தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு 500 விக்கெட் வீழ்த்தி சாதித்ததற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கௌரவித்துள்ளது.
500 விக்கெட்டுகள்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் 500 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனையைப் படைத்தார்.
அதிலும் குறிப்பாக 100 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டி ஜாம்பவான் முரளிதரன் சாதனையை முறியடித்தார்.
இந்த நிலையில் அஸ்வினின் சாதனையை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அப்போது 500 விக்கெட்டுகள் என்பதை குறிக்கும் வகையில், 500 தங்க நாணயங்களால் அலங்கரிப்பட்ட நினைவுப்பரிசு, ஒரு கோடி ரூபாய் மற்றும் செங்கோல் அஸ்வினுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
அஸ்வின் நெகிழ்ச்சி
விழாவில் அஸ்வின் பேசும்போது, ”2008யில் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது. பல கோடிகள் முதலீட்டுடன் சென்னை அணி உள்ளே இறங்கியது. அந்த அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அப்போது நான், இந்தியா சிமெண்டிற்கு எதிரான போட்டி ஒன்றில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தேன்.
அன்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவில், அஸ்வினை CSK அணியில் எடுக்கிறோம் தானே? எடுத்துவிட்டீர்களா? என கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சென்னை அணி நிர்வாகி ஒருவரை கேட்டுவிட்டார். அங்கிருந்து தான் எனது பயணம் தொடங்கியது.
அந்த அளவுக்கு முக்கியமான தருணம் அது. நாளை நான் உயிரோடு இல்லையென்றாலும் என்னுடைய ஆன்மா இந்த சேப்பாக்கத்தை சுற்றிக்கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு இந்த இடம் எனக்கு முக்கியமானது” தெரிவித்தார்.