சிரஞ்சீவியின் நடிப்பில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ விஜய் சேதுபதி சயீரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, சுதீப் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். மாபெரும் வரலாற்றுத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரிக்கிறார். அதனால், அவர்களுக்கு சொந்தமான ஆந்திரா, கோக்காப்பேட்டை பகுதியிலுள்ள பெரிய பண்ணை வீட்டின் தோட்டத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள செட்டில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிரஞ்சீவி வெளிநாட்டில் இருப்பதால், அங்கு படப்பிடிப்பு நடத்தவில்லை. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராடி தீயை அணைத்தனர். எனினும், இந்த தீ விபத்தி எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று சென்னையில், தளபதி 63 படத்தின் படப்பிடிப்பிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை என்று டுவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.