முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணுவ சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ள போதும் அவர்கள் மகிந்தவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவினது அடியாட்களென கண்டறியப்பட்டுள்ளது.
நாமலினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளையடுத்தே அவர்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இராணுவ சேவையில் இணைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை இராணுவ தொண்டர் படையணியில் பயன்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தில் தமிழ் பெண்களை இணைக்கும் முயற்சிகளில் இலங்கை அரசு ஈடுபட்ட போதும் அது படுதோல்வியினை சந்தித்திருந்தது. அத்துடன் கடும் விமர்சனங்களும் எழுந்திருந்தது.
இதையடுத்து இராணுவத்திற்கு தொண்டர் படையணியெனும் பேரில் ஆட்களை திரட்ட முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளும் படுதோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் எவ்வாறேனும் ஆட்திரட்டலை செய்ய முற்பட்டுள்ள இலங்கை அரசு, நாமலின் முல்லைத்தீவு அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களென ஆட்களை பிடிக்கத் தொடங்கியுள்ள தகவல் அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.