நம்பிக்கை தரும் ‘பிரிக்ஸ்’ வங்கி: இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி

485
 பிரிக்ஸ்’ நாடுகளின் வளர்ச்சிக்காக, ‘புதிய வளர்ச்சி வங்கி’ என்ற பெயரில், புதிய வங்கி ஒன்று துவங்கப்படுகிறது. ‘சீனாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படவுள்ள இந்த வங்கியின் முதல் தலைவராக, இந்தியர் ஒருவர் நியமிக்கப்படுவார்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில், இந்தியாவிற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

பிரேசிலில் நடைபெற்ற, ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாட்டில், உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்காக, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்காக, புதிய வளர்ச்சி வங்கி தேவை என, வலியுறுத்தப்பட்டது. அது நிறைவேறும் காலம், விரைவில் வருகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டு முயற்சியால் துவங்கப்படும் இந்த வங்கியின் தலைமை அலுவலகம், சீனாவின் ஷாங்காய் நகரில் அமையவுள்ளது. ‘ஐந்து நாடுகளின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்காக, இந்த வங்கி நிதி உதவி செய்யும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி துவங்குவதற்கு தேவையான நிதியை, ஐந்து நாடுகளும் சமமாக பகிர்ந்து கொள்ளும். வங்கிக்கு தேவையான நிதியில், அதிக பங்களிப்பை அளிப்பதின் மூலம் சீனா இதில் ஆதிக்கம் செலுத்த முதலில் நினைத்தது. எனினும், இந்தியா, பிரேசில் நாடுகளின் ஆலோசனையின்படி, அனைத்து நாடுகளும் சம பங்களிப்பை அளிக்க வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டது. புதிய வங்கியின் முதல் தலைவராக, இந்தியாவை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். ‘வங்கியின் துவக்கம், புதிய வளர்ச்சிக்கான ஆரம்பமாக இருக்கும் என்பதால், இந்த வங்கிக்கு, ‘புதிய வளர்ச்சி வங்கி’ எனப் பெயரிடலாம்’ என்று, இந்திய பிரதமர் மோடி கூறினார். மோடியின் பரிந்துரையை ஏற்று, இந்த வங்கிக்கு, ‘புதிய வளர்ச்சி வங்கி’ என, பெயரிடப்பட்டது.

‘வளர்ச்சிப் பணிகளுக்காக, உலக வங்கி, சர்வதேச நிதியத்தை அணுகும் போது, வளரும் நாடுகளுக்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன. அவை விதிக்கும் நிபந்தனைகள் சுமையாக மாறுவதும் உண்டு. ஆனால், வளர்ந்து வரும் நாடுகள் என்பதுடன், சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய, மூன்று நாடுகளின் மக்கள் தொகை, உலக நாடுகளின் மொத்த மக்கள் தொகையில், சரிபாதிக்கு மேல் என்பதால், இம்முயற்சி வெற்றி பெறும். மேலும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் தங்கள் நிதித்தேவையை எளிதாக பூர்த்தி செய்ய, இந்த புதிய வங்கி உதவும்’ என, உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SHARE