நிபுணர் ஜகாங்கரின் கருத்துகள் வருத்தமளிக்கிறது ஐ.நாவின் இரகசிய விசாரணையை ஏற்க முடியாது! -இலங்கை அரசு

495
gl

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து இரகசிய விசாரணை நடத்தப்படுவதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள மூன்று நிபுணர்களில் ஒருவரான அஸ்மா ஜஹாங்கீர் வெளியிட்டு வரும் தொடர்ச்சியான கருத்துகள் வருத்தமளிப்பதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

1346226737 lonx100_srilanka-war-_0420_

ஐ.நா விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விபரங்களை வெளியிடுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் மறுத்திருந்தார்.

இதுகுறித்துக் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர், ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விசாரணையை மேற்கொள்பவர்கள் யார் என்று தெரியாமல் எவ்வாறு அந்த விசாரணை மீது நம்பிக்கை வைக்க முடியும்? இந்த அநாமதேயமான விசாரணைக்குழு, ஒரு வேளை, கங்காரு நீதிமன்றத்தை விடவும் மோசமானதாக இருக்கலாம். எனவே இலங்கை அரசாங்கம் இதனைப் புறக்கணிக்கும்.

குறைந்தபட்சம் விசாரணையை மேற்கொள்பவர்களின் அடையாளங்கள் கூட வெளிப்படுத்தப்படாத நிலையில், இலங்கையின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பது அபத்தம்.

ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள மூன்று நிபுணர்களில் ஒருவரான அஸ்மா ஜஹாங்கீர் வெளியிட்டு வரும் தொடர்ச்சியான கருத்துகள் வருத்தமளிக்கின்றன. அவரது நோக்கங்கள் தீவிரமான கவலை அளிக்கின்றன. அவர் இலங்கையை இலக்கு வைத்து தனிப்பட்ட முறையில் பரப்புரைகளில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.

போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகளை, அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி சீர்குலைக்க முனைகிறது. ஆனால் குறைகளைக் களைய இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை அனைத்துலக சமூகம் புறக்கணிக்க முடியாது.

உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தவே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்று அனைத்துலக நிபுணர்களை நியமித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவை வெளிநாட்டு அமைப்பு என்று திரிபுபடுத்துவது தவறு. உள்நாட்டு செயல்முறைகளுக்கு ஆதரவளிப்பதே அதன் நோக்கம். உள்நாட்டு பொறிமுறைக்குள் தான் அது இருக்கும்.

எந்தவொரு சூழ்நிலையிலும், இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறையை அனுமதிக்காது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

 

SHARE