ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி பெங்களூருவை வீழ்த்தியுள்ளது.
நடப்பு சீசனில் குவிக்கப்பட்ட முதல் சதம்
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தெரிவு செய்தார்.
இதனையடுத்து துடுப்பாட்டத்தில் களமிறங்கிய பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக விராட் கோஹ்லி மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு ஓட்டங்களை சேர்த்தனர்.
அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினர். நடப்பு சீசனில் முதல் முறையாக 100 ஓட்டங்களை கடந்த இவர்களது பார்ட்னர்ஷிப் 125 ஓட்டங்களில் பிரிந்தது. டு பிளிஸ்சிஸ் 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோஹ்லி நடப்பு ஐ.பி.எல். தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மட்டுமின்றி நடப்பு சீசனில் குவிக்கப்பட்ட முதல் சதமாகவும் இது பதிவானது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோஹ்லி 113 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். ராஜஸ்தான் தரப்பில் சஹால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 100
இதனையடுத்து 184 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் வந்த வேகத்தில் அதிர்ச்சியளித்து வெளியேற, ஜோஸ் பட்லருடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார்.
அதிரடியாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கிய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. தொடர்ந்து அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் இணை தங்களது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினர்.
இந்த ஜோடியில் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் 69 (42) ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக்( 4 ), துருவ் ஜூரெல்( 2 ) ஓட்டங்களுடன் வெளியேறினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 4 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களும் ஹெட்மயர் 11 ஓட்டங்கலுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 19.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.