பலர் சொல்கிறார்கள் கருணா துரோகி, பயத்தில் யுத்தத்தை நிறுத்தினார் என. ஆனால் உண்மை அதுவல்ல. நான் பயத்தில் யுத்தத்தை நிறுத்தவில்லை. எனது மக்கள் வாழவேண்டும் என்பதற்காகவே யுத்தத்தை நிறுத்தினேன் என்கிறார் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன். மட்டக்களப்பு போரதீவுப்பற்று மாதர் கிராமஅபிவிருத்திசங்கங்களிற்கு உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றம் போது, இன்று இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்தவர்கள் எலியாகப் பயந்து பொந்திற்குள் புகுந்து கொண்டபோது, மட்டக்களப்பிலிருந்து நான் சென்றுதான் அவர்களை புலியாக்கினேன். அந்தப்பெரிய ஆனையிறவு தளத்தையே இரண்டுநாளில் பிடித்தேன். எனவே நான் பயந்துதான் பின்வாங்கியதாக யாரும் நினைக்க வேண்டாம். இனியும் உயிரிழப்புக்களை பொறுத்துக் கொள்ள முடியாதென்பதாலேயே பின்வாங்கினேன் என்றார்.
அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் சிங்களவர் ஒருவர்தான் ஜனாதிபதியாக வருவார் அவர் எமது மாமாவோ, சொந்தக் காரராகவோ இருக்கமாட்டார். எனவே வெல்லக் கூடியவருக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ் மக்களோ, முஸ்லிம் மக்களோ வாக்களிக்கா விட்டாலும், நிச்சயம் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸதான் மீண்டும் ஜனாதிபதியாக வருவார். ஏனெனில் 90 வீதமான சிங்கள மக்கள் அவர் பக்கம்தான் நிற்கின்றார்கள், தோல்வியடையும் வேட்பாளருக்கு வாக்களித்து பழகிய தமிழர்கள், இனிமேலும் தோல்வியடையும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் எண்ணமிருந்தால் வாக்குச்சாவடிப்பக்கமே தலைவைத்தும் படுக்கக்கூடாது என்றார்.