நாட்டில் கலவரத்தை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மஹிந்த தரப்பு முயற்சிக்கின்றதா?

322

மட்டக்களப்பு வவுனதீவுப் பொலிசார் மீதான துப்பாக்கி பிரயோகத்தைத் தொடர்ந்து முஸ்லீம் – சிங்களப் பிரச்சினைகள், இனவாதக் கருத்துக்கள் என இவை அனைத்தும் இலங்கையின் இறையான்மைக்கு ஒவ்வாத விடயங்கள் ஆகும். போருக்கு முன்னரான காலப்பகுதிகளில் சமாதானத்தை நோக்கிப் பயணித்த இலங்கை, அதற்குப் பின்னரான காலப் பகுதிகளில் மத, இன வெறிகளைத் தூண்டி குழப்பங்களை உருவாக்க அரசு முற்படுகின்றது. இதற்கான தடுப்பரண்களாக, தம்மைப் பாதுகாத்துக் கொள்ள சிறுபான்மைக் கட்சிகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது. இதற்குத் தொடர்ந்தும் தமிழ்ப் தரப்புக்கள் துணைபோவார்களாக இருந்தால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தில் பாரிய பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பல்லாயிரக்கணக்கான போராளிகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக தம் உயிரை அர்ப்பணித்திருக்கின்றார்கள். கிழக்கு மாகாணப் போராளிகள் வன்னியிலும், யாழ் மாவட்டத்திலும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர். ஆயுதப் போராட்டம் தற்பொழுது மௌனிக்கப்பட்டதன் பின்னர் 2009ம் ஆண்டு காலப் பகுதிகளில் சரணடைந்த அல்லது புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகள் மீண்டும் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மட்டும் 11000 போராளிகள் புனர்வாழ்வு அழிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இத்தகையதொரு சூழ்நிலையில் இப்போராளிகளுடைய நிலைமை கேள்விக்குறியாகவுள்ளது. மட்டக்களப்பு, வவுனதீவு விடயத்தைப் பொறுத்தவரையில் வலையிறவு, புல்லுமலைக்குச் செல்லுகின்ற ஒரு பிரதான பாலமாக அமைகின்றது. வவுனதீவு படைமுகாம் தமிழீழ விடுதலைப்புலிகளினால் 2000ம் ஆண்டுக்கு உட்பட்ட காலப்பகுதியில் இரண்டு தடவைகள் தாக்கி அழிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் அந்தப் படைமுகாம் புனரமைக்கப்பட்டு இருந்தபொழுதிலும் யுத்த காலத்தின் பின்னர் இம் முகாம் அகற்றப்பட்டது. இக்காலகட்டத்தின் பொழுது அப்பகுதிகளில் சென்று வருகின்ற மக்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். குறித்த காப்பரன் பகுதிகளில் ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் போன்ற ஆயுதக்கட்சிகளின் உறுப்பினர்கள் காவல் கடமையில் இருந்து வந்தனர். வவுனதீவு பிரதேசத்தில் இருந்து வருகின்றவர்களைக் காட்டிக் கொடுப்பவர்கள் இவர்களே. இக்காலகட்டத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு பலமாக செயற்பட்டு வந்தனர்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இருந்து ஒரு படைநகர்வும், வவுனதீவு செங்கலடிப் பிரதேசத்திலிருந்து ஒரு படைநகர்வும், மண்டூர் பிரதேசத்திலிருந்து ஒரு படை நகர்வும் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் நகர்த்தப்பட்டது. இப்பிரதேசங்களில் வாழக்கூடிய பெரும்பான்மையான மக்கள் மாவீரர் குடும்பங்களாகவே இருந்து வருகின்றார்கள். ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படுகின்ற பொழுது, பலஸ்தீனத்தில் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதுபோல் ஒரு நிலைமைதான் இம் மக்கள் மீதும் திணிக்கப்படும். அது போன்றே வட-கிழக்கு மக்கள் மீதும் திணிக்கப்படலாம்.

இராணுவத்தரப்பும் பொலிஸ் தரப்பும், புலனாய்வுத் தரப்பும் இம் மக்களை மிரட்டும் ஒரு செயற்பாட்டில் களமிறங்கியுள்ளது. முன்னால் விடுதலைப்புலிகளின் இராணுவக்கட்டளைத் தளபதியாக இருந்த கருணாம்மான் கொலைகளின் பின்னணியில் இருப்பதாக வதந்திகள் பரப்பப்படுகின்றது. இக்கொலைகளின் பின்னணியில் கருணா தரப்பு இருப்பதாக நேரடியாகவே அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபொழுது தமது பெயரைப் பயன்படுத்தி தமது அமைப்பின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பலர் செயற்படுகின்றார்கள். இதற்கு நாம் ஒரு போதும் அஞ்சப்போவதில்லை. சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். விடுதலைப்புலிகளுடைய போராட்டத்தை மையப்படுத்தியே சிங்கள ஆட்சியாளர்கள் தமது இருப்பினைத் தக்கவைத்துக் கொண்டிருந்தார்கள். தற்பொழுது அவர்களுக்கு சரியான தலைமை இல்லாத காரணத்தினால் தமது அரசியல் இருப்பை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வதென்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தம்மோடு இணைந்துக்கொண்டு பயணிப்பதற்கான முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசியல் தீர்வினைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதாக கூறுகின்ற அரசாங்கம் யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்துமே தாமதிக்கின்றது. என்ற கேள்வி சர்வதேச மட்டத்தில் எழுப்பப்பட்டிருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய முன்னால் தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இருந்தாலும் விடுதலைப்புலிகளின் முன்னாள் இராணுவக் கட்டளைத் தளபதி கருணாவை வைத்து ஒரு இராணுவக்கட்டமைப்பை உருவாக்கி அவர்களை போராட்டக்களத்தில் மறைமுகமாக ஈடுபடுத்த முடியும். பெரிதும் பேசப்படுகின்ற மக்களம் மாஸ்டர், வீரா, பிள்ளையான், இனியபாரதி, பிரதீப் மாஸ்டர், போன்றவர்களினால் சிறந்ததொரு இராணுவக் கட்டமைப்பையோ, ஒரு போராட்டத்தையோ முன்னெடுத்துச் செல்லமுடியாது. ஆகவே தான் கருணா மீது நடவடிக்கை எடுத்து அவர்களினது செயற்பாடுகளை முடக்குவதன் ஊடாக அரசாங்கம் தமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள ஏதுவான விடயங்களை செய்ய முனைகின்றது. 1990ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து 2004 காலப்பகுதி வரை விடுதலைப்புலிகளின் இராணுவத் தளபதி கருணா அவர்களின் சாதனைப் பட்டியல்கள் ஏராளம். ஒரு இராணுவக் கட்டுக்கோப்புடன் இருந்து செயற்பட்ட கருணா அவர்களை அன்று உல்லாச வாழ்க்கையைக் கொடுத்து, போராட்டத்தினுடைய சிந்தனையிலிருந்து விலகிச் செல்வதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு கட்டுரைகளை எழுதுவதினால் கருணாவை ஆதரிப்பது என்று அர்த்தமல்ல, உண்மையான நிலைப்பாடும் அதுவே. பிரபாகரனுடைய தலைமையில் ஏனைய இயக்கங்களை ஒன்று சேரவிடாது பிரிந்து சென்றமைக்கு காரணமென்றால் தற்பொழுது இருக்கக் கூடிய தலைவர்கள் ஏன் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தக்கூடாது. தேசியம், சுயநிர்ணய உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரையிலாவது நாம் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

பொலிசாரைக் கொல்வதனூடாகவோ அல்லது இராணுவத்தை கொல்வதனூடாகவோ தமிழர்களது தேசியப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்பது அர்த்தமல்ல. ஒரு தரப்பு அரச தரப்புடன் வலுவாக நிற்கவேண்டும். அப்பொழுது தான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்கின்ற விடயத்தில் ஒரு முடிவு எட்டப்படும். கிழக்கு மாகாணத்தினுடைய சூழல் அமைப்பைப் பொறுத்தவரையில் கடல் ஆறுகள் சேர்ந்த ஒரு நிலப் பரப்பாகும். இந்த நிலப்பரப்பில் தாக்குதல் ஒன்றைச் செய்து விட்டு தப்பிச் செல்வதற்கான பல வழிகள் இருக்கின்றது. எல்லா வழிகளையும் காட்டிக் கொடுத்தது யார்? குற்றம் உள்ள மனம் தற்பொழுது இவர்களுக்கு குறு குறுக்கிறது. வௌ;வேறு காலகட்டங்களில் தமிழ் மக்களினுடைய போராட்டம் என்பது பரிணாம வளர்ச்சியைக் கண்டு வந்தபோதிலும் அதற்கு ஈடுகொடுக்க முடியாத சிங்களப் பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது பாரிய போர் ஒன்றைக் கட்டவீழ்த்துவிட்டுள்ளது. இப்போராட்டமானது முப்பது வருடங்களாகத் தொடர்ந்து. இறுதியாக தமிழ் இனத்தை அழித்தொழிக்கவேண்டும் என்றதொரு நிலைப்பாட்டில் மாவிலாறில் ஆரம்பித்த போர் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது.

ஒரு குழுவாகவோ, இனமாகவோ அழிக்கப்பட்டால் அது இனப்படுகொலை. இதுவே இந் நாட்டில் இடம்பெற்றது. அதற்கான ஆதாரம் இருக்கின்றது. தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கு சிங்களப் பேரினவாதத்தால் கருத்தடை மாத்திரைகள் வன்னிப் பிராந்தியத்தில் வழங்கப்பட்டுமிருந்தது. ஆகவே மீண்டும் ஒரு போராட்ட சூழ்நிலை ஏற்படுத்துவதற்காக தமது ஆட்சி இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் சிறுபான்மை இனத்தைப் பயன்படுத்தி வருகின்றார்கள். இது மாற்றப்படவேண்டும் அல்லது மாற்றி அமைக்கப்படவேண்டும்.

SHARE