தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இலக்கோடு பயணித்த ஆயுதக்கட்சிகள் இன்று சுயலாப அரசியலுக்காக திசைமாறிப்போவது கவலைக்குரியது-இரணியன்

109

 

தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இலக்கோடு பயணித்த ஆயுதக்கட்சிகள் இன்று சுயலாப அரசியலுக்காக திசைமாறிப்போவது கவலைக்குரியது

 

 

 

 

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக ஆரம்பகாலத்தில் ஆயுதமேந்திப்போராடிய ஆயுதக்கட்சிகளாக ரெலோ, புளொட், ஈரோஸ், தமிழீழ விடுதலைப்புலிகள் என்பன உள்ளடக்கப்படுகின்றன. உமா மகேஸ்வரன் தலைமையில் புளொட், பத்மநாபாவின் தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எவ், பிரபாகரன் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள், பாலகுமார் தலை மையில் ஈரோஸ், சிறிசபாரத்தினம் தலை மையில் ரெலோ என இத்தலைவர்கள் ஒரே குறிக்கோளுடன் செயற்பட்டவர்கள்.
இந்தியாவின் கைக்கூலிகளாகச் செயற்பட்டதன் விளைவு ஏனைய ஆயுதக்கட்சிகளின் தலைமைகளை ஓரங்கட்டி தமிழீழ விடுதலைப்புலிகளும், ஈரோசின் ஒரு சாராரும் இறுதிவரை சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடினார்கள். இக்காலகட்டத்தின் போது ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ஈ.பி.டி.பி போன்ற இயக்கங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தார்கள். இவர்களுடன் விடுதலைப்புலிகளிலிருந்து பிரிந்துசென்ற கருணா, பிள்ளையான் போன்றவர்களும் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து விடுதலைப்புலிகளுக்கு துரோகம் செய்தார்கள்.

அன்று இவர்கள் இழைத்த துரோகத்திற்கு இன்று பிராயச்சித்தம் தேடும் வகையில் இவ்வாயுதக்கட்சிகள் செயற்பட முயற்சிக்கின்றன. ஆனால் இவர்களின் அட்டகாசங்களை மக்கள் நன்கு அறிவார்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ, ஈ.பி.டி.பி போன்ற கட்சிகள் இதுவரையில் வகைதொகையின்றி தமிழ் மக்களைக் கொலை செய்துள்ளனர். அதற்கான ஆதாரங்களும் இருக்கிறது.

தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலைக்கும் இக்கட்சிகள் மக்களுடன் இணைந்து போராட்டங்களைச் செய்வதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. நல்லாட்சி என்று கூறிக்கொண்டு தமிழ் இயக்கங்களை பலவீனப்படுத்தும் மற்றொரு செயற்பாட்டை அரசு மறைமுகமாகச் செய்துவருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் உள்வாங்கிக்கொள்கிறது எனக்கூறுகின்ற பாட்டாளிக் கட்சிகள் தாம் உள்வாங்கப்படுவதை மறைத்து ஏனையவர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளைத் தவிர ஏனைய ஆயுதக்கட்சிகள் எவ்வாறு உள்வாங்கிக்கொள்ளப்பட்டது என்ற ஒரு சிறு விடயத்தைப் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. ஆதாரம் இல்லாமல் போலி யான செய்திகளை வெளியிடுகிறார்கள் என பலரும் நினைக்கக்கூடாது என்பதற்காக குறிப்பாக ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்கள் பொது மக்களிடமும், வியாபார கடைகளில் இருந்தும் பணம் வசூலித்தார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கிறது. சமூக அமைப்புக்கள் என்று கூறிக்கொண்டு இவ்வாயுதக்கட்சிகள் எல்லாம் ஈ.பி.டி.பி உட்பட மக்கள் மத்தியில் சென்று ஒரு ஆர்ப்பாட்டத்தை அல்லது சமூகங்களுக்கிடையிலான ஒரு செயற்பாட்டை முன்னெடுக்கும்போது இவர்களின் முன் வருவதற்கு மக்கள் பயப்படுகிறார்கள்.

மக்கள் புரட்சி என்பதும் ஒரு சமூக நீதிக்கானப் போராட்டம் என்பதும் மக்களாலேயே மேற்கொள்ளப்படவேண்டும். ஒரு குழு என்ற போர்வையில் அரசி யல் கட்சி சார்ந்தவர்கள் தமது கட்சிகளை வளர்த்தெடுக்கும் நோக்கில் செயற்படுபவர்கள் பொது அமைப்புக்களில் இருக்கிறார்கள். இவர்களின் செயற்பாடுகள் பக்கச்சார்பாகவே இருக்கிறது. ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைப் பொறுத்தவரையில் ஆரம்பகட்டத்தில் ஒன்றாக இருந்து அதன் பின்னர் வரதர் அணி, சுரேஸ் அணி, டக்ளஸ் தேவானந்தா அணி, ஈரோஸ் அணி என நான்காகப் பிரிவடைந்தது. தற்போதைய போராட்டங்களில் இவ் நான்கு கட்சியின் பிரமுகர்களுமே கலந்துகொள்கிறார்கள். இனம் இனத்தையே சேரும் என்பதைப்போல் தற்போதைய விடயங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டது.

ஆரம்பத்தில் குறிப்பிட்டதன் பிரகாரம் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராட புறப்பட்ட இயக்கங்களை ஊக்குவித்து உற்சாகம் கொடுத்து அனைத்து வசதிகளையும் வழங்கி இலங்கை அரசுக்கு எதிராக போரை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியது. ஆனால் துரதிஷ்டவசமாக விடுதலைப்புலிகளினால் முன்னாள் பிரத மர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட ஏனைய இயக்கங்கள் மீதும் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாய்ந்தது. அதன் பின்னர் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ் போன்ற இயக்கங்கள் இக்கொலைக்கும் எமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை எனக்கூறி, விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்திய இராணுவத்துடன் இணைந்து போரை ஆரம்பித்தது. புளொட் இக்காலகட்டத்தில் தனித்து நின்றதன் காரணமாக கல்லாண்டகுளம், தம்பனை, முசல்குட்டி, முள்ளிக்குளம் போன்ற பகுதிகளில் விடுதலைப்புலிகள் புளொட் கட்சிக்கு எதிரான தாக்குதல்களை மேற் கொண்டனர். இத்தாக்குதல்கள் இலங்கை இராணுவத்தின் உதவி யுடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின் புளொட் கட்சியும் விடுதலைப்புலிகளுக்கு எதிரானத் தாக்குதல்களை மேற்கொண்டது. ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலை மையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டது. இது வரலாற்றுச் சுருக்கம்.

இந்திய இராணுவத்தினரால் உள்வாங்கப்பட்ட ஆயுதக்கட்சிகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டபோது அனைத்து ஆயுதக்கட்சிகளும் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கை இந்திய இராணுவத்தால் முன்வைக்கப்பட்டது. அதற்கமைய ஆயுதங்களை ஒப்படைத்த அனைத்து ஆயுதக்கட்சிகளும் அநாதரவற்ற நிலை யில் நிற்கும் வேளையில் மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஈழக்கனவு சிதைக்கப்பட்டது. இலங்கையின் நாலாப்புறங்களிலும் தமிழ் மக்கள் இறந்துகொண்டிருந்தனர். இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துடன் இலங்கை அரசுடன் நட்புறவினை பேணிக்கொள்ள முடியும் என்ற எண்ணத்துடன் செயற்பட்ட விடுதலைப்புலிகள், இந்திய இராணுவம் இந்நாட்டை விட்டு வெளியேறும் வரை தமது போராட்டங்களை நடத்தியது. இதற்கு இலங்கையின் அப்போதைய ஆட்சியாளர் பிரேமதாசா அரசே ஆயுதங்களை வழங்கியது.

விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய இந்திய அரசாங்கத்தையும், விடுதலைப்புலிகளையும் பிரித்தாளும் ஒரு தந்திரோபாயத்தை இலங்கை அரசு மிக நுட்பமாக மேற்கொண்டது. இதனது விளைவு இறுதியில் முள்ளிவாய்க்கால் வரை போராட்டங்கள் கொண்டுசெல்லப்பட்டது. பொதுவாக சகோதரப் படுகொலைகள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் விடுதலைப்புலிகள் இறுதிவரை தமது ஈழக்கனவின் இலட்சியத்தோடு போராடியவர்கள். இந்திய இராணுவம், இலங்கை இராணுவத்துடன் இவ்வாயுதக்கட்சிகள் இணைந்து செயற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் மற்றும் தமிழ் மக்கள் மீதும் தமது வன்முறைகளைக் கட்டவீழ்த்துவிட்டிருந்தனர். இவர்களை அக்காலத்தில் இராணுவ ஒட்டுக்குழுக்கள் என்றே சொல்லுவார்கள். இவ்வியக்கங்கள் தொடர்பில் தற்போதைய தலைமுறையினர் படிக்கவேண்டும். இவர்கள் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடவேண்டும் என்பதற்காக தமிழினத்தை ஏமாற்றக்கூடாது.
ஈழப்போரின் இறுதிக்கட்டத்திலும் கூட வன்னியில் இருந்து வந்த மிக முக்கியமாக விடுதலைப்புலிகளின் தலைவர்களை இவ்வாயுதக்கட்சிகளைச் சார்ந்தவர்கள் காட்டிக்கொடுத்தனர். இக்காலத்தில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் இரு இயக்கங்களும் த.தே.கூவுடன் இணைந்து செயற்பட்டது. அதன் பின்னர் புளொட் இயக்கம் த.தே.கூவுடன் இணைந்து செயற்படலானது. ஒரு கூட்டுப்பலம் தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமானது. தேசி யத் தலைவர் பிரபாகரனால் த.தே.கூ உருவாக்கப்பட்டது. அதற்கு ஆலாசனையாளராக ஊடகவியலாளர் சிவராம் அவர்கள் செயற்பட்டார் என்பது உண்மை. ஆனால் இதனை தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் மறுத்திருக்கின்றார் எனக்கூறி அரசியல் நடத்தப் பார்க்கிறார்கள். அவர் ஏன்? எதற்காக? அப்படிக் கூறினார் என்ற விடயத்தைக் கேட்கவில்லை. ஒரு வேளை விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்களது ஏகபிரதிநிதிகள் என்று சம்பந்தன் அவர்கள் கூறியிருப்பாராகவிருந்தால் தென்னிலங்கையில் பாரிய அரசியல் ரீதியான குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் என்கின்ற கனவு இல்லாமல் போயிருக்கும். ஆகவே இதனை ஒரு இராஜதந்திர நகர்வு என்றே பார்க்கவேண்டும்.

தொடர் போராட்டம் என்பது எந்தவொரு நாட்டிலும் வெற்றியைப் பெற்றுக்கொடுக்கவில்லை. அதனோடு சமாந்தரமான பேச்சுக்களே தீர்வினைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. போராட்டத்தினது வடிவங்கள் மாற்றியமைக்கப்படும் போது அரசியல் வடிவங்களும் மாற்றிய மைக்கப்படவேண்டும். அதற்காக அரசி யல் வரலாறு தெரியாமல் அரசாங்கம் கொடுப்பதை மாத்திரம் பெற்றுவிட்டு வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏற்கனவே இராணுவப் புலனாய்வாளர்களுடனும், அரசுடனும் இணைந்து தமது செயல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்த ஆயுதக்கட்சிகளும், தற்போது அரசுடன் இணைந்திருக்கும் ஆயுதக்கட்சிகளும் வெளியில் தம்மை இலங்கை அரசுக்கு எதிரானவர்கள் எனக்காட்டிக்கொண்டு பின் கதவு வழியால் அரசுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றனர். இந்த நிலை மைகள் மாற்றப்படவேண்டும். அரசி யல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசிற்கு எதிரான நடவடிக்கைகளையே மேற்கொள்ளவேண்டும்.

1. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் வழியுறுத்துவதன் ஊடாக ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைக் காணமுடியும்.
2. சட்டத்தின் ஊடாகவும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
3. ஜனாதிபதியினது பொதுமன்னிப்பின் ஊடாக விடுதலை செய்யப்படுவதற்கான வழி வகைகள் இருக்கிறது.

இவற்றைக் கையாள்வதில் தமிழ்க் கட்சிகள் தாமதிக்கின்றன என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அதற்காக நாம் அரசாங்கத்திற்கு விலைபோகும் அல்லது அரசாங்கத்திற்கு கைகொடுக்கும் செயற்பாடுகளை மறைமுகமாகச் செய்யக்கூடாது.
மக்கள் புரட்சி என்பது எந்தவொரு நாட்டிலும் அது மாபெரும் சக்தியாகத்தான் திகழ்கிறது. தற்போது நடத்தப்படுகின்ற போராட்டங்களில் இவ்வாயுதக்கட்சிகள் தவிர்ந்து பொதுமக்கள் போராட்டக் களத்தில் நிற்பார்களாகவிருந்தால் அதற்கான பெறுபேறுகள் வேறு விதமாக அமையும். இவர்களின் உள்நுழைவு என்பது கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி தவறான வழியில் மக்களை திசைதிருப்ப முற்படுகிறார்கள். த.தே.கூட்டமைப்பு என்ற ஒற்றுமையை கோர முடியாது தத்தமது கட்சிகளுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் தவிர்ந்த ஏதேனுமொருப் போராட்டம் 2009ம் ஆண்டுக்குப் பின் இவர்களுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்திருக்கிறதா? இதே முகங்கள் தான் மீண்டும் போராடி வருகிறார்கள். எதற்கெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் என்றில்லாமல் ஊரை அடித்து உலையில் போட்டவர்களும் இவ்வார்ப்பாட்டங்களில் கலந்துகொள்கிறார்கள்.

ஆயுதப்போராட்டங்களை கொச்சைப்படுத்தவில்லை. அவர்கள் எந்தநோக்கத்தோடு ஆயுதம் ஏந்திப்போராட புறப்பட்டார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்றவர்களாக, நம்பிக்கை மிக்கவர்களாக தொடர்ந்தும் செயற்படவேண்டும். ஆயுதப்போராட்டக் கட்சிகளின் தலைவர்கள் இப்போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த போராளிகளை தெருவோரம் விட்டுவிட்டு தாம் அரசுடன் இணைந்து உல்லாச வாழ்வினை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இது கவலைக்குரிய விடயம். தமிழினத்தின் விடிவுக்காக இறுதிவரைப்போராடிய விடுதலைப்புலிகளுக்கு அரசியல் அரங்கில் ஒரு இடமேனும் கொடுப்பதற்கு த.தே.கூவின் தலைமைகள் விரும்பவில்லை. காரணம். மீண்டும் அவர்கள் உருவாக்கப்பட்டால் தமது அரசியலின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதே.

ஒற்றுமையே பலம் என்று கூறிக்கொள்ளும் இவ்வாயுதக்கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து வட-கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை உருவாக்கும் ஒரே நோக்கில் செயற்படுவார்களாகவிருந்தால் மக்கள் உங்களை மன்னித்து மறந்து ஏற்றுக்கொள்வார்கள். நாம் இதுவரை காலமும் எதற்காகப் போராடினோம். அந்த இலட்சியத்தின் பால் அந்த சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் போது தான் எம் இனம் சந்தோசமடையும். அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளாமல் கட்சிகளுக்குள்ளேயே குழப்பங்களை விளைவித்து தமிழரசுகட்சியின் பின்னால் வால் பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொண்டிருப்பதில் எந்தவித பயனும் இல்லை. ஆயுதக்கட்சிகள் ஓன்றிணைந்து ஒரு குடையின் கீழ் போராட்டங்களை முன்னெடுக்க முன்வரவேண்டும். தமிழ் மக்களுக்கான உரிமையை வென்றெடுக்க அனைவரும் முன்வரவேண்டும். நாங்கள் தேசிய வாதிகள் என்றும் எமது போராட்டம் எப்படிப்பட்டது என்றும் வீரவசனம் பேசுபவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை கடைப்பிடிப்பதன் ஊடாக தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

 

SHARE