தொடர்ந்தும் அடக்குமுறைக்குள் தமிழினம்

365

யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்களைக் கடந்துள்ளபோதிலும் தமிழினத்தின் மீதான அரசின் அடக்குமுறைகளில் மாற்றமெதுவும் ஏற்படவில்லை. காணி அபகரிப்பும், பௌத்த மயமாக்கலும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும், மத வழிபாட்டுத் தலங்கள் மீதான ஆக்கிரமிப்பும் இன்னும் தொடர்கின்றது. வடக்கு – கிழக்கில் பெரும்பான்மையாக வாழ்கின்ற தமிழ் மக்களின் போராட்டங்கள் இன்று ஜனநாயக வழியில் இடம்பெறுகின்றது.

இனப்படுகொலைக்கான நீதி மற்றும் காணாமல் போனவர்களுக்கான தீர்வு குறித்து இன்றும் அரசிடம் கேள்வி எழுப்பப்படுகின்றது. வருடங்கள் கடக்கின்றபோதிலும் அரசு மரண சான்றிதழ் வழங்குவதில் தான் குறியாகவிருக்கிறதே தவிர, பொறுப்புக்கூறலில் இருந்து விலகியிருக்கிறது. சர்வதேச சமூகமும் அரசின் இச் செயற்பாடுகள் குறித்து கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றது.

தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்த பயங்கரவாத அமைப்பாக இலங்கை அரசு முத்திரை குத்தியுள்ளது. அவர்களை நினைவுகூர்வதை அரசு எதிர்க்கின்றது. மீறி அஞ்சலி செலுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுகின்றார்கள். பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அராஜக செயற்பாடுகள் தொடர்ச்சியாக வடக்கு மற்றும் கிழக்கில் பதிவாகிறது.

யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இதுவொரு திட்டமிட்ட செயற்பாடே என்று கூறுபவர்களும் உண்டு. இளைஞர் மற்றும் யுவதிகள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். பாடசாலை மாணவர்களும் போதைப்பொருள் பாவிக்கத் தொடங்கியுள்ளனர். தமிழினத்தின் கல்விச் செயற்பாடுகள் எதிர்காலத்தில் சிதைவடைந்துபோக வாய்ப்பும் உள்ளது. வடக்கில் – கிழக்கில் வேறெந்த மாவட்டங்களில் இல்லாதவாறு முப்படைகளும் குவிக்கப்பட்டுள்ள சூழலில் எவ்வாறு இந்தப் போதைப்பொருள் பாவனை அதிகரித்தது என்கிற கேள்வி எழுகின்றது.

யுத்தத்தில் உயிர்நீத்த பொதுமக்களுக்கும் அஞ்சலி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மாவீரர்களுக்கும் அஞ்சலி செய்ய முடியாது. இவ் நெருக்கடியான சூழலில் துயிலுமில்லங்கள் துப்புரவுப் பணிகள் செய்யப்படுகின்றபோதும் பொலிசாரின் தலையீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சியில் ரணில் – மைத்திரி அரசு தமிழ் மக்களின் ஆதரவால் பதவிக்கு வந்து அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கியபோதிலும், இன்று ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் மாவீரர் மற்றும் பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளுக்கு உத்தியோகபூர்வமாக அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. மீறிச் செயற்படுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்கிற விடயம் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்று தனக்குத் தேவையாக இருந்த தமிழ் மக்கள் இன்று தமக்குத் தேவையில்லை என்கிற நிலை வந்துள்ளது. பெரும்பான்மைச் சிங்கள மக்களால் தாம் பதவிக்கு வரமுடியும் என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிரூபித்துள்ளார். ஆனால் இவர்கள் நம்பியிருக்கும் இந்த விடயத்தினை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தென்னிலங்கையின் ராஜபக்ஷக்கள் மாத்திரமல்ல அனைவரும் சிங்கள மக்களால் ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள். நாட்டு மக்கள் இன்று அதிருப்தியடைந்துள்ளனர்.

இன்றைய தலைமுறையினர் சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்குச் செய்த கொடுமைகளை உணர்ந்துள்ளனர். இனப்பிரச்சினைக்கானத் தீர்வினை வழங்காமல் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் இந்நாட்டினை பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து மீட்க முடியாது. தொடர்ச்சியான அடக்குமுறைகள் நாட்டினை சீரழிக்கும் என்பதை இந்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் உணர்ந்து செயற்படுவது எப்போது?

SHARE