நந்திக்கடலில் கரையொதுங்கும் மீன்கள்: அதிர்ச்சியில் மீனவர்கள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் விஜயம்

526

நந்திக்கடல் வடக்காறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக அப்பிரதேச மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இன்று சுமார் 50 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலாப்பி, கெளிறு, மணல், மன்னா, கூறல் போன்ற மீன் வகைகளே இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்குவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கரையொதுங்கி வரும் மீன்களை வட்டுவாகல் கிராமிய கடற்தொழில் மீன்பிடி கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து கரைத்துறைப்பற்று பிரதேச சபை மற்றும் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் இணைந்து துப்பரவு செய்யும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு வட்டுவாகல், நந்திக்கடல் வடக்காறு பகுதியில் கடந்த 5 நாட்களாக மீன்கள் இறந்து கரையொதுங்கி வருவதாக கிடைத்த தகவல்களையடுத்து, வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

முன்பு சுமார் 4, 5 மீற்றர் ஆழமாக இருந்த இப்பகுதி, சுனாமியின் பின்னர் ஆழம் வெகுவாக குறைவடைந்து விட்டது.

வெய்யில் அதிகமாக நீர்ப்பரப்பில் உப்பின் செறிவு அதிகரித்ததாலும், நீரில் ஒட்சிசன் சார்பு அளவு குறைவடைந்ததாலுமே இவ் அனர்த்தம் நேரிட்டதாக மக்களின் தகவல்களில் இருந்து தெரியவருகிறது.

வட்டுவாகல் கிராமிய கடற்றொழில் அமைப்பால் கரையொதுங்கிய மீன்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிலைமைகளை வடக்கு அமைச்சர் டெனீஸ்வரன் அவர்களுக்கு தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளேன்.

மேலும் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் அவர்களை தொடர்புகொண்டு உரையாடினேன்.

அவரின் தகவல்களின் படி, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று “தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி அபிவிருத்திக்கான நிறுவனம்” பரிசோதனைக்கான மாதிரிகளை எடுத்துச் சென்றதாகவும் முடிவுகள் ஒரு வாரத்திற்குள்ளாக தெரியவரும் என்று அறிய முடிகிறது என்றார்.

SHARE