தேசியத் தலைவர் பிரபாகரனின் மீள்வருகை குறித்து அதிர்ந்துபோயுள்ள இலங்கை பாராளுமன்றம்

273

2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளது போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இன்று இலங்கையில் வாழ்ந்துவருகின்ற தமிழ் பேசும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருவதென்பது உலகம் அறிந்த உண்மை. விடுதலைப்புலிகளது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் அதனது அரசியல் கட்டமைப்புக்கள் செவ்வனவே சர்வதேச ரீதியாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பெண்களுக்கான அதிகமான சுதந்திரம் இருந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது. அவ்வாறு இருந்தமையினாலேயே இன்றும் பல அரசியல் தலைவர்கள், தேசியத்தலைவர் பிரபாகரனது போராட்டத்தை மீண்டும் எதிர்பார்க்கின்றனர். இதில் குறிப்பாக ஒருசில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரபாகரனின் மீள்வருகையால் தமது அரசியல் கேள்விக்குறியாகும் என்ற நிலையிலேயே இருக்கின்றனர்.

ஒரு நாட்டின் போராட்டம் என்பது குறித்த இனம் குறித்த இனத்திடமிருந்து விடுதலையைப் பெற்றுக்கொள்வதை உள்ளுர் யுத்தம் என்றழைப்பர். நாட்டுக்கு நாடுகள் போராடுவது என்பது ஒரு நாட்டைப் பிடிப்பதற்கான யுத்தமே. தமிழ் மக்களுக்கான நீதி மறுக்கப்பட்டபோதுதான் மக்கள் புரட்சி ஆரம்பிக்கப்பட்டு தேசிய ரீதியாக விடுதலைப்புலிகளது போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளைக் கடந்துவரும் நிலையில் மீள்குடியேற்றம் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் காணாமல் போனோர்களுக்கானத் தீர்வு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரம், வாழ்வாதாரப் பிரச்சினைகள், நில அபகரிப்பு, பௌத்த மதப் பரப்பல் போன்ற பல பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாத நிலையில் உள்ளது.
வட-கிழக்கில் இருக்கக்கூடிய இளைஞர் மற்றும் யுவதிகளை போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கி பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடவைத்து இப்பிரதேசங்களில் போரினது வடுக்களை மக்கள் கவனத்தில் கொள்ளக்கூடாது என்ற வகையிலேயே அரசினது செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனது உரையானது தனது மனதில் தேசியத்தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது போராட்டத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தி நிற்கிறது. பிடல் கஸ்ட்ரோ, இடியமீன், முசோலினி, யசீர் அரபாத், சுபாஸ் சந்திரபோஸ், நெப்போலியன், சேகுவேரா போன்றோர் இன்றும் பேசப்படுவதன் உடைய காரணம் என்னவென்று பார்க்கும்போது அவர்கள் அரசாங்கங்களுக்கு எதிராக மக்களது விடுதலையினைக்காக போராட்டத்தை நடத்தினர். அதேபோன்றுதான் விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்களும் மக்களது விடுதலைக்காக போரிட்டதால் இன்றும் அனைத்து தமிழ் மக்களது உள்ளத்திலும் வைத்துப்போற்றப்படும் ஒருவராகத் திகழ்கிறார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா அவர்கள் குறிப்பிட்டதைப்போன்று விடுதலைப்புலிகளது போராட்டம் மற்றும் அவர்களது மீள்வருகை நாம் தற்போது நடக்கின்ற சம்பவங்களைக்கொண்டு பார்க்கும்போது அது எமக்குத் தேவை என்பதேயாகும். ஒரு இராஜாங்க அமைச்சராக இருந்துகொண்டு துணிவுடன் வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி யிருக்கின்றமையானது தென்னிலங்கை அரசியல் மற்றும் சிங்கள மக்களிடையேயும் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. திரைப்படங்களில் கூறுகின்ற பஞ்ச் டயலொக் போன்று ‘பெயரைக் கேட்டால் அதிருதில்ல’ என்பதைப்போன்று தேசியத் தலைவர் பிரபாகரனது பெயரை ஒரு இராஜாங்க அமைச்சர் உச்சரித்து அவரின் மீள்வருகைக்காக காத்திருக்கிறோம் என்று கூறியபோது உண்மையிலேயே அதிர்ச்சியைத் தோற்றுவித்தது. இதற்கு ஆதரவாக தமிழ் அரசியல் தலைமைகள் விஜயகலா அவர்கள் தொடர்பில் தவறான கண்ணோட்டத்தில் விமர்சிப்பதும் இவர்களது வங்குரோத்து அரசியலை எடுத்துக்காட்டுகிறது.

தேர்தலில் வாக்குப்பெறுவதற்காக தேசியத் தலைவரை விற்றுப்பிழைக்கும் அரசியல் தலைவர்கள் விஜயகலாவை நோக்கிப் பேசுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. ‘மழைக்கு நேற்று முளைத்த காளானைப்’போன்று இன்று பல இளைஞர்கள் அரசியல் தலைவர்களையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் பற்றிப் பேசுகிறார்கள். ஒருசிலர் கட்சிகளைப் பலப்படுத்தும் வகையில் செயற்படுகிறார்கள். ஒருசிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கிறார்கள். இது அரசியலில் வழமையானதொன்றாக இருந்தாலும் ஆக்கபூர்வமான அரசியல் நடவடிக்கைளை இந்த விமர்சனம் செய்பவர்களால் கொண்டுவரமுடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அரசியல்வாதிகள் துரோகிகள் என்றால் ஏனையவர்கள் புனிதர்களா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது. அதனைக் கட்டியெழுப்பி மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களாக 22 நபர்களை தெரிவுசெய்து அனுப்பும் நடவடிக்கையிலேயே தமிழ்பேசும் மக்களாகிய நாம் செய்யவேண்டும். இவ்வாறான ஒற்றுமையினை அரசு விரும்பியதில்லை. இனியும் விரும்பப்போவதுமில்லை. பிரித்தாளும் தந்திரோபாயத்தினையே கடந்த, தற்போதைய அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் மாற்றுக்கருத்தில்லை. அதிகாரங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை. இவற்றிற்காக தமிழினத்திற்கு குரல்கொடுக்கின்ற எந்த அரசியல்வாதிகளும் குரல்கொடுங்கள். இதனைவிடுத்து தனிநபர் பிரச்சினைகளை விமர்சிப்பது என்பது அர்த்தமற்றதொரு செயல். அவ்வாறு விமர்சிப்பவர்கள் பகுத்தறிந்து செயற்படவேண்டும்.

வட-கிழக்கில் இருக்கின்ற எந்தவொரு அரசியல்வாதியும் பிரபாகரனது பெயரை உச்சரிக்காது இவர்களது தேர்;தல் பிரச்சாரம் அமைந்த வரலாறே இல்லை. கடந்த காலங்களில் யாழ் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள் பிரபாகரனை ‘மிஸ்ரர் பிரபாகரன்’ என்று உரையாற்றியபோது மக்கள் கரகோசம் அளித்து வரவேற்றனர். இதற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவர்கள் வழக்குத் தொடரவேண்டும் அதாவது தன்னை இவர் மிஸ்ரர் மஹிந்த எனக் கூறவில்லை என்றும் சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரைகளை மேற்கொண்டார். வடகிழக்கில் இரத்த ஆறு ஓடும் என ஹிஸ்புல்லா கூறினார். முஸ்லீம்களுக்கான தீர்வு இல்லையெனில் முஸ்லீம் இளைஞர்கள் போராடவேண்டிவரும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள் கூறியிருந்தார். பிரபாகரனின் தலைமுடிக்குக் கூட தகுதியற்றவர் மஹிந்த என சரத் பொன்சேகா அவர்கள் கூறியிருந்தார். பிரபாகரனை விட ஆபத்தானவர் விக்னேஸ்வரன் என கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியிருந்தார். பிரபாகரன் சிறந்த போர் வீரன். அவரது ஒழுக்க விழுமியங்களை நாம் மதிக்கிறோம்; என இராணுவத்தளபதி கமால் குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

தேசியத் தலைவர் பிரபாகரனுக்குப் பிறகு மக்களால் நேசிக்கப்படும் தலைவர் விக்னேஸ்வரன் என எம்.பி சிறிதரன் அவர்கள் தெரிவித்திருந்தார். வடகிழக்கில் வாழும் ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் தேசியத் தலைவரது போராட்டம் பற்றியும் அவர்கள் பற்றிய பிரச்சாரங்களை மேற்கொண்டே இன்று பாராளுமன்ற கதிரைகளை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

மேற்குறிப்பிடப்பட்ட நபர்கள் பிரபாகரனைப் பற்றி இவர்கள் புகழ்ந்து பேசியபோது ஏன் இவர்களைக் கைதுசெய்யவில்லை. தற்போது இராஜாங்க அமைச்சர் அவர்கள் பிரபாகரன் பற்றியும், போராட்டம் மீள் உருவாக்கம் பெறவேண்டும் என்று பேசியதற்காக இலங்கையில் சிங்கள பேரினவாத அரசு பிரச்சினைகளைத் தோற்றுவித்திருப்பதென்பது மீண்டும் இலங்கையில் பல்வேறான நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. தலைவர் வருவார், அவர் கடவுள் மாதிரி என்று இன்று தமிழ் பேசும் மக்கள், தமிழ் அரசியல்வாதிகள் தமது மனங்களில் தேசியத்தலைவர் மற்றும் அவரது போராட்டத்தை நினைத்துப் பார்க்கிறார்கள். அடக்குமுறைகள் தொடர்ந்தும் தோற்று விக்கப்படுமாகவிருந்தால் நிச்சயம் தேசியத் தலைவர் வருவார் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.

SHARE