நாட்டில் இன முரண்பாடுகளை ஏற்படுத்தி பாடசாலைகளை முழுமையாக மூடுவதற்கு சில தரப்பினர் திட்டம்

373

நாட்டில் இன முரண்பாடுகளை ஏற்படுத்தி பாடசாலைகளை முழுமையாக மூடுவதற்கு சில தரப்பினர் முயன்று வருவதாக புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

பாதுகாப்பு அச்சுறுத்தலை மக்கள் மத்தியில் அதிகரிப்பதன் மூலம் இந்த செயற்பாட்டை முன்னெடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தி அனைத்து நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கு குறித்த நபர்கள் மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக இது உள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய மிகவும் வெற்றிகரமான வேலைத்திட்டத்திற்கு மத்தியில் ஒரு வார காலமாக பாடசாலைகளில் சுமுகமாக நடத்திச் செல்லப்படுகின்றன. இதில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரியவந்துள்ளதென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் மத்துகம பிரதேச பாடசாலை ஒன்றில் பழைய கைக்குண்டு பொதி ஒன்றை வைத்து அந்த மாகாண பாடசாலைகளை மூடுவதற்கு முயற்சிக்கப்பட்டது.

அந்த முயற்சியில் தோல்வி ஏற்பட்டதனை தொடர்ந்து வேறு பிரதேசங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி பாடசாலைகளை மூட முயற்சிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்றைய தினம் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு பிரதேசங்களில் மீண்டும் வதந்திகளை பரப்பி பெற்றோரை குழப்பமடைய செய்துள்ளனர்.

இந்த வதந்திகளை நம்பிய பெற்றோர் நேற்று பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களை அழைத்துவர முயற்சித்துள்ளனர். எனினும் பாதுகாப்பு பிரிவினரால் அந்த முயற்சி தடுக்கப்பட்டு பெற்றோருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

SHARE