வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினரது சோதனை நடவடிக்கையின்போது இந்த சம்பவம் இடம்பெற்றதுள்ளது.
இராணுவத்தினரது சோதனை நடவடிக்கையின்போது எற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் கோபியும் உள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று இரவு குறித்த பிரதேசத்தில் மோதல் நிலை ஏற்பட்டதாகவும் அதில் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் தெரியவரவில்லை எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
எனினும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் கோபி குறித்த தகவல்களை தாம் தற்போது பெற்றுக் கொண்டிருப்பதாகவும் கோபி உயிரிழந்துள்ளாரா என்பது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இதேவேளை பதவிய வைத்தியசாலையில், உயிரிழந்த இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரது சடலம் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா இராணுவ முகாம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கஜீபன் பொன்னையா செல்லநாயகம் அல்லது கோபி அல்லது காசியன் என்ற பெயரால் அழைக்கப்பட்ட நபர் இலங்கை பொலிஸார் அறிவித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் இலங்கையில் ஒருங்கிணைக்க முயற்சி செய்த குற்றச்சாட்டில் இந்நபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
கடந்த மாதம் கிளிநொச்சியில் உள்ள வீடொன்றில் கோபி தங்கியிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அங்கு பொலிஸார் சென்றதாகவும் பொலிஸாருக்கும் கோபிக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
கோபிக்கு அடைக்களம் கொடுத்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் 14 வயதான விபூசிகா கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோபியின் தாய் என கூறப்படும் 83 வயதான திருமதி. ராசமலர் என்பவர் கடந்த மாதம் 24ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை கோபியின் மனைவி என கூறப்படும் இளம் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.