துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 201 பேர் பலி

609
துருக்கியில் உள்ள சோமா நகரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இஸ்தான் புல்லில் இருந்து 250 கி. மீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த சுரங்கத்தில் 800–க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தனர்.

நேற்று ஒரு பிரிவினர் பணி முடிந்து ‘ஷிப்ட்’ மாறும் போது சுரங்கத்தின் மின்சாரம் சப்ளை செய்யும் பிரிவில் திடீரென தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்தனர். 420 மீட்டர் ஆழ சுரங்கத்தில் சிக்கி தவித்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருந்தும் தீயில் கருகி 201 பேர் பலியாகினர்.

மேலும் 360 பேரை மீட்டனர். அவர்களில் 80–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே சுரங்கத்துக்குள் மேலும் 200 பேர் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விபத்துக்கு கார்பன் மோனாக்சைடு விஷ வாயுவே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த வாயு கசிவினால்தான் தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தொழிலாளர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் சுரங்கம் முன்பு குவிந்தனர். கதறி அழுத அவர்கள் தொழிலாளர்கள் பற்றிய தகவலை ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

இந்த சுரங்க விபத்து துருக்கியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் ரீசெப் தய்யிப் எர்டோகன் அல் பானியா நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்.

சுரங்க விபத்து பற்றி அறிந்ததும் தனது பயணத்தை தள்ளி வைத்தார். மீட்பு நடவடிக்கைக்கு உத்தரவிட்ட அவர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

SHARE