நான்கு பிள்ளைகளின் தந்தை பலி

371

மதுரங்குளி நகரிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்ற பஸ் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் அந்நபர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பிரிவுக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்தார்.

மதுரங்குளி ஹிதாயத் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவராவார்.

நேற்று மாலை புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் கரிக்கட்டை ஹிதாயத்நகர் பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் மதுரங்குளி நகரிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் உள்வீதியில் திரும்பும் போது புத்தளம் திசையில் வேகமாக சென்ற தனியார் பயணிகள் பஸ் அவரது மோட்டார் சைக்கிளுடன் மோதியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் பலத்த காயத்திற்குள்ளான நபர் புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்துள்ளார்.

இன்று  இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் விபத்தின் போது நெஞ்சில் ஏற்பட்ட பலத்த காயங்களால் ஏற்பட்ட மரணம் என தீர்ப்பை வழங்கி சடலத்தை உறவினர்களிடம் வழங்கியதாக திடீர் மரண விசாரணை  அதிகாரி ஹிசாம் தெரிவித்தார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியைக் கைது செய்துள்ள முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE