நாங்கள் பிறேமதாஸவிடம் ஆயுதங்களைப் பெற்றுத்தான் இந்திய இராணுவத்துடன் போர் புரிந்தோம். புலிகளின் முன்னாள் தளபதி

333

பிரேமதாச வழங்கிய 1000 துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு கிழக்கிற்கு செல்லுமாறு பிரபாகரன் பணித்தார் : கருணா

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ….

பிரேமதாச அந்தக் காலத்தில் இராணுவத்தை அதிகளவில் நம்பவில்லை. மாறாக அவர் விசேட அதிரடிப்படையினர் மீதே அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். பிரேமதாசவிற்கு விசேட அதிரடிப்படையினரே பாதுகாப்பினை வழங்கியிருந்தனர்.

புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய விவகாரம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ன உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது.

எமக்கு ஆயுதங்களை வழங்கத் தீர்மானித்த போதும் பிரேமதாச இராணுவத்தினர் ஊடாக ஆயுதங்களை வழங்கவில்லை. அவர் விசேட அதிரடிப்படையினரைக் கொண்டே ஆயுதங்களை வழங்கியிருந்தார்.

விசேட அதிரடிப்படையினர் வழங்கிய ஆயுதங்களை சென்று நானே பொறுப்பேற்றுக்கொண்டேன். பெரிய ட்ரக் வண்டியொன்றில் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை மணலாறு பகுதியில் வைத்து நான் பொறுப்பேற்றுக் கொண்டு தோள்களில் சுமந்து சென்றோம்.

சுமார் 5000 துப்பாக்கிகளும், ரவைகள், தோட்டாக்கள், ஆர்.பீ.ஜீக்கள், கைக்குண்டுகள் உள்ளிட்டன காணப்பட்டன. ஐயாயிரம் துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அப்போது எமது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை (300) வெகு குறைவாக காணப்பட்டது.

ஆயுதங்கள் மட்டுமன்றி பிரேமதாச எமக்கு பெருந்தொகைப் பணத்தையும் வழங்கியிருந்தார். எவ்வளவு பணம் வழங்கினார் என்பது எனக்கு நினைவில்லை.

இந்த ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களுக்கு புலிகளின் தரப்பில் அன்ரன் பாலசிங்கமே தலையீடு செய்திருந்தார். இந்திய அமைதி காக்கும் படையினரை விரட்டியடிப்பதில் பிரேமதாச தீவிர முனைப்பு காட்டி வந்தார்.
இந்திய அமைதி காக்கும் படையினர் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் படையினருடன் இணைந்து நாமும் தாக்குதல் நடத்துவோம் என்பதனை புரிந்து கொண்டனர்.

பிரேமதாசவின் திட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்தியாவும் ஓர் திட்டத்தை வகுத்திருந்தது. தமிழ்த் தேசிய இராணுவம் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பினை உருவாக்கி அரசியல் மற்றும் ஆயுத சக்திகளாக அதனை இந்தியா வளர்த்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை விடவும் அதிகளவான ஆயுதங்களை இந்தியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியிருந்தது.

இலங்கையில் பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு மாதச் சம்பளம் வழங்கப்பட்டது. இந்தியா இந்த சம்பளத்தை வழங்கியது. வரதராஜ பெருமாள் வடக்கு கிழக்கு முதலமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இவ்வாறு சம்பளம் வழங்கப்பட்டது.

இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டு வெளியேறிய போது தாம் இருந்த அனைத்து இடங்களிலும் தமிழ்த் தேசியக் இராணுவத்தை நிலைநிறுத்தி விட்டே சென்றிருந்தனர்.

தமிழ்த் தேசியக் இராணுவம் அப்போது இயங்கிய பல்வேறு அமைப்புக்களை ஒன்றிணைத்திருந்தது. இதனால் அதன் ஆள் பலம் சுமார் 5000 மாக உயர்வடைந்திருந்தது.

1988ம் ஆண்டில் திருக்கோயில் பிரதேசத்தில் எமக்கும் தமிழ்த் தேசிய இராணுவத்திற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. தமிழ் சகோதரர்களே இரண்டாக பிளவடைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த மோதலின் போது உயிரிழந்தவர்களை எண்ணிய போது தமிழ்த் தேசிய இராணுவத்தின் 500க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்ததனை கண்டு கொண்டேன். தமிழ்த் தேசிய இராணுவத்தின் இளைஞர்கள் எம்முடன் இணைந்து கொண்டனர்.

தமிழ்த் தேசிய இராணுவத்தைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், எமது தரப்பில் மிகவும் சொற்பளவு உயிர்ச் சேதங்களே பதிவாகியிருந்தன.

இந்த மோதல்களின் போது நாம் 10000 அயுதங்களை மீட்டிருந்தோம். மாவிலாறு பகுதியிலிருந்த பிரபாகரனுக்கு நான் ஆயுதங்களை அனுப்பி வைத்தேன்.

கரடினாறு பிரதேசத்தில் தமிழ்த் தேசிய இராணுவம் மீது நாம் தொடர் தாக்குதல்களை நடத்தியிருந்தோம், சுமார் எட்டு நாட்கள் சமர் நீடித்தது. நாம் முன்னால் தாக்குதல்களை நடத்திச் சென்ற போது இராணுவப் படையினர் பின்னிருந்து எமக்கு உதவிகளை வழங்கியிருந்தனர்.

எமக்கு துப்பாக்கி தோட்டாக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்ட போது கமால் குணரட்ன உள்ளிட்டவர்கள் எமக்கு தோட்டாக்களை வழங்கியிருந்தனர்.

புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் நட்புறவு காணப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், இரு தரப்பிற்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் காணப்பட்டன.

1987ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தையும், தபால் நிலையத்தையும் எரித்து படையினருக்கு சவால் விடுத்திருந்தனர்.

“இவை தமிழ் மக்கள் கஸ்டப்பட்டு உருவாக்கியவை. இவை அனைத்தும் எமது. இல்லையெனில் அவை யாருக்கும் கிடைக்கக்கூடாது. நாம் வீரசிங்கம் அரங்கையும், தபால் நிலையத்தையும் தீக்கிரையாக்குகின்றோம் முடிந்தால் தடுக்கவும்” என புலிகளின் தலைவர்களில் ஒருவரான ரஹீம் சுபாஸ் ஹோட்டல் தொலைபேசியலிருந்து யாழ்ப்பாண முகாம் ஒன்றுக்கு அழைப்பினை ஏற்படுத்தி கூறியிருந்தார்.

உடனடியாக செயற்பட்ட படையினர் தீயை தடுக்க முயற்சித்த போதிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என கருணா நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

SHARE