தமிழ் மக்களது போராட்ட வரலாற்றினை எடுத்துக்கொண்டால் வெறுமனே பதவி மோகங்களுக்காக மாத்திரமே எதிர்க்கட்சிப்பதவியினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பது தெட்டத்தெளிவாகின்றது. காலத்தின் தேவைகருதி சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியுள்ள இந்நேரத்தில் அரசாங்கம் தனது நிகழ்ச்சிநிரலை மாற்றியுள்ளதா? எனப்பார்க்குமிடத்து இல்லை என்பதே உண்மை. அவ்வாறு மாற்றம் பெறாத வரையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் தொடர்ந் தும் எதிர்க்கட்சிப் பதவியினை தக்க வைத்துக்கொண்டிருப்பதென்பது தமிழ் மக்களுடைய விடுதலைக்கான தீர்வினைப் பெற்றுத்தரப்போவதில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. 100நாள் வேலைத்திட்டம் என ஆரம்பித்து வந்த அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை திடீரெனக் குறைத்தது. இந்த வேலைத்திட்டத்தில் நிறைவேற்றப்படும் எனக்கூறப்பட்ட ஏனைய வேலைத்திட்டங்கள் அனைத்தும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளன.
குறிப்பாகச் சொல்லப்போனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் வடமாகாணசபை என இரண்டும் தனித்தனியாக இயங்கும் நிலையே உருவாக்கம் பெற்றுள்ளது. புதிய அரசினால் இவ்விடயம் திட்டமிட்டே செயற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒரே கட்சிக்குள் இருப்பவர்களை குழப்பம் செய்து அதில் வெற்றிபெறவேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாகும். தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என அக்காலத்திலிருந்து கூறி வந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் அந்த கொள்கைகளைக் கைவிட்டு அரசாங்கத்தின் நிகழ்சிநிரலுக்கேற்ப தமது செயற்பாடுகளை முன்னகர்த்தி வருகின்றனர்.
தற்பொழுது அதிர்வு நிகழ்ச்சிக்கு சம்பந்தன் அவர்கள் அளித்துள்ள செவ்வி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளை நீங்கள் ஏகபிரதி நிதிகளாக ஏற்றுக்கொண்டீர்களா? என்கின்ற கேள்விக்குத் தான் தமிழீழ விடுதலைப்புலிகளை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் நான்கு கட்சிகள் இருந்தன. அவர்கள் தான் என்னை தலை வர் பதவிக்கு பரிந்துரைத்தார்கள். ஏனையவர்கள் ஏற்றுக்கொண்டார்களோ என்பது எனக்குத்தெரியாது. நான் ஏற்றுக்கொள்ளவில்லை எனக்கூறியிருந்தார். அமரர் ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உபதலைவராக இருந்தார். அவர் விடுதலைப்புலிகளை நாமும் தமிழ் மக்களும் ஏகபிரதிநிதி களாக ஏற்றுக்கொள்கின்றோம் எனத் தெட்டத்தெளிவாகக் கூறியிருந்தார். அக்காலகட்டத்தில் சம்பந்தன் மற்றும் ஜோசப் பரராசசிங்கம் இருவருக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தன. ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் தற்போது உயிருடன் இருந்திருந்தால் அவர்தான் தற்போதைய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவராக இருந்திருப்பார்.
இவ்வாறிருக்க வடகிழக்கு தற்போது பிரிந்தநிலையில் செயற் பட்டுக்கொண்டிருக்கின்றது. இதனை ஒன்றுபடுத்துவதற்கான நடவடிக் கைகளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்றதா? என்றால் இல்லை. தேசிய அரசியல் தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எந்த முடிவுகளை மேற்கொள்கின்றது. தமது சுயநல அரசியலுக்காக தமது முகவரியினைத் தேடிக்கொள்ளவே முனைந்து செயற்படுகின்றார்களே தவிர? காலத்தின் தேவைகருதியே எமது அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும். அவ் வாறு செயற்படுவதன் ஊடாகவே முழுமையான வெற்றியினை அடையமுடி யும். வடகிழக்கினைப் பிரதிபலிக்கின்ற வகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் படிப்படியாக தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது.
தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகள் என்ற மனப்பாங்குகள் நிலவுவதால் அதனை முதலில் சீர்செய்யவேண்டிய தேவை இருக்கின்றது. முன்பு தமிழரசுக்கட்சியிலிருந்து திருவாளர் மு.சிவசிதம்பரம், வ.நவரத்தினம், அ.அமிர்தலிங்கம், சு.நடராசா மற்றும் பல பிரமுகர்களும் தொண்டர்களுமே ஆயுதப்போராட்டம் உருவாக்கம் பெறு வதற்குக் காரணமாக இருந்தார்கள். 24 மணித்தியாலங்களுக்குள் சிங்கள மொழி யினை மட்டும் ஆட்சி மொழியாக்குவதன் பின்விளைவினை எண்ணிப்பாராது பரப்புரை ஆற்றி சிங்கள மொழி வெறியை சூடேற்றினர். சட்ட சபையில் 1944இல் வி.நல்லையா கொண்டுவந்த பிரே ரணையை ஆதரித்த பண்டாரநாயக்க ஜோன் கொத்தலாவலையுடைய நிலைப்பாட்டை மாற்றி 1956 பெப்ரவரி 20இல் ஐக்கிய தேசியக்கட்சியின் களனி மகாநாட்டில் சிங்களம் மட்டும் உத்தியோக மொழி எனத் தீர்மானம் நிறைவேற்றி குத்துக்கரணம் அடித்தார். இத்தீர்மானத்தை இராஜசேந்திரம் என்ற தமிழன் வழிமொழிந்திருந்தார். திரு கோணமலை கோப்பாய் இரு பகுதிகளில் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழரசுக்கட்சி அதனை வன்மையாகக்கண்டித்து தமிழர் தாயகப் பிரதேசங்களில் மேற்கொண்ட பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக சிங்கள அரசின் மீது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
களனி மாகாநாட்டுத் தீர்மானத்தை மக்கள் ஆணைகோரி 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 05,07,10ஆம் திகதிகளில் நடாத்திய பொதுத்தேர்தல்களில் வெறும் 08ஆசனத்துடன் ஐக்கியதேசியக்கட்சி தோல்வியுற, பண்டாரநாயக்கா தலை மையில் மக்கள் ஐக்கிய முன்னணி வெற்றியீட்டியது. வடகிழக்கு மாகாணத்தில் 10 தொகுதிகளைக் கைப்பற்றி தமிழர் அரசியல் வரலாற்றுச் சக்தியாக தன்னை தெளிவாகக்காட்டியது. 1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா தனிச்சிங்கள மொழிச்சட்டம் என்ற மசோதாவினைக் கொண்டுவந்தார். இதனால் தமிழரசுக்கட்சி பாராளுமன்றத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டது. இது தமிழர் விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகட்டப் பிரச்சினைகள். இவைகூட தற்போதுதான் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற பிரச்சினைகளை முன்னெடுத்ததன் காரணமாகவே தேசிய மட்டத்திலான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டது. இவ்வாறான செயற்திட்டங்களையே தற்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் செயற்படுத்தவேண்டும். த.தே. கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தேசிய பிரச்சினைகள் எனப் பார்க்கின்றபொழுது எதனை முன்னெடுத்திருக்கின்றார்கள் என்கின்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. இனப்படுகொலை இடம்பெற்றதற்கான சாட்சியங்கள், ஆதாரங்கள் இருந்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அதனை முன்னெடுத்து நடைமுறைப் படுத்தவில்லை. வடகிழக்கு இணைப்பை மீண்டும் அமுல்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களையும் மேற் கொள்ளவில்லை. சமவுரிமை தொடர்பான விடயங்கள் தொடர்பிலும் எந்தவொரு முன்னேற்றங்களும் இல்லை. மனித வுரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. தமி ழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. இதுபோன்ற பல்வேறான தேசிய மட்டப்பிரச்சினைகள் இருக்கின்றன. அதனைவிடுத்து கிராமங்கள் தோறும் நடைபெறுகின்ற மரண வீடுகள், திருமண வைபவங்கள், சிலை, மருத்துவமனை திறப்பு விழாக்கள், பாடசாலை உபகரணங்கள் கையளிப்பது என்ற ரீதியில் தமது தனிப்பட்ட அரசியல் செல்வாக்கினை நிலைப்படுத்துவதற்காக இவ்வரசியல் வாதகிள் செயற்பட்டுக்கொண்டிருப்பது என்பது தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுத்தரப்போவதில்லை என்பதனைத் தெளிவுபடுத்துகின்றது.
இதனைப் புரிந்துகொண்டு தேசிய மட்டத்திலான அரசியலைக் கொண்டுசெல்வதே சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள்ளும், வட மாகாணசபைக்குள்ளும் ஒற்றுமை என்பது அவசியம். உள்ளகப் பிரச்சினைகள் ஏற்படலாம். விடுதலைப்புலிகளையும் அவர்களது போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் அரசு எதிர்க்கட்சிப் பதவியினையும், வேறு பதவி களையும் வழங்கி தமது நிகழ்ச்சி நிரலைக் காய்நகர்;த்திவருகின்றது. இலங்கையில் அரசுக்கெதிராக ஆயுதக்கிளர்;ச்சியினை மேற்கொண்ட அனுபவம் ஜே.வி.பிக்கு இருக்கின்றது. ஆட்சியைக் கவிழ்க்கும் அனுபவம் ஐ.தே.கவிற்கு இருக்கின்றது. இலங்கையின் ஆட்சி பீடத்திற்காகப் போராடுபவர்கள் இவர்கள். தமிழர்கள் சுயமரியாதையுடன் தமது சொந்த மண்ணில் பாதுகாப்பாக வாழ்வதற்காகவே போராடினார்கள். இன்னமும் போராடுகின்றார்கள். 1956ஆம் ஆண்டில் இங்கினியாகல, அம்பாறையில் குடியே றிய சிங்களவர்கள் தமிழர்களுக்கெதிராக கலவரம் செய்து அடித்துவிரட்டினார்கள். இதில் முஸ்லீம் மக்களும் அடங்குவர். 1958ஆம் ஆண்டு கலவரத்தில் தென் னிலங்கையிலுள்ள தமிழர்கள் தமது உயிரைக்காப்பாற்ற தமது தாயகப்பூமியான வடகிழக்கில் தஞ்சமடைந்தனர். பின்னர் தமிழர்களுக்கெதிரான இன ஒடுக்குதல், நில அபகரிப்புக்கள் தொடர்ந்தன. இதன் விளைவாக மீண்டும் 1977ஆம் ஆண்டில் பெரியளவில் ஆட்சிபீடத்தின் அனுசரணையுடன் காவல்துறையினால் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்ட கலவரங்களின்போது தமிழர்கள் கிழக்குமாகாணத்திற்கு அகதிகளாக வந்திறங்கினர்.
1983ஆம் ஆண்டு திட்டமிட்டு தொடங்கப்பட்ட தமிழர்களுக்கெதிரான இனக்கலவரத்தின்போது கிழக்கு மாத்திரமல்ல, வடக்கிலிருந்தும் தமிழர்களை அடித்துவிரட்டுவதற்கு சிங்கள பேரினவாதிகள் ஆட்சியுடன் அனுசரணையாகச் செயற்பட்டனர். இந்த நிலையில் தான் தம்மையும், மக்களையும், மண்ணையும் பாதுகாத்துக்கொள்ள தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திப்போராடி தமிழ் மக்களின் அழிவினைத்தடுத்து நிறுத்தினர். ஆயுதமேந்திய இளைஞர்கள் பலர் ஆயுதமேந்தியபொழுது வைத்த பெயர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு இலட்சியத்திலிருந்து வேறுபட்டனர். இதனால் தமிழ் இன ஒழிப்புக்கு இடையூறாக இன்று பேரினவாத பயங்கரவாதத்தினை எதிர்த்து போரிடும் தமிழ் இளைஞர்களுக்கு பயங்கரவாதிகள் என்றும் முத்திரை குத்தப்பட்டிருக்கின்றது. பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் இனஅழிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றிய பேரினவாதம் ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்க் கட்சிகளையும், தமிழ்ப் பிரதி நிதிகளையும் 1977ஆம் ஆண்டு தேர்தலுடன் ஜனநாயகத்தை இல்லாதொழித்தது. ஜனநா யக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சியை வீழ்த்தி, ஆட்சியை பிடிப்பதற்கு விடுதலைப்போராட்டம் நடாத்துவது போல வெளிநாடுகளை நம்பவைக்கும் வகையில் ரட்ணசிறி அவர்கள் செயற்பட்டிருந்தார். விடுதலைப்புலிகள் போராடுவது தமிழ் மக்களையும், மண்ணையும் காப்பாற்றவும் அழிவுகளிலிருந்து தடுப்பதற் காகவுமேயன்றி ஆட்சிபீடத்திற்கல்ல என்பதும் அரசிற்கு நன்கு தெரியும். ஆனால் உலக நாடுகளுக்கு இது பயங்கரவாத அமைப்பு என்றே சித்தரித்துக்காட்டியது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இலங்கையில் இருந்து நீக்குவதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் உண்ணா விரதமிருந்தாவது செயற்பட்டிருக்க வேண்டும். இந்தச் சட்டம் நீக்கப்படும்போதுதான் தமிழ் மக்கள் ஒரு நிம்மதியான வாழ்வுநோக்கி அடியெடுத்துவைக்க முடியும். இவ்வாறு செயற்படாத இவர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துகொண்டு எதனைச் சாதிக்கப்போகின்றார்கள். விடுதலைப்புலிகளின் போராட்டம் பயங்கரவாதம்தான் என்று இவர்கள் ஆமோதிக்கின்றார்களா? அவ்வாறாகவிருந்தால் இதுவரை போராடிய போராட்டங்களுடைய பயன்தான் என்ன? முதலாளித்துவ நாடுகள் எமது போராட்டம் பற்றி அக்கறை கொள்வதில்லை. வெறு மனே அவர்களின் சுயநலம் கருதியே செயற்படுகின்றார்கள். இவ்விடயங்கள் அனைத்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப் பிலுள்ளவர்களுக்கு தெரியாததல்ல. உயர்மட்டத் தமிழ்த்தலைமைகள் இதனைச் சிந்திக்கவேண்டும். ஒவ்வொரு விவகாரங்களுக்கும் தனித்தனிக்குழு என்று ஆரம்பித்துச் செயற்படுவதன் ஊடாகவே இதனைச் செவ்வனவே செயற்படுத்தலாம். தேசிய அரசாங்கம் நல்லாட்சி என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கும் இவ்வரசு சர்வதேசத்தினையும், தமிழினத்தையும் ஏமாற்றும் நடவடிக்கைகளாகவே இவை அமையப்பெறுகின்றது. எதிர்க்கட்சிப் பதவியில் இவர்கள் இருந்துகொண்டு இனியும் எதைச் சாதிக்கப்போகிறார்கள்? தற்போதைய இவர்களின் செயற்பாடுகள் என்ன? இனிவருங்காலங்களிலும் இவர்களால் தேசிய அளவில் சாதிக்கமுடியாது. எதிர்க்கட்சிப்பதவி கிடைக்கமுன்னர் பிரச்சினைகளை தேசிய மட்டத்தில் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பேசிவந்தனர். ஆனால் தற்போதைய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே செயற்படவேண்டிய சூழ்நிலை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. இதனை மாற்றிய மைப்பதற்காகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சிப்பதவியினை துறக்கவேண்டும்.
நெற்றிப்பொறியன்