திருகோணமலை பள்ளிவாசல் இராணுவத்தால் முற்றாக தகர்ப்பு கொட்டாவி விடும் முஸ்லீம் அரசியல் வாதிகள்

427

திருகோணமலை மாவட்டத்தின் பழைமை வாய்ந்த பள்ளிவாசல் ஒன்று நேற்று இராணுவத்தினரால் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தினை அண்மித்த வெள்ளை மணல் பகுதியில் இருக்கும் கரிமலையூற்று எனும் முஸ்லிம் கிராமம் உள்ளது. அப்பகுதி தற்போது முற்று முழுதாக இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் நிலையில், அக்கிராமத்தின் மார்பிள் பீச் கடற்கரையோரம் இருந்த பள்ளிவாசலே இவ்வாறு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

1880ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசல், 1926ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு , 1947ம் ஆண்டு ஜும்மா பள்ளிவாசலாக அரசாங்கத்தில் பதியப்பட்டிருந்தது.

2007ம் ஆண்டு அரசாங்கத்தின் தேசிய மீலாத் விழா செயற்திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டு இந்தப் பள்ளிவாசல் அழகுற, விரிவுபடுத்தப்பட்டிருந்தது. இதற்கான நிதியை அப்போதைய கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் நஜீப் ஏ. மஜீத் பெற்றுக் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் அப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இராணுவத்தினரின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு கரிமலையூற்று கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதன் காரணமாக கடந்த 2009ம் ஆண்டு தொடக்கம் இப்பள்ளிவாசலில் வணக்க வழிபாடுகளுக்கு இராணுவத்தினர் இடமளித்திருக்கவில்லை.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது இராணுவத்தின் பிடியில் இருந்து இந்தப் பள்ளிவாசலை மீட்டுத்தருமாறு பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

அதனை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வரும், முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதும் ஆளுந்தரப்புக்கு வாக்குச் சேகரித்திருந்தனர்.

இந்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பினை உதாசீனப்படுத்திவிட்டு நேற்று காலை இராணுவத்தினர், குறித்த பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக தகவலறிந்த முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக், இராணுவ அதிகாரிகளை சந்தித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TPN NEWS

SHARE