நடாலின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவாரா ஜோகோவிச்?

550
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடாலும், 2-ம் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் இன்று பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

‘களிமண் தரை’யில் நடக்கும் போட்டியான பிரெஞ்ச் ஓபனில் நடால் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறார். இங்கு இதுவரை விளையாடியுள்ள 66 ஆட்டங்களில் 65-ல் வெற்றியை பதிவு செய்துள்ளார். 8 முறை பிரெஞ்ச் ஓபனை ருசித்துள்ள 28 வயதான நடால் இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தினால், தொடர்ச்சியாக 5 முறை பிரெஞ்ச் ஓபனை வென்றவர் என்ற கூடுதல் சிறப்பும் அவருக்கு கிடைக்கும். 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். நடால் கூறும் போது, ‘முதல் முறையாக பிரெஞ்ச் ஓபனை வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் ஜோகோவிச்சிடம் இருக்கும். அதுவே அவருக்கு நெருக்கடியாகவும் அமையும்’ என்றார்.

இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ள 27 வயதான ஜோகோவிச்சின் வசம் இன்னும் பிரெஞ்ச் ஓபன் மட்டுமே கிட்டவில்லை. இந்த முறை வென்றால் 4 விதமான கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் சுவைத்த 8-வது வீரர் என்ற பெருமையை பெறுவதோடு, மீண்டும் முதலிட அரியணையிலும் ஏறிவிடுவார்.

நடாலும், ஜோகோவிச்சும் இதுவரை 41 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் 22-ல் நடாலும், 19-ல் ஜோகோவிச்சும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குள் கடைசியாக மோதிய 4 ஆட்டங்களிலும் ஜோகோவிச்சின் கையே ஓங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விஷயம். ஜோகோவிச் கூறுகையில், ‘கடந்த இரு ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபனில் நடாலுடன் மோதிய ஆட்டங்களில் நெருங்கி வந்து கோட்டை விட்டேன். அது எனக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த முறை இங்கு நிலைமையை மாற்றிக்காட்டுவேன். நடால், தோற்கடிக்க முடியாத வீரர் அல்ல’ என்றார். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

SHARE