தீவிரவாத இயக்கத்துக்கு குர்பானி தோல் வழங்க பாகிஸ்தான் அரசு அனுமதி

489
மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமான ஜமாத்-உத்-தாவா தீவிரவாத இயக்கத்துக்கு குர்பானி தோல் வழங்க பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.

மும்பை நகரின் மீது கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 10 தீவிரவாதிகள் உள்பட 164 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் சயீத் தலைமையிலான ஜமாத்-உத்-தாவா தீவிரவாத இயக்கம் தான் காரணம் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.

பக்ரீத் பண்டிகையின்போது ‘குர்பானி’க்காக பலியிடும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றின் தோல்களை இஸ்லாமிய தர்ம ஸ்தாபனங்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் தானமாக வழங்குவது முஸ்லிம்களின் வழக்கமாக உள்ளது.

பாகிஸ்தானில் இவ்வகையில் குர்பானி இடப்படும் தோல்களை வாங்கி, அவற்றை தோல் பதனிடும் நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை வைத்து, தீவிரவாத செயல்களுக்கு தேவையான வெடி குண்டுகள், துப்பாக்கிகள் போன்றவற்றை இங்குள்ள தீவிரவாத இயக்கங்கள் வாங்கிக் குவிக்கின்றன.

பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாத நடவடிக்கைகளை அரங்கேற்றும் லஷ்கர்-இ-தைபா, தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான், ஜைஷ் முஹம்மத், லஷ்கர்-இ-ஜாங்வி உள்ளிட்ட 22 தீவிரவாத இயக்கங்களுக்கு பக்ரீத் பண்டிகையின்போது குர்பானி தரப்படும் பிராணிகளின் தோல்களை வழங்கக் கூடாது என்று தடை விதித்துள்ள பாகிஸ்தான் அரசு, மும்பை தாக்குதலுக்கு காரணமான ஜமாத் உத் தாவா தீவிரவாத இயக்கத்துக்கு மட்டும் இந்த தடையில் இருந்து விலக்கு அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.

குர்பானி தோல்களை விற்பனை செய்வதன் வாயிலாக கிடைக்கும் தொகையை ஏழை மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு செலவிட்டு வருவதாக ஹபீஸ் சயீத் தலைமையிலான ஜமாத் உத் தாவா தீவிரவாத இயக்கம் கூறி வருகின்றது.

எனினும், இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நடுநிலைவாதிகள், அந்த தொகை முழுவதுமே ‘ஜிஹாத்’ என்ற பெயரால் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குர்பானி தோல்களை பெற்றுக் கொள்வதற்க்காக, ஜமாத் உத் தாவா மற்றும் அதன் துணை அமைப்பான ஃபலா-இ-இன்ஸானியத் ஆகிய இயக்கங்கள், பஞ்சாப் மாகாணம் உள்ளிட்ட பாகிஸ்தானின் பல பகுதிகளில் தோல்கள் சேகரிப்பு முகாம்களை திறந்துள்ளன.

SHARE