பத்திலிருந்தே தலைவர் பிரபாகரனின் தலைமையில் கெரில்லா நடவடிக்கைகளில் 1985 ஆனி 18இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதே ஆண்டின் ஆடிமாத முற்பகுதியில் இந்திய அரசின் மத்தியத்துவத்தின் கீழ் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
சகல தமிழ் குழுக்களும் கலந்து கொண்டன. தமிழர் தேசியம் தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மற்றைய தமிழ் குழுக்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இக் கோரிக்கையைச் சிங்கள அரசு நிராகரித்தது. இப்படியாகச் சிக்கலடைந்த திம்புப் பேச்சு வார்த்தைகள், போர் நிறுத்தத்தை மீறி சிங்களப்படைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலையில் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முறிவடைந்தன. இந்நேரத்தில் தமிழீழத்தில் தன் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை பற்றிய நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இதனால் தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் பாரிய முரண்பாடும் இடைவெளியும் ஏற்பட்டது. ஆனால் இந்தியா பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை தலைவர் பிரபாகரன் பின்வருமாறு கூறியிருக்கிறார். ~~எமக்கு இந்தியாவின் உதவியும் நல்லெண்ணமும் அவசியம். அதே வேளையில் இந்தியா தனது தீர்வைத் தமிழீழ மக்கள் மீது திணிப்பதை நாம் விருப்பவில்லை. தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் முழு உரிமையும் எமது மக்களுக்கு உண்டு~~ என்று.
ஆனால் இந்திய அரசும் அதன் பிரதமரும் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ மக்களின் விடுதலையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அப்போதைய தமிழக முதல்வருக்கு அழுத்தங்களைக் கொடுத்து, 1986ம் ஆண்டு ஐப்பசியில் தமிழக காவற்துறை மூலம் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த தகவல் தொடர்புச் சாதனங்களைப் பறித்தார்கள். தலைவர் பிரபாகரனையும் மற்றைய போராளிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று குற்றவாளிகளை நடத்துவது போன்று நடத்தினார்கள்.