நாட்டின் கல்விக் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும் – பிரதமர் ரணில்

392

அறிவால் ஒன்றிணைந்த இளைஞர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக நாட்டின் கல்விக் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நேற்று குளியாப்பிட்டியில் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 200 பாடசாலைகளில் 200 அபிவிருத்தித் திட்டங்களை ஒரே சமயத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

குளியாப்பிட்டிய நகரசபை மைதானத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த வைபவத்தில் நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் அபிவிருத்திசெய்து அவற்றுக்குத் தேவையான வளங்களை பூரணமாகப் பெற்றுக்கொடுப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்று குறிப்பிட்ட பிரதமர் இதனை நாம் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனப் பெயரிட்டுள்ளோம். எந்தவொரு பாடசாலையையும் புறக்கணிக்காமல் சகல பாடசாலைகளுக்கும் வளங்களை சமாந்தரமாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாம் என்ன செய்தோம், என்ன செய்வோம் என்பதை எம்மை விமர்சிப்பவர்கள் விரைவில் கண்டு கொள்ளத்தான் போகின்றனர். சில சந்தர்ப்பங்களில் அதிலும் குறைதேடிக்கொண்டுதான் இருப்பார்கள். அதனையிட்டு நாம் கவலைப்படப் போவதில்லை. எத்தகைய விமர்சனங்களையும் சவால்களையும் கண்டு நாம் அஞ்சப் போவதில்லை.
கடந்த பொதுத் தேர்தலில் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் கல்வித் துறையை மேம்படுத்துவதே பிரதானமானதாகும். அதனை நாம் அமைதியாக முன்னெடுத்தோம். இந்த நாட்டின் பிள்ளைகள்தான் எதிர்காலத் தலைவர்கள். அவர்களை சிறந்த அறிவுபெற்றவர்களாக உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு முன்னெப்போதையும் விட இந்த அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கி வருகின்றது. கல்வித்துறையை நவீனமயப்படுத்தும் செயற்திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றோம்.

சுகாதாரம், வீடு, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி போன்றவற்றுக்கும் போதியளவு நிதியை அரச ஒதுக்கிக் கொடுத்துவருகின்றது. இதற்கிடையில் முன்னைய அரசாங்கம் கண்மூடித்தனமாகப் பெற்ற பெருந்தொகை கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அந்தக் கடன் சுமையை மக்கள் மீது சுமத்த முனையவில்லை. இப்போது கடன் விடயத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம் இவற்றை சாதிப்பதற்கு நவீன அறிவை இளைய சந்ததியினருககுப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

கல்வியில் முன்னேற்றமும், ஆரோக்கியமுள்ள மக்களையும் கொண்டதொரு நாடு தான் செழிப்பான நாடாக மாறமுடியும். எமது உள்ளூர்வளங்களை சரியான முறையில பயன்படுத்த வேண்டும் இதற்கான அறிவைப்பெற்றுக்கொடுக்க நவீன கல்வித்திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உலகின் எந்தவொரு நாட்டிலும் ஒரே தடவையில் 200 பாடசாலைகளை அபிவிருத்தி செய்த சரித்திரம் கிடையாது. எம்மால் முடியும் என்ற இலட்சியத்துடன் பணிகளை தொடங்கியுள்ளோம். எமது இலக்கில் நியாயமான தூரத்தை நாம் கடந்து வந்துள்ளோம். இதனை மேடைபோட்டு தம்பட்டமடிக்க முற்படவில்லை அமைதியாக இலக்கு நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.

வேலை தெரியாதவர்கள், செய்யமுடியாதவர்கள் கூச்சல் போடுகின்றனர். அவர்களின் கூச்சல் எம்மை ஒன்றும் செய்துவிடாது. கல்வியமைச்சர் உட்பட திறமையான இளம் தலைவர்கள் எம்மிடம் உள்ளனர் ஏன்றும் பிரதமர் தெரிவித்தார்.

கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் புத்த சாசன, வடமேல் மாகாண அபிவிருத்தியமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா உள்ளிட்ட பலர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

SHARE