தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் ஈராக் நகரங்களை மீட்க 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தாக்குதலுக்கு தயாராக உள்ளனர்.
எண்ணை வளம்மிக்க ஈராக் நாட்டில் தற்போது உள்நாட்டு போர் மூண்டுள்ளது. சன்னி பிரிவு தீவிரவாதிகள் ஷியா பிரிவு அரசின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ என்ற அமைப்பை ஏற்படுத்தி ராணுவத்துக்கு எதிராக அதிரடி தாக்குதல்களை நடத்துகின்றனர்.
ஈராக்கின் முக்கிய பெரிய நகரங்களான மொசூல், திக்ரித், கிர்குக், பலூஜா உள்ளிட்டவற்றை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
எனவே, தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்காக ஈராக்குக்கு உதவ அமெரிக்க முன் வந்துள்ளது. தீவிரவாதிகளின் மீது வான் வழி தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளது. அங்குள்ள அமெரிக்கர்கள் மற்றும் தூதரகத்தை காக்க கூடுதல் ராணுவ வீரர்கள் அனுப்பபட்டுள்ளனர்.
ஈராக் ராணுவம் தீவிரவாதிகளை தாக்கி முறியடிக்க தேவையான உத்திகள் மற்றும் யோசனைகளை வழங்க 300 ஆலோசகர்களை அதிபர் ஒபாமா அனுப்பியுள்ளார். இதனால் ஈராக் ராணுவம் உற்சாகம் அடைந்து தெம்பாக உள்ளது.
எனவே, தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறி வரும் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்தி புறமுதுகு காட்டி ஓட வைக்க தயாராகி விட்டது. தற்போது பாக்தாத் வடக்கே 100 கி.மீ தொலைவில் சமர்ரா என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் முகாமிட்டு உள்ளனர்.
அவர்களின் முன்னேற்றத்தை தடுக்க பாக்தாத்தை சுற்றி ஈராக் படைகளை குவித்து வைத்துள்ளது. அதே நேரத்தில் திவிரவாதிகளின் பிடியில் இருக்கும் திக்ரித், ஷர்கத், நைன்வே ஆகிய நகரங்களை மீட்பதில் முனைப்பாக உள்ளது.
அதற்காக 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் திக்ரித் நகரம் நோக்கி முன்னேறி செல்கின்றனர். இந்த தகவலை பிரதமர் மலிகி டெலிவிஷனில் தெரிவித்தார்.
இதற்கிடையே ஷியா பிரிவு முஸ்லிம் மதகுரு அயதுல்லா அலி அல்–சில்தானி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ‘‘அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சன்னி தீவிரவாதிகளை அடித்து விரட்ட வேண்டும். நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் அனைவரும் வருந்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்’’ என தெரிவித்துள்ளார்.