நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் சிறைச்சாலைகளாக உருவாக்க வேண்டிய நிலைமை ஏற்படும்

431

அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தை வீணடிப்பதற்கு அடிப்படைவாத அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது.

அத்தோடு எமது இந்த போராட்டத்திற்கு சிங்கள அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்கவில்லை என்றால் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் சிறைச்சாலையாக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஆளுனர்களான ஹிஸ்புல்லாஹ் , அசாத்சாலி மற்றும் அமைச்சர் ரிஷாத் ஆகியோரை பதவி நீக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்னெடுத்த உண்ணாவிரத போராட்டத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த உண்ணாவிரதத்தை வைத்து வெவ்வேறு பிரதேசங்களில் சிறு பிரச்சினைகளை ஏற்படுத்தி போராட்டத்தைக் குழப்ப சிலர் முயற்சிக்கலாம்.

இதன் மூலம் அவர்கள் எம்மால் தான் பிரச்சினைகள் ஏற்பட்டது என்று ஊடகங்களுக்கு தெரிவிக்கவே சில அரசியல்வாதிகள் இவ்வாறு செயற்படுகின்றனர். இதனை பொது மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த போராட்டம் எம்வசம் உள்ளது. மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதத்துடனேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

எந்த ஒரு வன்முறையும் இன்றி பயங்கரவாத்தை தோற்கடிப்போம். அதனையும் மீறி வன்முறைகள் இடம்பெற்றால் அது முதலில் எம்மையே தாக்க வேண்டும். எனினும் இந்த போராட்டத்தை சாதாரணமாக செய்யக் கூடாது.

மிகவும் புத்தி கூர்மையுடன் சிந்தித்து அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். நாட்டுக்காக போராடும் எதிர்கால சந்ததியினருடன் நாம் இந்த போராட்டத்தை முன்னெடுப்போம்.

எந்தவொரு அரசியல்வாதிக்கும் இதை வீணடிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. எம்மை மீண்டும் சிறையிலடைக்க முடியும். அது எமக்கொரு பிரச்சினை கிடையாது. இந்த பயங்கரவாதத்தை தோற்கடிக்க எம்முடன் கைகோர்க்கும் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் , எந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அது குறித்து எமக்கு கவலையில்லை.

ஆனால் ஒரே கூட்டணியாக எமது போராட்டத்திற்கு சிங்கள அரச தலைவர்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவில்லை என்றால் ஒரு சிறைச்சாலை அல்ல, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் சிறைச்சாலைகளாக உருவாக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.

SHARE