துரோகப் பாதையில் விலாங்கு மீன் ‘சாணக்கியம்’ – சேரமான்

504

images (3)சிறீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஆற்றிய உரை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தனது கூற்றை மறுதலிக்காது இறுமாப்புடன் சம்பந்தர் நடந்து கொள்ளும் நிலையில், அதனை அவரது தனிப்பட்ட கருத்தாக தணித்துவிட்டு நழுவிக் கொள்ளும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக உலகம் கொண்டிருந்த பார்வை பற்றிய தனது கருத்தை மட்டுமே சம்பந்தர் வெளிப்படுத்தினார் என்ற தொனியில் தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ‘மேதாவிகள்’ சிலரும் வியாக்கியானமளித்து வரும் நிலையில் இப்பத்தி எழுதப்படுகின்றது.

 

தமிழீழத்தில் புலிகளின் ஆட்சி நிலவிய வேளையில் பாயும் புலிக்கொடியை ஏற்றிய அதே கையால் வாளேந்திய சிங்கக் கொடியைப் பேருவகையுடன் அசைத்துத் தனது தமிழ்த் தேசவிரோதப் போக்கை ஏற்கனவே கடந்த மே நாளன்று சம்பந்தர் வெளிப்படுத்தியிருந்த நிலையில், அவரது புலியெதிர்ப்புப் போக்கிற்கான ஆழமான பிரதிபலிப்புக்களை வெளியிடுவது அவசியமற்றது என்றே நாம் கருதியிருந்தோம்.

 

எனினும் சம்பந்தரின் புலியெதிர்ப்புப் போக்கையும், அடித்தொண்டு அரசியல் ‘சாணக்கியத்தையும்’ நியாயப்படுத்தும் கைங்கரியத்தில் சில ‘மேதாவிகள்’ ஈடுபட்டுள்ள நிலையில் இதுவிடயத்தில் சில பிரதிபலிப்புக்களை இப்பத்தியூடாக வெளியிட வேண்டிய தேவை எழுந்துள்ளது. உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி என்னதான் சம்பந்தர் கூறினார்? நீண்ட நேரமாக நாடாளுமன்றத்தில் சம்பந்தர் ஆற்றிய உரையை வரிக்கு வரி மொழிபெயர்ப்பதன் ஊடாக அவரது உள்ளக்கிடக்கையை நாம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

 

ஏற்கனவே சம்பந்தரின் உரையை தத்தமது வசதிக்கேற்ப மொழிபெயர்த்து அவரது அடித்தொண்டு `சாணக்கியத்திற்கு` அவரது பரிவட்டங்கள் பல்வேறு கற்பிதங்களை வெளியிட்டு வரும் நிலையில் இவற்றிற்கு மாற்றீடாக இன்னுமொரு மொழிபெயர்ப்பை நாம் இங்கு வெளியிடுவது அநாவசியமானது. ஆனாலும், சம்பந்தரின் புலியெதிர்ப்புச் சுயரூபத்தைப் புரிந்து கொள்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக அவர் கூறிய கருத்தை இங்கு மீளப்பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்:

 

“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்றதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. இதனை எவரா
லும் மறுக்க முடியாது. ஆனால் பொதுமக்களை தாக்கத் தொடங்கிய பொழுது அது பயங்கரவாத அமைப்பாகக் கருதப்பட்டது: சிங்களப் பொதுமக்கள், தமிழ்ப் பொதுமக்கள், முஸ்லிம் பொதுமக்கள் எனப் பொதுமக்களை அவ்வமைப்பு தாக்கியது. இச்சந்தர்ப்பத்திலேயே பயங்கரவாத அமைப்பாக அது கருதப்பட்டது. அவர்கள் மனித உரிமைகளை மதிக்க
வில்லை. சனநாயகத்தைக் கடைப்பிடிக்கவில்லை. இவையே அவர்களின் பலவீனங்களாகும். தமிழீழ விடுதலைப் புலி
களை அழித்ததற்கு இன்று பலர் உரிமை கோருகின்றனர். ஆனால் நான் கூறுகின்றேன், சனநாயகத்தை மதிக்கத் தவறியதால், மனித உரிமைகளை மதிக்கத் தவறியதால்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மைத் தாமே அழித்துக் கொண்டார்கள் என்பதே உண்மையாகும்.’ இதுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சம்பந்தர் வெளியிட்ட புலியெதிர்ப்புக் கருத்தின் சாராம்சமாகும்.

 

இதுபற்றி தமிழீழ தாயகத்திலிருந்து அண்மையில் ‘ஆய்வுப்’ பத்தியன்றை வெளியிட்ட ‘மேதாவியருவர்’, தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக உலகம் கொண்டிருந்த நிலைப்பாட்டையே சம்பந்தர் அவர்கள் வெளியிட்டார் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சம்பந்தர் சித்தரிக்கவில்லை என்றும் கற்பிதம் செய்திருந்தார். இது ஒரு மிகவும் அபத்தமான கற்பிதம். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சம்பந்தர் நேரடியாக வர்ணிக்கவில்லை என்பது மறுப்பதற்கில்லை.

 

ஆனால் ‘பொதுமக்களைத் தாக்கத் தொடங்கிய பொழுது’ அவர்கள் பயங்கரவாதிகளாகக் கருதப்பட்டார்கள் என்று சம்பந்தர் கூறிய கருத்தை என்னவென்று கூறுவது? சம்பந்தர் கூறியது போன்று எப்பொழுது பொதுமக்களை – அதுவும் சம்பந்தரின் வார்த்தையில் கூறுவதானால் ‘சிங்களப் பொதுமக்களை, தமிழ்ப் பொதுக்களை, முஸ்லிம் பொதுமக்களை’ – தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கினார்கள்? ‘பொதுமக்களைத் தாக்கத் தொடங்கிய பொழுது’ தமிழீழ விடுதலைப் புலிகள் ‘பயங்கரவாதிகளாகக் கருதப்பட்டார்கள்’ என்று சம்பந்தர் கூறியதற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறுவதற்கு என்னதான் அர்த்தபரிமாண வேறுபாடுகள் உள்ளன?

 

சுருங்கக் கூறினால் தமிழீழ விடுதலைப் புலிகளை நேரடியாகப் பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுவதைத் தவிர்த்துப் ‘பொதுமக்களைத் தாக்கத் தொடங்கியதால்’ அவர்கள் ‘பயங்கரவாதிகளாகக் கருதப்பட்டார்கள்’ என்ற சொற்பதத்தைக் கூறி தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் தனது திட்டத்தை மிகவும் கனக்கச்சிதமாக சம்பந்தர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார். அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் ‘பயங்கரவாதிகளாகக் கருதப்பட்டார்கள்’ என்ற சொற்பதத்தைக் கையாண்டதன் ஊடாக தமிழ் மக்களிடையே ஏதோன் ஒரு மிதவாதி போன்ற அப்பாவித் தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் கைங்கரியத்தையும், அதே சொற்பதத்தைப் பிரயோகித்ததன் ஊடாக சிங்கள – இந்திய ஆளும் வர்க்கத்திடம் தன்னையரு புலியெதிர்ப்பாளனாகவும் அடையாளப்படுத்தி, மீனுக்குத் தலையையும், பாம்பிற்கு வாலையையும் காண்பிக்கும் விலாங்கு மீனின் ‘சாணக்கத்தியத்தை’ மீண்டுமொரு தடவை சம்பந்தர் அவர்கள் நிரூபித்துள்ளார் என்றால் மிகையில்லை.

 

இதற்குமேலும் சம்பந்தரின் விலாங்கு மீன் ‘சாணக்கியத்தனம்’ பற்றி நாம் ஆராய்வது அபத்தமானது: அடித்தொண்டு அரசியலையே மிகச்சிறந்த இராசதந்திரமாகக் கருதும் சம்பந்தரின் ‘அர்த்த சாத்திர’ மூலோபாயங்கள் பற்றி நாம் மேற்கொண்டு அலசி ஆராய்வது இராசதந்திரம் என்ற சொற்பதத்தையே கேலிக்கூத்தாகிவிடும். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாக மேற்குலக நாடுகள் அறிவித்தமைக்கான பின்னணி பற்றிய இதுவரை வெளிவராத சில உண்மைகளையும், அது தொடர்பான பொருண்மிய இழைகள் ஊடான புதிய பார்வை ஒன்றையும் இப்பத்தியூடாக நாம் வெளிக்கொணர்வது பொருத்தமாக இருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக மேற்குலக நாடுகள் தடை செய்ததன் பின்னணி என்ன? சம்பந்தர் கூறுவது போன்று மனித உரிமைகளையும், சனநாயகத்தையும் மதிக்கத் தவறியதன் காரணமாகவா தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக மேற்குலகம் தடைசெய்தது? இதற்கு விடைகாண்பதற்கு நாம் 1996ஆம் ஆண்டின் நடுப்பகுதியை நோக்கிப் பின்னகர்வது பொருத்தமாக இருக்கும்.

 

யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதையும் சிங்களப் படைகள் ஆக்கிரமித்து, கிளிநொச்சி நோக்கிய பெரும் படையெடுப்பிற்கு தயாராகிக் கொண்டிருந்த வேளை அது. 1996 சனவரி மாதம் கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் தொடங்கிக் கொல்லானவ, உறுகொடவத்தை போன்ற எண்ணெய் வளங்கல் மையங்கள் மீதும், கொழும்புத் துறைமுகம் மீதும் அடுத்தடுத்து ‘கொமாண்டோ’ பாணியிலான கரும்புலித் தாக்குதல்களை நிகழ்த்தி சிங்களத்தின் பொருண்மியத் தளத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆட்டம்காண வைத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்பொழுது இந்தியாவைத் தவிர மேற்குலக நாடுகள் எவற்றிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டிருக்கவில்லை.

 

அச்சந்தர்ப்பத்தில் கிளிநொச்சியில் இயங்கிக் கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் அதிகாரி ஒருவரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை சந்திப்பதற்கான வேண்டுகையன்று விடுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கிய பொழுதும்சரி, வன்னிக்குப் பின்னகர்ந்த பின்னரும் சரி, அவர்களுடன் பின்கதவுத் தொடர்பாடல்களை மேற்குலக நாடுகள் பேணியே வந்தன. இதில் அமெரிக்காவின் பின்கதவுத் தொடர்பாளர்களுக்கான பாத்திரத்தை வன்னியில் இயங்கி வந்த பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் வகித்து வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் பாலா அண்ணை, பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் போன்றோரை இவர்கள் அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடியதுண்டு.

 

இவ்வாறான பின்புலத்தைக் கொண்ட பன்னாட்டு நிறுவனத்தின் பிரதிநிதியருவரே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரை சந்திப்பதற்கான வேண்டுகையை விடுத்தார். இதனை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனத்தின் பிரதிநிதி அமெரிக்க அரசாங்கத்தின் செய்தியை தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தெரியப்படுத்தினார். அதன் சாராம்சம் இதுதான்:

 

“சந்திரிகாவின் அரசாங்கத்துடனான பேச்சுக்களை முறித்துக் கொண்டு தனியரசுக்கான ஆயுதப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபடுவது அமெரிக்காவை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. கொழும்பின் பொருளாதார மையங்களை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நிகழ்த்துவது வெளிநாட்டு முதலீடுகளை வெகுவாகப் பாதிக்கின்றது. அதிலும் 1996 சனவரி மாதம் கொழும்பில் உலக வர்த்தக மையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய தாக்குதலில் கண்ணாடிகள் உடைந்ததில் அமெரிக்க வணிக நிறுவனத்தை சேர்ந்த முதலீட்டாளர் ஒருவருக்குக் கையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. எனவே இவ்வாறான தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாக நிறுத்திக் கொள்வதோடு, தனியரசுக்கான ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு சந்திரிகா முன்வைக்கும் அதிகாரப் பரவலாக்கத் தீர்வுப் பொதியை ஏற்கவேண்டும். அவ்வாறு அல்லாதுவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா தடைசெய்ய நேரிடும்.”

 

இதன்பொழுது சனநாயகத்தை மதிப்பது பற்றியோ, அன்றி மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பாகவோ எவ்வித கருத்துக்களும் சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரியால் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இதற்குப் பதிலளித்த தமிழீழ விடுதலைப் புலிகள் பிரதிநிதி, பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நிகழ்த்துவது தமது நடைமுறை அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியதோடு, சிங்கள தேசத்தின் நிதிமையங்களில் தங்கியிருப்பதைத் தவிர்த்துக் கொள்வதன் ஊடாக அனாவசியமாக ஏற்படக்கூடிய விபத்துக்களை அமெரிக்கப் பிரசைகள் உட்பட வெளிநாட்டவர்கள் தவிர்த்துக் கொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

 

அத்தோடு, தமிழ் மக்களை இலக்கு வைத்து இனவழிப்பு யுத்தத்தை சந்திரிகா அரசாங்கம் முன்னெடுக்கும் பொழுது, தனியரசுக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பத்தைத் தவிர தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வேறு தெரிவுகள் எவையும் இல்லை என்றும் சம்பந்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதியால் பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. எனினும் இவற்றை ஆணவத்தோடு நிராகரித்த சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனத்தின் பிரதிநிதி, குறுகியகால அவகாசத்திற்குள் தனியரசுக்கான ஆயுதப் போராட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிடத் தவறினால் அவர்களை அமெரிக்கா தடைசெய்யும் என்று எச்சரித்தார். சந்திரிகாவின் காலடியில் மண்டியிட்டு அடித்தொண்டு அரசியலில் சம்பந்தரும் அவரது பரிவாரங்களும் ஈடுபட்டிருந்த காலகட்டம் அது. நீலன் திருச்செல்வத்துடனும், லக்ஸ்மன் கதிர்காமருடனும் சம்ந்தர் கூடிக்குலாவி மதுரசம் அருந்திப் புலியெதிர்ப்புப் புராணம் பாடிய காலம் அது.

 

அச்சந்தர்ப்பத்தில் உறுதியான முடிவை தமிழீழ தேசியத் தலைவர் எடுத்தார். அமெரிக்காவின் தடைக்கு அஞ்சித் தமிழீழ மக்களையும், போராட்டத்தையும் சந்திரிகாவிடம் விலைபேசுவதைவிடத் தடையை எதிர்கொண்டு போராடுவது என்ற முடிவை தலைவர் பிரபாகரன் எடுத்தார். தடை எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஓரிரு வாரங்களில் ‘ஒப்பரேசன் பலன்ஸ்ட் ஸ்ரைல்’ (சமன்படுத்தப்பட்ட பாணியிலான நடவடிக்கை) என்ற குறியீட்டுப் பெயருடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான எதிர்ப்புரட்சி நடவடிக்கை ஒன்று அமெரிக்காவால் தொடங்கப்பட்டது.

 

இதன் முதற்கட்டமாக சிங்கள தரைப்படையின் எயார் மொபைல் கொமாண்டோஸ் எனப்படும் சிறப்புப் படையினருக்கு அமெரிக்க தரைப்படையினரால் காட்டுப்புற சண்டைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதோடு, சீல்ஸ் எனப்படும் அமெரிக்க சிறப்புக் கொமாண்டோக்களால் சிங்கள கடற்படையினருக்கு ஆழ்கடல் நடவடிக்கைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1997ஆம் ஆண்டு அமெரிக்க தரைப்படையின் கிறீன் பெரட் கொமாண்டோக்களும், கடற்படையின் சீல் கொமாண்டோக்களும் இணைந்து ஏழு கட்டங்களாக சிங்களப் படைகளுக்கு மேலதிக சிறப்புப் பயிற்சிகளை அளித்தனர். யாழ் குடாநாட்டை திறந்தவெளிச் சிறைச்சாலையாக்கி பல நூற்றுக்கணக்கில் தமிழ் இளைஞர் – யுவதிகளை சிங்களப் படைகள் கொன்றுகுவித்து செம்மணியில் புதைத்துக் கொண்டிருந்த வேளையிலேயே இந்நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டது.

 

அமெரிக்கா முன்னெடுத்த இவ் எதிர்ப்புரட்சி நடவடிக்கையால் புடம்போடப்பட்ட சிங்களப் படைகள் 1997ஆம் ஆண்டு மார்ச் மாதம் எடிபல நடவடிக்கை மூலம் மடுவையும், பின்னர் மே மாதம் வன்னியை இருகூறாகப் பிளவுபடுத்துவதற்கான ஜெயசிக்குறுய் நடவடிக்கையையும் தொடங்கின. ஆனால் அமெரிக்கா எதிர்பார்த்தபடி வன்னியில் சிங்களப் படைகளால் நினைத்ததை சாதிக்க முடியவில்லை. கனகராயன்குளம் வரை அரக்கி அரக்கி நகர்ந்த சிங்களப் படைகள் பெரும் அழிவை சந்தித்தன. அமெரிக்க சிறப்புக் கொமாண்டோக்களால் பயிற்றுவிக்கப்பட்ட சிங்கள தரைப்படையின் எயார் மொபைல் கொமாண்டோக்களுக்கு வன்னி மண்ணில் புலிவீரர்களால் புதைகுழி தோண்டப்பட்டது.

 

இதே நிலையையே கடற்புலிகளிடம் ஆழ்கடற்பரப்பில் சிங்கள கடற்படை சந்தித்தது. இதனை அமெரிக்கா சற்றும் எதிர்பார்க்கவில்லை. தமது மிரட்டல்களுக்கு அடிபணியாது வன்னி மண்ணில் நிமிர்ந்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பாடம் புகட்ட அமெரிக்கா முடிவு செய்தது. விளைவு: 09.10.1997 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா தடை செய்தது. இன்று சம்பந்தர் கூறுவது போன்று தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யும் அறிவித்தலை வெளியிடும் பொழுது சனநாயகம் பற்றியோ, மனித உரிமை பற்றியோ அமெரிக்கா மூச்சுக்கூடவிடவில்லை. மாறாக சிறீலங்காவுடனான பொருண்மிய உறவுகளை மேம்படுத்துவது பற்றியே அப்பொழுது அமெரிக்கா கருத்துக்களை வெளியிட்டது.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை அமெரிக்கா அறிவித்த ஏக காலத்தில் அப்பொழுது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக விளங்கிய மடலின் ஓல்பிறைற் அவர்கள் நியூயோர்க்கில் சிங்கள வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமருக்கு கைலாகு கொடுத்து வணிக ஏற்பாடு ஒன்றை செய்துகொண்டார். முதலாளித்துவ பொருண்மிய நலன்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளை அமெரிக்கா தடை செய்ததை உறுதிப்படுத்தும் வகையில் தடையுத்தரவை பிறப்பித்த ‘மரண தண்டனை நடைமுறைச் சட்டம் 1996’ என்ற ஒறுப்புச் சட்டத்தின் 301ஆம் சரத்தில் பின்வரும் சொல்லாடல்கள் காணப்பட்டன:

 

“பன்னாட்டு வணிகத்திற்கும், சந்தைப் பொருண்மியத்தின் உறுதிக்கும் ஊறுவிளைவிப்பதன் மூலம் பயங்கரவாதம் ஐக்கிய அமெரிக்காவின் வெளிநாட்டு மற்றும் பன்னாட்டு பொருண்மிய உறவாடலையும், அமெரிக்க மற்றும் வெளிநாட்டுப் பயணிகளையும் பாதிக்கின்றது.”  இதுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட முப்பது வெளிநாட்டு இயக்கங்களை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் அமெரிக்கா இட்டமைக்கான உண்மையான பின்னணியாகும். இங்கு மனித உரிமைகள் பற்றியோ, சனநாயகம் பற்றியோ எந்தவொரு சொற்பதமும் இருக்க
வில்லை. அதாவது சிங்கள தேசத்துடனான வணிக நலன்களை மேம்படுத்தும் ஒரேயரு நோக்கத்துடனேயே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை 1997ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்தது.

 

இத்தடை 2001ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்கு விரிவுபடுத்தப்பட்டு பின்னர் 2006ஆம் ஆண்டு முழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. இதுபற்றி பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல் ஒன்றில் முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லுன்ஸ்ரெட் பின்வருமாறு குறிப்பிட்டார்:

 

“வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புக்களுக்கான பட்டியலை 1997ஆம் ஆண்டு அமெரிக்கா தயாரித்த பொழுது அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளடக்கப்பட்டு அன்று முதல் அப்பட்டியலில் இருந்து வருகின்றது. அப்பொழுது அப்பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளடக்கப்பட்டமை ஆர்வத்தைத் தூண்டக்கூடியதொன்று.

 

இத்தடைப் பட்டியலுக்கு மூன்று சட்ட வரையறைகள் உள்ளன:

 

1) சம்பந்தப்பட்ட அமைப்பு வெளிநாட்டு அமைப்பாக இருக்க வேண்டும்.

 

2) அவ்வமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் அல்லது நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆற்றலையும், நோக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

 

3) அவ்வமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகள் அமெரிக்கப் பிரசைகளின் பாதுகாப்பிற்கு அல்லது அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு (தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, அல்லது பொருண்மிய நலன்கள் போன்றவற்றிற்கு) அச்சுறுத்தலாக இருக்க வேண்டும்.

 

இதன்படி 1997ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் முப்பது வெளிநாட்டு இயக்கங்கள் உள்ளடக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கப் பிரசைகளின் பாதுகாப்பிற்கு அல்லது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு வெளிப்படையாக அச்சுறுத்தல் விடுத்த இஸ்லாமிய – மத்திய கிழக்கு அமைப்புக்கள். இப்பட்டியலின் முதல் இரண்டு சரத்துக்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளடங்கியிருந்தாலும், அமெரிக்கப் பிரசைகளை எச்சந்தர்ப்பத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலக்கு வைக்காததால் மூன்றாவது சரத்துடனான அவர்களின் தொடர்பு தெளிவற்றதாகவே காணப்பட்டது.

 

ஆனாலும் தென்னாசியாவின் பாதுகாப்பும், அமைதிநிலையும் அமெரிக்காவின் நலன்களுக்கு முக்கியமானதாக விளங்குவதாலும், இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அச்சுறுத்தலாக விளங்குகின்றார்கள் என்று அமெரிக்கா கருதியதன் காரணமாகவுமே அவர்களை தடைசெய்யும் தேவை அமெரிக்காவிற்கு ஏற்பட்டது.” அப்பட்டமான முதலாளித்துவ நலன்களின் அடிப்படையில் அமெரிக்கா கொண்டு வந்த இத்தடையின் பின்னணி பற்றித் தமிழீழ விடுதலைப் புலிகளும் நன்கு புரிந்து கொண்டிருந்தார்கள்.

 

அமெரிக்காவின் தடை கொண்டு வரப்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் மேற்குலகம் கொண்டிருந்த கரிசனையின் உண்மையான பின்னணி பற்றி 1994ஆம் ஆண்டு ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகையில் ‘போரும் சமாதானமும்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலா அண்ணை பின்வருமாறு குறிப்பிட்டார்:

 

“இலங்கையில் பெருமளவு முதலீடு செய்வதற்கோ, அன்றி இத் தீவை உலக முதலாளியத்தின் ஒரு வர்த்தக வலையமாக மாற்றுவதற்கோ, முடிவில்லாமல் தொடரும் இப்போர் ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதனால் சமாதான வழியில் பிரச்சினையைத் தீர்க்க முயலுமாறு மேற்குலகம் சிறீலங்காவிற்கு அழுத்தம் போடுகிறது.” 2003ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தைகளின் பொழுது சிங்கள அரசுக்கு சார்பான போக்கை மேற்குலகம் – குறிப்பாக அமெரிக்கா – எடுத்த பொழுது இதனை தமிழீழ விடுதலைப் புலிகள் நன்கு புரிந்து கொண்டிருந்தார்கள். இதுபற்றி ரோக்கியோ உதவி வழங்கு மாநாட்டில் மேற்குலக நாடுகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளைக் கண்டித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது (இதன் முழுவடிவம் 2004ஆம் ஆண்டு ஆங்கிலத்
தில் தேசத்தின் குரல் பாலா அண்ணை வெளியிட்ட ‘போரும் சமாதானமும்’ என்ற நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது). அதன் ஒரு பகுதி பின்வருமாறு:

 

“சர்வதேச வலைப்பின்னலுக்குள் அபயம் தேடியதன் மூலம் கொழும்பு அரசு சமாதான முயற்சிகளை மூன்றாம் தரப்பு அனுசரணை என்ற நிலையில் இருந்து வெளிச்சக்திகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பன்னாட்டு நீதி விசாரணை என்ற தளத்திற்குள் இட்டுச்சென்று, இலங்கைத் தீவின் அரசியல் – பொருண்மிய எதிர்காலத்திற்கு பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதற்கு வழிகோலியுள்ளது.”

 

அதாவது நோர்வேயின் அனுசரணையுடன் சமாதான முன்னெடுப்புக்களில் ஈடுபடுவதற்கு முன்னரும் சரி, சமாதானப் பேச்சுக்கள் முடக்க நிலையை எய்திய பொழுதும் சரி எவ்வாறான பொருண்மிய இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு மேற்குலகம் செயற்பட்டது என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் நன்கு அறிந்திருந்தார்கள். இதுபற்றி 1993ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மாவீரர் நாள் உரையில் பின்வருமாறு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டார்:

 

“இந்த உலகமானது மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை என்பது எமக்குத் தெரியாததல்ல. ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுயநலத்தையே முதன்மைப்படுத்துகின்றது. மக்கள் உரிமை, மனித உரிமை, தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார, வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கை நிலைநாட்டுகின்றன. சர்வதேச அரசியலும் சரி, இராஜதந்திர உறவுகளும் சரி, இந்த அடிப்படையில்தான் செயற்படுகின்றன.

 

இந்த நிலையில் எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை சர்வதேச சமூகம் உடனடியாக அங்கீகரித்துவிடுமென நாம் எதிர்பார்க்க முடியாது. ஆயினும் நாம் அந்த அங்கீகாரத்திற்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிவர வேண்டும். மாறிவரும் உலகில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும் ஒரு சந்தர்ப்பத்தில் சர்வதேச சூழ்நிலை எமக்குத் சாதகமாக அமையலாம். அப்பொழுது உலகத்தின் மனச்சாட்சி நியாயத்தின் சார்பாக எம்பக்கம் திரும்பும்.”

 

அமெரிக்காவாக இருந்தாலும் சரி, பிரித்தானியாவாக இருந்தாலும் சரி, அவுஸ்திரேலியாவாக இருந்தாலும் சரி, கனடாவாக இருந்தாலும் சரி, ஏன் ஐரோப்பிய ஒன்றியமாக இருந்தாலும் சரி, முதலாளித்துவ நலன்களின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளையும், தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் அணுகி வந்துள்ளன. ஆயுத எதிர்ப்பியக்கமாகத் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் முகிழ்த்த காலம்தொட்டு ஈழப்பிரச்சினையில் மேற்குலக நாடுகளின் கொள்கையைத் தீர்மானிக்கும் சக்தியாக முதலாளித்துவ நலன்களே திகழ்கின்றன. இதுவே மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து, சனநாயகத்தின் பெயரில் இனநாயகத்தை நிலைநாட்டும் சிங்களத்திற்கு காலம்காலமாக மேற்குலக நாடுகள் முண்டுகொடுத்து வந்தமைக்கும், தமிழீழ மக்களின் கதறல்களை செவிடன் காதில் ஊதிய சங்காக உதாசீனம் செய்வதற்கும் அடிப்படைக் காரணமாகும்.

 

சம்பந்தர் கூறுவது போன்று மனித உரிமைகளுக்காகவும், சனநாயகத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகளை மேற்குலகம் தடை செய்திருக்குமாக இருந்தால் அத்தடை சிங்களத்தின் மீதே விழுந்திருக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் அளித்த பிச்சையில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று தந்தை செல்வாவின் முதிசத்திற்கு உரிமை கோரும் சம்பந்தர் கூறுவது போன்று மனித உரிமைகளையும், சனநாயகத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மதிக்கத் தவறியிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஓர் கூட்டணி உருவாகியிருப்பதற்கு வாய்ப்பே இருந்திருக்காது.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தயவு இல்லையென்றால் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற உழுத்துப் போன கூடாரத்திற்குள் ஆனந்த சங்கரியால் எப்பொழுதோ சம்பந்தர் தூக்கியெறியப்பட்டிருப்பார். அவரது மமதையும் அத்தோடு முடிந்திருக்கும்.

 

எனவே சம்பந்தரும் சரி, இன்று அவருக்கு ஆலவட்டம் பிடிக்கும் ‘மேதாவிகளும்’ சரி பிதற்றிக் கொள்வது போன்று சனநாயகத்தையும், மனித உரிமைகளையும் மதிக்கத் தவறியதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக மேற்குலகம் தடை செய்யவில்லை. அன்றும் சரி, இன்றும் சரி, தமிழீழ விடுதலைப் புலிகளையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களையும் மையப்படுத்தி மேற்
குலகம் நகர்த்தி வரும் ஒவ்வொரு காய்களும் முதலாளித்துவ நலன்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன. இதற்கு வெவ்வேறு வியாக்கியானங்களை அளிப்பதன் ஊடாகத் தமது விலாங்கு மீன் ‘சாணக்கியத்தை’ மூடிமறைக்க முடியும் என்று சம்பந்தரும், அவரது பரிவாரங்களும் கருதினால் அதனை
விட அபத்தமான செய்கை வேறெதுவும் இருக்க முடியாது.

 

எது எவ்வாறிருப்பினும் அமிர்தலிங்கமும், நீலன் திருச்செல்வமும், லக்ஸ்மன் கதிர்காமரும் பயணித்த அதே துரோகப் பாதையிலேயே இப்பொழுது சம்பந்தரும் பயணிக்கிறார் என்பது மட்டும் உறுதி.

TPN NEWS

SHARE