நவம்பர் மாதம் என்றாலே மாவீரர் தினம் என்ற நினைவு தமிழர்களுக்கு எழுவதுண்டு. அந்த அடிப்படையில் மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடாது என்று இராணுவம் தடைகளை விதித்துக்கொண்டு இருக்கின்றது. சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கட்சித் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை படம் எடுத்து விசாரணை செய்து பய அச்சுறுத்தல்களை அவர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். ஆனால் அவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் எமது தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க வேண்டும், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதிலே அவர்கள் மும்முரமாக நிற்கின்றார்கள். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஒருமித்து நின்று குரல் கொடுக்கவேண்டும். இந்த தருணத்தில் தமிழினம் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். காரணம் என்னவென்றால் இந்த தியாகம் என்பது 1983 யூலை தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை ஈழப்போரின் இறுதிக்கட்டத்திலும் கூட இந்த மண்ணின் விடுதலைக்காக இன்று தமிழினம் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது, அல்லது ஐக்கிய நாடுகள் சபை வரை பேசப்பட்டுக்கொண்டு இருக்கின்றது என்றால் அது உண்மையில் தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய போராட்டமும் தமிழ் மக்களுடைய போராட்டமும் தான்.
ஆகவே இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தக்கூடாது என அரசாங்கம் தடை செய்கின்ற பொழுது ஆணையிறவிலே தூபி இருக்கிறது, முல்லைத்தீவிலே தூபி இருக்கிறது முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களிலே தூபிகளை கட்டிவைத்திருக்கிறார்கள். அவ்வாறாக இராணுவத்தினர் தங்களுக்கான அஞ்ஜலி செலுத்துவதற்கான நிலையங்களை கட்டியிருக்கின்ற நேரத்திலே தமிழ் மக்களுக்காக இறந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்;த கூடாது என்ற நிலைப்பாடு மாற்றியமைக்க வேண்டும். இதில் மீண்டுமொரு இனவன்முறையினை தோற்றுவிக்கின்றதாக அரசாங்கத்தின் நடவடிக்கையாகத்தான் இதனை காணமுடிகிறது. நேற்றைய தினம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூட அதனை பொது வெளியிலே அனுஷ்டிக்க கூடாது என்று அறிவித்திருக்கின்றார். ஆனால் மாவீரர் துயிலும் இல்லங்களிலே அதனை அனுஷ்டிப்பதிலே அரசாங்கத்திற்கு என்ன? அவர்கள் யுத்த வெற்றியை கொண்டாடுகின்றார்கள், அவர்களுக்கான நடைமுறைகளை நடத்துகின்றார்கள் ஆனால் தமிழ் பேசும் மக்கள் யுத்த வெற்றியை கொண்டாடவில்லை. 30 ஆண்டுகள் போராடி தமிழீழ விடுதலைப்புலிகளுடன் எந்தவொரு யுத்தத்தைகூட இலங்கை அரசு வெல்லவில்லை. அவ்வாறு வென்றிருந்தால் அந்த சரித்திரத்தை இலங்கை அரசு கூற முன்வரலாம். இறுதியிலே அப்பாவி பொது மக்கள் முள்ளிவாய்க்காலிலே கொல்லப்பட்டார்கள், போராளிகள் போராடி களத்திலே களப்பலி ஆனார்கள்.
ஆகவே இந்த தருணத்தில் உண்மையில் அரசாங்கம் இன்று போராட்டம் இல்லாது சுமூகமாக நிலையை அடைந்திருக்கிறது. 10 ஆண்டுகளையும் கடந்துள்ள நிலையிலே கடந்த கடந்த ஆண்டுகளிலே மாவீரர் தினம், திலீபனின் தினம் போன்றவற்றை அனுஷ்டிக்க விட்டார்கள் ஆனால் தற்பொழுது இந்த அரசாங்கத்தை பொறுத்தவரையிலே அதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டிருக்கிறார்கள். தியாகி திலீபனுடைய நினைவு தினத்தை கூட அஞ்சலி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
ஆகவே தமிழ் பேசும் மக்களாகிய நாம் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும் எந்த இடர்கள் வந்தாலும் எந்த தடைகள் வந்தாலும் அதனை வெல்வதற்கான அல்லது முன்னோக்கி செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழ் பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் சென்று இதனை அனுஷ்டிப்பதற்கான வியூகங்களை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். அல்லது ஏதோ ஒரு வகையிலே மக்கள் அஞ்சலி செலுத்தப்போகின்றார்கள். பாரியதொரு விளைவை இந்த அரசாங்கம் சந்திக்க நேரிடும் மீண்டுமொரு தமிழ் முறுகல் நிலை தோற்றுவிக்கும் நிலைப்பாடு தோற்றுவிக்கப்படும். ஆகவே இராணுவத் தளபதி மற்றும் இந்த நாட்டில் இருக்கின்றவர்கள் அனைவரும் உணர்ந்து அதற்கான ஒருசெயல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என இந்த இடத்திலே கூறிக்கொள்ள விரும்புகின்றோம். பொறுப்புவாய்ந்த ஜனாதிபதி என்ற வகையிலே அதை அவர் செயற்படுத்த வேண்டும். அதைப்போன்று பிரதமரும் செயற்படுத்த வேண்டும். மாவீரர்களுக்கான அஞ்சலியை செலுத்துவதற்கு அல்லது இறந்த மக்களுக்கான இந்த அஞ்சலியை நினைவுகூறுவதற்கு அதற்கான ஒழுங்குகளை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கொரோனாவுடன்தான் வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் இந்த சமூக இடைவெளிகளை பேணி அதற்கானவொரு வியூகங்களை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் ஒரு வேண்டுகோளாக தினப்புயல் ஊடக நிறுவனம் முன்வைத்துக்கொள்கிறது. ஏனென்றால் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் மிகவும் பயந்துபோயிருக்கின்றார்கள். அடுத்த கட்டம் இந்த நாட்டில் என்ன நடக்கபோகிறது அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் சாத்தியமாகுமா? அல்லது அரசாங்கம் வீழ்த்தப்படுமா? அல்லது தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கான அச்சுறுத்தல்கள் தொடர்கிறது. இன்று கிழக்கு மாகாணத்திலும் கூட ஊடகவியலாளர் நிலாந்தன் அவர்கள் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார், விசாரணை செய்யப்பட்டிருக்கிறார். ஊடக சுதந்திரம் மீறப்படுகிறது. அன்று ஹெகலிய ரம்புகல அவர்கள் ஊடக அமைச்சு வவுனியாவிற்கு வந்தபொழுது ஊடக சுதந்திரம் இருப்பதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ந்தும் இந்த வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. உண்மை செய்திகளை வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் மக்கள் இறந்தவர்களுக்கான அஞ்சலியை செலுத்துவதற்கான நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதை கூறிக்கொள்கின்றோம்.