தீவிரவாதிகளை அழிக்கும் விஷயத்தில் பாகிஸ்தான் இராணுவம் அக்கறை காட்டவேண்டும் – அமெரிக்கா

164

தீவிரவாதிகளை அழிக்கும் விஷயத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளன.ஆனால், பாகிஸ்தான் இராணுவமும் இந்த விஷயத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு விஷயங்களுக்காக அமெரிக்க அரசு ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடி ரூபாயை நிதி உதவியாக அளித்து வந்தது.

ஆனால் பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும் அண்டை நாடுகளுக்குள் தீவிரவாத செயல்களை நிகழ்த்த பயங்கரவாதிகளுக்கு உதவி வருவதாகவும்,இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இதனால் பாக்கிஸ்தானிற்கு அளித்து வந்த நிதி உதவியை, அமெரிக்கா நிறுத்தியது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான் தீவிரவாதிகளுக்கு எதிராக, திருப்திகரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரி தெரிவித்ததாவது,

தீவிரவாதிகள் விஷயத்தில், பாகிஸ்தான் பின்பற்றும் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

அதேநேரத்தில் அந்த நாட்டின் உள் அரசியல் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை.பயங்கரவாதிகளுக்கு எதிரான விஷயத்தில்  உரிய நடவடிக்கை எடுப்பதாக  இம்ரான் கான் உறுதி அளித்துள்ளார்.

அவர் பிரதமராக பதவியேற்ற பின், சில மாற்றங்களையும் அமல்படுத்த முயற்சித்து வருகிறார்.

ஆனால் அவரால் அதை முழுமையாக செயல்படுத்த முடியுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில்  அந்த நாட்டு இராணுவமும் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் தலைவன் மசூத் அஸார், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால்,சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அமெரிக்கா இந்த கருத்தை தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

SHARE