2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் ஆஜென்ரின அணியை வெற்றி கொண்டதன் மூலம், நான்காவது தடவையாக ஜேர்மனி அணி சம்பியனாக மகுடம் சூடியது.
றியோ டி ஜெனீரோவிலுள்ள மரக்கானா விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 1 – 0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி அணி வெற்றிபெற்றது.
இதன்மூலம் தென் அமெரிக்க நாடொன்றில் உலகக் கிண்ண சாம்பியன் பட்டத்தை வென்றெடுத்த முதலாவது ஐரோப்பிய அணியாக ஜேர்மனி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
போட்டியின் முழு நேரத்தில் எந்தவொரு அணியாலும் கோல் போட முடியாமற்போக, வெற்றியைத் தீர்மானிப்பதற்கு மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
போட்டியில் கோல் போடக் கிடைத்த சிறந்த வாய்ப்புக்களை இரண்டு அணிகளும் தவறவிட்டிருந்தன.
எனினும் கோல் இயந்திரம் என வர்ணணையாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மரியோ கொட்சா மேலதிக நேரத்தில் 23 ஆவது நிமிடத்தில் ஜேர்மன் அணி சார்பாக வெற்றிகான கோலைப் போட்டிருந்தார்.
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் அதிகளவு கோல்களைப் போட்ட வீரர் என்ற சாதனையை இம்முறை நிலைநாட்டியுள்ள ஜேர்மனியின் மிரோஸ்வெல் க்ளோசிற்கு பதிலாக 88 ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக கொட்சா களமிறக்கப்பட்டிருந்தார்.
நான்கு முறை சிறந்த வீரருக்கான விருதை வெற்றிகொண்ட ஆஜென்ரீனா அணித் தலைவர் லியனோல் மெஸீ மீது அதிகமானவர்களின் கவனம் இருந்தபோதிலும், இறுதிப் போட்டியில் அவரால் கோல் எதனையும் போட முடியவில்லை.
இம்முறை உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் சிறந்த கோல் காப்பாளருக்கு வழங்கப்படும் கோல்டன் க்ளவ் விருதை ஜேர்மனியின் மெனுவல் நோயரும், சிறந்த வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் போல் விருதை ஆஜென்ரின அணித் தலைவர் லியோனல் மெஸியும் வெற்றிகொண்டனர்
அதிக கோல்களை அடித்த வீரருக்காக வழங்கப்படும் கோல்டன் பூட் விருதை கொலம்பியாவின் இளம் வீரர் கமேஸ் ரொட்ரிக்கஸ் தன்வசப்படுத்தினார்
இம்முறை உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் 171 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
2018 ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெறவுள்ளன.
TPN NEWS