நரேந்திர மோடி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் உள்ள வெளிப்புற முற்றத்தில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. மாலை 6 மணிக்கு தொடங்கும் விழா இரவு 7.45 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி பதவி ஏற்கும் விழாவுக்கு வருமாறு முதன் முதலாக தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது. சார்க் கூட்டமைப்பில் இந்தியா தவிர பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், மாலத்தீவு ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே, ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேபாளம், பூடான், மாலத்தீவு தலைவர்களும் வர உள்ளனர். பாகிஸ்தானும், வங்க தேசமும் பிரதிநிதிகளை மட்டும் அனுப்பும் என்று தெரிகிறது.
இதற்கிடையே புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 4 ஆயிரம் வி.ஐ.பி.க்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாநில முதல்– அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள், பா.ஜ.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
4 ஆயிரம் வி.ஐ.பி.க்களில் சுமார் 1500 பேர் வி.வி.ஐ.பி.க்கள் ஆவார்கள். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல் கலாம், பிரதீபா பட்டீல், முன்னாள் பிரதமர்கள் தேவேகவுடா, மன்மோகன்சிங் மற்றும் வெளிநாட்டு தூதர்கள், அரசுத் துறை உயர் செயலாளர்கள் போன்றவர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய திரை உலக பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், சல்மான்கான், விஜய், நடிகை ரேகா ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர், கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வளவு வி.ஐ.பி.க்கள் அழைக்கப்பட்டும் மோடி குடும்பத்தின் சார்பில் அவரது தாய் மற்றும் சகோதர்கள் டெல்லி விழாவில் கலந்து கொள்வார்களா? என்ற சந்தேகம் நிலவுகிறது. மோடி தனிப்பட்ட முறையில் 20 பேரை அழைக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவர் இதுவரை தனிப்பட்ட முறையில் யாருக்கும் அழைப்பு கொடுக்க வில்லை.
மோடி பிரதமர் ஆவதற்கும், பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கும் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள பா.ஜ.க. ஆதரவாளர்களும் மிகவும் உறுதுணையாக இருந்தனர். அவர்கள் இணையத் தளங்கள் மூலம் பா.ஜ.க. மற்றும் மோடி மீதான இமேஜ் உயர முக்கிய காரணமாக இருந்தனர்.
அவர்களில் 90 பேர் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ரஷியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இஸ்ரேல், கென்யா, வியட் நாம், ஐக்கிய அரபு உள்பட பல நாடுகளில் வசித்து வரும் அந்த 90 பேரையும் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பதின் மூலம் கவுரவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் அவர்கள் 90 பேரும் தங்க பா.ஜ.க.வினர் சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளனர்.
மோடி பதவி ஏற்பு விழாவை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கும் என்று முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது மம்தா சார்பில் அம் மாநிலத்தில் இருந்து முகுல் ராய், அமித் மித்ரா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் சார்பில் யார்–யார் கலந்து கொள்வார்கள் என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
பதவி ஏற்பு விழாவுக்கு ஜனாதிபதி மாளிகை தரப்பில் 1250 பேருக்கும், பா.ஜ.க. சார்பில் 1250 பேருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்தில் 2500 பேர் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2 ஆயிரம் பேர் விழா நடைபெறும் பகுதிகளில் சுற்றி அமர்வார்கள். ஒரே நேரத்தில் முக்கிய பிரமுகர்கள் ஜனாதிபதி மாளிகையில் குவிய உள்ளதால் 26–ந்தேதி கோலாகல திரு விழாவாக இருக்கும்.
4 ஆயிரம் வி.ஐ.பி.க்கள் குவிவதால் டெல்லி நகரம் இப்போதே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையம், மெட்ரோ ரெயில் நிலையங்கள், முக்கிய அலுவலகங்கள் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மோடி வருகை தர உள்ள குஜராத் பவனில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் பாதை நெடுகிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். குடியரசு தின விழாவுக்கு செய்யப்படும் ஏற்பாடுகளை விட வரலாறு காணாத வகையில் டெல்லி முழுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய ராணுவத்தின் முப்படைகளும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளன. ஜனாதிபதி மாளிகையை சுற்றியுள்ள கட்டிடங்கள் அனைத்தும் ராணுவத் தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தலைவர்களை அழைத்து வரவும், அவர்களை உப சரிக்கவும் தனி தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் காவல் பணியிலும் சுமார் 10 ஆயிரம் பேர் உபசரிப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.