திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்கள் மீண்டும் இன்று (டிச. 26) இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் 13 வயது மகனும் உடன் அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இலங்கை சென்றனர்.
இந்த விவகாரத்தில் தங்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அனுப்புவதாக, பிபிசி தமிழிடம் பேசிய அந்தப் பெண் தெரிவித்திருந்தார். முதலமைச்சரின் தனிப்பிரிவில் அதுகுறித்து முறையிட்டும் சட்டவிரோதமாக இந்நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்தார், அப்பெண்ணின் வழக்கறிஞர்.
இலங்கையில் இவர்கள் மீது பல கோடி ரூபாய் நிதி மோசடிப் புகார் உள்ளதால், உரிய நடைமுறைகளின்படியே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார், முகாமின் துணை ஆட்சியர்.
திருச்சி முகாமில் உள்ள இந்தத் தம்பதி மீது இலங்கையில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்ன?