தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு நிகராக உலகத்தில் எவரையும் ஒப்பிட முடியாது. சாதாம் ஹூஸைன், இடியமீன், கடாபி, சுபாஸ் சந்திரபோஸ், வீரப்பன் போன்றவர்களும் தமக்கான தனியொரு இடத்தை மக்கள் மத்தியில் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இறந்தும் இன்னும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களும் மாறி மாறி தம்மை தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது என்பது கோமளித்தனமாகும். ஆனாலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் பொறுத்தவரையில் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையின் கீழ் அன்றிலிருந்து இன்று வரை தமது அரசியல் செயற்பாடுகளை நகர்த்திக் கொண்டிருக்கின்றார். ஆனாலும் இவர் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் வெள்ளைக்கொடி விவகாரத்தில் பாரிய தவறுகள் இழைத்துள்ளார். விடுதலைப்புலிகள் சரணடையத் தயாராக இருக்கின்றார்கள் என்ற செய்தியை ஆம்பத்தில் பரப்பியவரும் இவர் தான். பசில் ராஜபக்ஷவுடன் தொடர்பினை வைத்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற அழிவுகளை தடுத்து நிறுத்தமுடியாமல் போனது ஏன்? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சியுடனும் இவர்கள் கூட்டுச் சேர்ந்து செயற்பட முன்வரமாட்டார்கள். கூட்டுச் சேர்வோம் என்றதொரு மாயத்தோற்றத்தை உருவாக்கி அதிலே குளிர் காய்ந்து, கூட்டுச் சேர்ந்தவர்கள் கட்சியில் இருப்பவர்களை துரோகிகள் என்று பெயர் சூட்டி அவர்களின் வழமையான பாதையில் பிரிந்துசென்று விடுவார்கள். இவர்களை நம்பி இடையில் கூட்டுச் சேர்ந்தவர்களின் கதை நடுத்தெருவில் தான். தம்பி பிரபாகரன் வழியில் ஈ.பி.ஆர்.எல்.எப்க்கு பாவ மன்னிப்பு வழங்கியிருக்கின்றேன் என்று இவ்வாரத்துக்கு ஒரு கேள்வி என்று 10.02.2019 அன்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்லியிருந்தார்.
இதோ அந்தக் கேள்வி
கேள்வி :
ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள் என்று நான்
எச்சரித்தேன். அதற்கு காரணங்கள் தந்து நீங்கள் பங்குபற்றினீர்கள். நாங்கள்
தடுத்தமை பற்றிக்கூட உங்கள் பேச்சில் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்பொழுது
நடந்ததைப் பார்த்தீர்களா?
அது உங்களுக்கே உலை வைத்துள்ளதே! நீங்கள் அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றியது சரியா?
பதில் ;
கட்டாயம் சரி! மூளை உள்ளவன் தன்நலங் கருதி இவ்வாறானவற்றைத்
தவிர்ப்பான். நெஞ்சத்தில் ஈரம் கொண்டவன் எதற்குமே அஞ்ச மாட்டான்.
எந்தவொரு சூழ்நிலையையும் இறைவன் அவனுக்குத் தரும் அனுபவமாகவே
எடுத்துக் கொள்வான். என்னைப் பொறுத்த வரையில் எனது அரசியல் குறிக்கோள்
எனக்கு மிகவும் அவசியம். அந்த வகையில் எம்முடன் கொள்கை ரீதியாக உடன்
பயணிப்பவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்வது பிழையாகாது.
அதனால்த்தான்ஐங்கரநேசனின் கூட்டங்களில் நான் பங்குபற்றி வந்துள்ளேன். அனந்தியின்
கூட்டங்களிலும் பங்குபற்றுவேன். கஜேந்திரகுமார் சற்று இறங்கி வந்தால் அவரின் கூட்டங்களிலும் பங்குபற்றுவேன்.
எமது தமிழ் மக்களிடையே ஏன் சிங்கள மக்களிடையேயுந்தான் பழையதைக்
கிளறி அவற்றில் உழல்வதில் அலாதி பிரியம். முன்னர் ஜீ ஜீயா செல்வாவா சரி
என்றார்கள். அதில் பிரிந்து நின்றார்கள். பின்னர் சங்கரியா சம்பந்தனா என்றார்கள்.
அண்மைக்காலத்தில் கூட கூட்டமைப்பா கூட்டணியா என்றுள்ளார்கள். அதற்கு முன்
கூட்டமைப்பா துரோகிகளா என்ற காலமும் இருந்தது. அத்துடன் மேலும் ஒரு
கேள்வி தற்போது எழுந்துள்ளது. புலிகளா மற்றவர்களா என்பதே அது.
பழையனவற்றில் உழன்றோமானால் வருங்காலத்தைப்பற்றிச் சிந்திக்கப்
போகின்றவர்கள் யார்?
வருங்காலம் பற்றி சிந்தித்து முன்னேற முனைபவனுக்கு கடந்த காலம் கடந்த
காலமாகவே இருக்கும். கடந்த காலத்துப் பிழைகள் நிகழ்காலத்தைப் பாதிக்க
விட்டோமானால் வருங்காலம் பாதிப்படையும். போர்க்காலங்களில் நடந்த
வன்முறைகள்இ வன் கொலைகள்இ வன் செயல்கள் போன்றவை
ஆராய்ச்சியாளனுக்கு உகந்ததாக இருக்கலாம். என்னும் அரசியல்வாதிக்கு அவை பற்றிய முற்றுமுழுதான பாண்டித்யம் ஏற்பட்டால் அவருக்குத் தன்னைச்சுற்றியுள்ள
எவருமே நல்லவர்களாகத் தென்படமாட்டார்கள்.
அவர் இதைச் செய்தார் மற்றவர் அதைச் செய்தார் என்று தொடர்ந்து விவாதித்துக்கொண்டே காலத்தைப்
போக்கலாம். இதுகாறுமான அரசியலும் அவ்வாறு தான் நடந்து வந்துள்ளதாக
அவதானிக்கின்றேன் . அதுமட்டுமல்ல. நடக்காததை நடந்ததாகக் கூறி தேர்தல்
நலந் தேடும் படலங்களும் இயற்றப்பட்டு வந்ததையும் நாம் காணலாம்.
நடந்தவற்றை நடக்கவில்லை என்று அடித்துக் கூறியவர்களையும் நாம்
கண்டுள்ளோம்.
மற்றவர்கள் குற்றவாளிகள் நாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க சகல
அரசியல் வாதிகளும் முன்னின்று செயற்பட்டு வருகின்றார்கள். அதற்கு அப்பால் எம்மக்களின் சிந்தனைகள் போகாமல் இருக்க இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்களோ நான் அறியேன். ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’. ஊரை இரண்டாக்கும் பழக்கம் அரசியல் வாதிகளாகிய எம்மிடம்
தொண்டு தொட்டு இருந்து வந்துள்ளது. ஆகவே அரசியல்வாதிகளாகிய நாங்கள்
கூத்தாடிகளாகவே காலங்கடத்திப் பழகி விட்டோம். ஊரை இரண்டாக்கி அதில்
சுயநலங் காக்கவே நாம் விரும்புகின்றோம். ஒட்டுமொத்த தமிழ் மக்களின்
வருங்காலம் எமக்கு முக்கியமன்று. எமது குறுகிய அரசியல் நோக்குஇ சுயநல
இலாபமே எமக்கு முக்கியம்.
பொதுவாக மற்றவர்கள் பற்றி நாம் கிரகித்துக் கொள்ளும் எமது புலன்
அனுபவங்கள் என்றென்றும் எம்முள் உறைந்தேயுள்ளதை நாம் காணலாம்.
அதனால்த் தான் நாம் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு வகையினுள் அல்லது
இனத்தினுள் அல்லது அலகினுள் புகுத்திவிட்டு அங்கேயே அவர்களைத்
தொடர்ந்து சிறைப்படுத்தி வைத்து வருகின்றோம். அந்த வகைக்கு அப்பால்
அவர்களைப் பார்க்கவோ பேசவோ நாம் விருப்பப்படுவதில்லை. இன்னார்
என்றென்றும் இன்னார் தான். வரிக்குதிரைகள் தமது வரிகளைக் கலைக்கமாட்டா என்பது அவர்கள் வாதம். வரிக்குதிரைகள் ஆறாம் அறிவு அற்றவை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். மனிதன் மாறலாம். மனிதன் மேல் நாம் கொண்ட எண்ணங்கள் மாறலாம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.
மாவை சேனாதிராஜாவையும் காசி ஆனந்தனையும் ஒரு வருட காலத்திற்கு மேலாக ஆட்சி எதிர்ப்புக்கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறி அரசாங்கம் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் அடைத்து வைத்திருந்தது.
அவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றில் வழக்கு இருந்தது. நான் முதன்முதலில் நீதிபதியாக
நியமனம் பெற்றதும் மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டேன். அப்போது எனக்கு
மாவையையோ காசியையோ தனிப்பட்ட முறையில்த் தெரியாது. அரசியல்
கிளர்ச்சிகளில் ஈடுபட்டுவருபவர்கள் என்று கொழும்பு பத்திரிகைகள் அவர்களைப்
படம்பிடித்துக்காட்டி வந்தன. அவற்றை வைத்து அவர்கள் மீது சந்தேகமும்இ
வெறுப்பும் எனக்கெழுந்திருந்தால் அதனை எவரும் குறைகூற முடியாதிருந்தது.
ஆனால் நான் அங்கு சென்றதும் கேட்டகேள்வி ‘ஏன் இவர்களுக்கு எதிராகக்
குற்றப் பத்திரம் இதுகாறும் பதியப்படவில்லை’ என்பதே.
அதற்கு அரசாங்கம் சாக்குப் போக்கு சொல்லியது. உடனே நான் ஒரு குறிப்பிட்ட காலத்தை
நிர்ணயித்து அதற்கிடையில் குற்றப்பத்திரம் பதியாவிட்டால் நான் குறித்த சந்தேக
நபர்களைப் பிணையில் செல்ல விடுவேன் என்று கூறிவைத்தேன். குறித்த நாள்
வந்தது. குற்றப்பத்திரம் பதியப்படவில்லை. ஏதேதோ காரணங்கள் அரச சட்டத்
தரணியால் கூறப்பட்டன. நான் அவற்றைப் பரிசீலித்து மத்தியானம் எனது
தீர்மானத்தைத் தருவேன் என்று கூறி மன்ற இருப்பை ஒத்திவைத்தேன்.
அப்போது மட்டக்களப்பின் மிக சிரேஸ்ட சட்டத்தரணிகள் பலர் என்னைக் காண
என் தனியறைக்கு வந்தார்கள். அவர்களுள் ஒருவர் ‘சேர்! நீங்கள் இப்பொழுது
தான் நீதிபதியாகப் பதவியேற்று வந்துள்ளீர்கள். இளம் வயதினர். இளம் குடும்பம். உங்களுக்கு இந்த எதிரிகள் பற்றித் தெரியாது. அவர்கள் கிளர்ச்சிக்காரர்கள்.
வன்முறையாளர்களுடன் தொடர்பு கொண்டவர்கள். நாட்டை நாசமாக்கத்
துணிந்தவர்கள். அவர்களுக்குப் பரிந்து நீங்கள் பிணை வழங்கினீர்கள் என்றால்
பாரதூரமான விளைவுகள் ஏற்படுவன. உங்கள் நீதிபதி வாழ்க்கை கூட அதனால்
பாதிப்படையும். உங்கள் நன்மைக்காகத்தான் இதை உங்கள் நலன் கருதி
உங்களுக்குக் கூறுகின்றோம்’ என்றார். நான் எழுந்து அவர்கள் யாவருக்கும்
கைலாகு கொடுத்து அவர்களுக்கு என் மீது இருந்த பரிவுக்கும் கரிசனைக்கும்
மனமுவந்து நன்றியைத் தெரிவித்தேன்.
பின்னர் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் ஒரு வருடத்திற்கும் மேலாக தாக்கல் செய்யாததாலும் நான் கொடுத்த
தவணைக்கெடுவுக்குள் அவ்வாறு தாக்கல் செய்யாததாலும் அவர்களுக்குப் பிணை
வழங்கி அரசாங்கம் அவர்களுக்கு எதிராக எப்போது வழக்குப் பதிய முடியுமோ
அப்போது அவர்களுக்கு அறிவித்தல் கொடுத்து வழக்கைப் பதியலாம் என்று
கட்டளை இட்டேன். பின்னர் வழக்குப் பதியப்பட்டதோ எனக்குத்தெரியாது. நான்
பதவியேற்று ஏழு மாதத்திற்குள் இந்த வழக்கின் தீர்மானம் கொடுத்து ஒரு சில
வாரங்களினுள் நான் சாவக்கச்சேரிக்கு மாற்றப்பட்டேன். அது எனக்கு
அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தண்டனையாகவே பலர் எடுத்துக் கொண்டார்கள்.
அன்று என்னை வந்து சந்தித்த சிரேஸ்ட சட்டத்தரணிக்கு மாவையும் காசியும்
கிளர்ச்சிக்காரர்கள்இ வன்முறையில் ஒத்தூதுபவர்கள்இ நாட்டைக் குட்டிச் சுவராக்க
வந்தவர்கள். இன்று மாவை மக்கள் தலைவர்.
கட்சித் தலைவர் காசி உணர்வுள்ள
துடிப்புள்ள உன்னதக் கவிஞர். இவ்வளவையும் நான் கூறுவதற்குக் காரணம் ஏற்கனவே நாம் கேட்கும் செய்திகளில் இருந்து மக்களை எடைபோட்டு அவற்றின் அடிப்படையில் அவர்களை விலக்கி நடப்பது நாம் செய்யும் ஒரு பிழை என்று காட்டுவதற்கே. காதால் கேட்பதற்கும் கண்ணால் காண்பதற்கும் வரம்பும்
வரையறைகளும் உண்டு என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கே!
கொள்ளைக்காரன் வால்மீகி உலகம் போற்றும் இராமாயணத்தின் ஆசிரியர் ஆனார்.
ஆயிரம் விரல் தேடி அப்பாவிகளைத் துன்புறுத்தி 999 பேரின் கைச்சிறுவிரல்களை
அறுத்து மாலையாகப் போட்டிருந்த அங்குலிமாலா புத்தபெருமானின் மிகப் பெரிய சீடராகப் பிற்காலத்தில் போற்றப்பட்டார்.
கடந்த காலங்களைக் கூறி நிகழ் காலத்தையும் வருங்காலத்தையும் பாழாக்க
முனையாதீர்கள் என்று கூற வருகின்றேன் ஒருவர் பிழை செய்திருந்தால் அதனை
ஏற்றுஇ மாறி நடக்க அவருக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். மேரி மக்டலீனுக்குக்
கல்லால் வீச எத்தனித்த மக்களிடம் யேசு கிறீஸ்து நாதர் கேட்டார் ‘பிழை
செய்யாத ஒருவர் உங்கள ; மத்தியில் இருந்தால் அவர் முதற் கல்லை எறியட்டும்’
என்று. எவருமே எறிய முன்வரவில்லை. தாம் பிழையற்றவர்கள் என்று நினைத்துஇ
மற்றவர் பிழை செய்தார் என்று கணித்து அவர்கள் கல்லை வீச எத்தனித்தார்கள்
‘நீங்கள் யாவரும் பிழையற்றவர்கள்?’ தானா என்று கேட்டதும் அம் மக்கள் தமது
பிழையை உணர்ந்து கொண்டார்கள்.
இனி உங்கள் கேள்விக்கு வருகின்றேன் பிழைகள் செய்யாதவர்களே ஈ.பி.ஆர். எல் எப் கட்சியினர் என்று நான் கருதி குறித்த கூட்டத்திற்கு செல்லவில்லை. அவ்வாறு
பிழைகள் செய்திருந்தும் மன்னித்து கூட்டமைப்பில் அவர்களுக்கு இடம் கண்ட
தம்பி பிரபாகரனின் முன்மாதிரியை முன்வைத்தே நான் அங்கு சென்றேன்.
தமிழர்களின் வருங்காலம் கடந்த காலத்தால் மாசுபடக் கூடாது என்பதால் நான்
அங்கு சென்றேன். எவரையுமே அவர் நல்லவர்இ இவர் கூடாதவர் என்று பாகுபாடு
காட்டி நடக்க என் மனம் இடங்கொடுப்பதில்லை. எல்லோருமே இறைவனால் படைக்கப்பட்டவர்கள். அல்லது இயற்கையால் உருவாக்கப்பட்டவர்கள்.
நான் தண்டனை விதித்த பல குற்றவாளிகளை பின்னர் நான் கண்ட போது அவர்களுடன் அன்புடன் அளவளாவி இருக்கின்றேன். அவர்களும் தமது கடந்த
கால வாழ்க்கையில் இருந்து மீண்டு உத்தமர்களாக உருமாறியதை நான்
கண்டுள்ளேன். ஆகவே குறித்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டதில் எந்தப்
பிழையும் இல்லை. அவர்கள் முன்னர் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களோ
அவர்கள் குறிப்பிடும் மற்றவர்களின் குற்றங்களோ என்னுடைய முன்னோக்கிய
அரசியல் பிரயாணத்திற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதே எனது கருத்து.
அரசியல் பிரயாணத்தின் போது உள்ளதை இல்லை என்பார்கள். இல்லாததை
உள்ளதாகச் சித்தரிப்பார்கள். அது அவர் அவர்களின் வளர்ச்சிஇ முதிர்ச்சி
போன்றவற்றைச் சார்ந்தது. அதுமட்டுமல்ல. தாமே சில நிகழ்வுகளை இயற்றிவிட்டு
நாமே அவற்றைச் செய்ததாக அடித்துக் கூறுவார்கள். சகடைக்குள்ளால் பயணஞ்
செய்தே நற்றரையை அடைய வேண்டும் என்றால் அதற்கு ஆயத்தமாகி
பயணத்தைத் தொடர்வோம். மக்கள் நலம் நோக்கிய என் பணி தொடரும்!
இவ்வாறு இவருடைய அரசியல் செயற்பாடுகள் காய் நகர்த்தப்படுகின்றது. ஐம்பது வருடத்தில் இருந்த நீதித்துறையை விட ஐந்து வருடத்தில் முழுமையான அரசியலை கற்றவர் போன்று முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடைய செயற்பாடுகள் முன்நகர்த்தப்படுகின்றது. காலத்தின் தேவை கருதி அரசியல் களத்தில் செயற்படுகின்றோம் என்று கூறிக்கொள்ளும் இருவரும் தேசியத் தலைவர் பிரபாகரனை விற்றுப் பிழைக்கும் அரசியலை இத்துடன் நிறுத்தவேண்டும். தேசியத் தலைவர் பிரபாகரனைப் பொறுத்தவரையில் அவருக்கு நிகர் அவரே தான்.
நெற்றிப்பொறியன்