நிறைவேற்று அதிகாரம் (executive power) வலுவானதொரு கட்டமைப்பை உருவாக்குவதில் புலிகளும் ரணில் அரசும் தோல்வி கண்டனர் ‘தராக்கி’ சிவராம்

544

“நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்-ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்


படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் நினைவுதினம் இன்று [29 April, 2005 ]ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும், பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார்.

இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்…” என்று வீரகேசரி வார வெளியீட்டில் சிவராம் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை கணினி யுகத்திற்குள் கொண்டுவந்த பெருமையும் சிவராமையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாமனிதர் சிவராமின் இறுதிக் கட்டுரை

சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவராம் அவர்கள் 24.04.2005 அன்று வெளியான வீரகேசரி வாரஇதழில் ‘எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும் தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் முழுவடிவம். இக் கட்டுரையே அவர் எழுதிய இறுதிக் கட்டுரையாகும்.

எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும்
தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்

– தராக்கி டி.சிவராம் –

8நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். போகிறார். அவர் வரும்போதும் போகும்போதும் தமிழ் ஊடக ஆரவாரம் ஒன்று கிளம்பும். அது மக்களிடையே ஏதோ நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை மீண்டும் ஏற்படுத்தும். அவர் வந்த வழியே திரும்பிப் போவார். ஊடக ஆரவாரங்கள் அடங்கும். பின்னர் வழமைபோல அதுää இது என்று எமது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும். சொல்ஹெய்ம் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு நல்ல மாற்றம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டாக்கக்கூடிய வகையில் அறிக்கை விடுகிறார். அல்லது செய்தியாளர்களுக்குக் கருத்துச் சொல்கிறார்.

இன்னும் சில கிழமைகளில் சுனாமிப் பொதுக்கட்டமைப்பு வந்துவிடும் என அவர் இம்முறை இங்கு வருவதற்கு முன்னர் ஒரு வெளிநாட்டுச் செய்தி நிறுவனத்திற்குச் செவ்வி கொடுத்திருந்தார். அது மட்டுமன்றி புலிகளின் மட்டு-அம்பாறை படைத் தளபதி பானுவைச் சந்தித்த பின்னர் பொதுக்கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென்று சிறிலங்கா அரசும்ää விடுதலைப் புலிகளும் மிக ஆர்வத்துடன் இருப்பதாக அவர் அழுத்திக் கூறினார்.

பொதுக்கட்டமைப்பு கிடைக்கப்போவதில்லை. ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் சிறிலங்காவின் அரசியல் நுனிப்புல் மேய்ந்தவர்களுக்குக்கூட மிகமிக அப்பட்டமாகப் புரிந்திடக்கூடிய உண்மையாகும். இதில் யாருக்கும் இம்மியளவும் சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக பொதுக்கட்டமைப்பு வழங்கப்பட்டால் தாம் சந்திரிகாவின் அரசிலிருந்து வெளியேறிவிடுவோம் என ஜே.வி.பி மிகத் தெளிவாக அமெரிக்கப் பிரதிநிதி கிறிஸ்ரினா ரொக்காவிடம் கூறிவிட்டது.

இங்கு நாம் சொல்ஹெய்ம்மைக் கடிந்து கொள்ளமுடியாது. எம்மை இலவு காத்த கிளிகளாக்கும் நோக்குடன்தான் அவர் இங்கு வருகிறார் என்றோää சந்திரிகா அரசு எமது காதில் வழமைபோல் பூச்சுற்றுவதற்கு அவர் மலர் கோத்துக் கொடுக்கிறார் என்றோ நாம் அவரைக் கண்டனம் பண்ண முடியாது. ஏனெனில் அவர் எமது உடன்பாட்டுடனேயே இலங்கையின் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான அனுசரணையாளராக அமர்த்தப்பட்டார். ஏதோ ஒரு தீர்வோ அல்லது அதைநோக்கிய முன்னேற்றமோ வருகிறது என்றுதான் அவர் சொல்வார். சொல்ல முடியும். அவருடைய கதையில் எடுபட்டு பேயராகுவதா இல்லையா என்பது எம்மைப் பொறுத்தது.

பொதுக்கட்டமைப்பு ஏற்படுத்துமாறு பல வெளிநாடுகள் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. புலிகளின் தடையை நீடித்து வரும் அமெரிக்காகூட இதையே வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி பொதுக்கட்டமைப்பு சரிவராவிடின் புலிகளுக்கு நேரடியாகவே உதவி வழங்குவதற்கான ஏற்பாடொன்று உண்டாக்கப்படல் வேண்டுமென சில நாடுகள் கருதத் தலைப்பட்டுள்ளன. இதைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசிற்கு நேரடியான எந்த வழியும் தற்போது இல்லை.

எனவே இக்கட்டமைப்பு உண்டாக வேண்டும் என்பதில் தானும் அக்கறையாக இருக்கிறேன் என சிறிலங்கா அரசு அறிக்கை விடுகிறது. அக்கறையாக இருக்கிறோம் ஆனால் சில விடயங்களைப் பேசி முடிவெடுக்க வேண்டியிருக்கிறது எனக் கூறிக்கொண்டிருந்தால் காலம் எப்படியாவது உருண்டோடி விடும். அந்த ஓட்டத்தில் உதவி வழங்கும் நாடுகளும் புலிகளும் தமிழ் மக்களும் பொதுக்கட்டமைப்பு என்ற விடயத்தை வழமைபோல மறந்துவிடுவார்கள் என சிறிலங்கா அரசு கணக்குப் போடுகிறது. சொல்ஹெய்மினுடைய வருகைகளும் கூற்றுக்களும் இந்தக் கணக்கிற்கு மிகவும் வலுச்சேர்க்கின்றன.

ThalaiAttendSurya_sSistersMarriage1வடக்குக் கிழக்கின் உடனடி மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றுவதற்கென ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது ( Sihrn) உங்களுக்கு ஓரளவு ஞாபகம் இருக்கும் அதையும் அதன் பின்வந்த சில ஒழுங்குகளையும் சிறிலங்கா அரசு இப்படித்தான் பம்மாத்திற்று. அப்போதும் சொல்ஹெய்ம் வந்து போனார். இரு தரப்பும் ஏதோவொரு உடன்பாட்டை அண்மித்துக் கொண்டிருப்பதாக அறிக்கை விட்டார். அவருடைய ஒவ்வொரு வருகையையும் விழுந்தடித்துக்கொண்டு எமது ஊடகங்கள் ஆரவாரப்படுத்தின.

(இதில் தமிழ்நெற்றும் விதிவிலக்கல்ல) நடந்ததோ ஒன்றுமில்லை. மாறாக தமிழ் பேசும் மக்களை பேய்க்காட்டிக்கொண்டு அவர்களை ஒற்றையாட்சி அமைப்பிற்குள் வாழப்பழக்குவதற்கு சொல்ஹெய்மின் வருகைகளும்ää அதையொட்டி எழும் எதிர்பார்ப்புக்களும் அரிய வாய்ப்பாக அமைந்தன அமைகின்றன.

ஏலவே கூறியதுபோல இதில் நாம் நேர்வேயையோ அதன் சிறப்பு தூதுவரையோ குற்றஞ்சாட்டவும் முடியாது. குறை கூறவும் முடியாது. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். இதில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற கேள்வி உடனே தோன்றும். முதலாவது சொல்ஹெய்மின் வருகையைச் சுற்றி உண்டாகும் ஊடக ஆரவாரத்தில் மக்கள் அறிந்திருக்க வேண்டிய சில அடிப்படை உண்மைகள் அடிபட்டுப் போகின்றன.

இந்த உண்மைகள் மறைந்துபோவது நுட்பமாகச் செயற்படும் சிங்கள மேலாண்மையாளர்களுக்கு மிக வாய்பாகிவிடுகிறது. ஏன்? பொதுக்கட்டமைப்பு விடயத்தை எடுத்துக்கொள்வோம். வாழ்விட அழிவுகள்ää இடப்பெயர்வு அகதிகள் என்பவற்றை பற்றியதே இந்தப் பொதுக்கட்டமைப்பாகும். இந்த மூன்றையும் எப்படி எதிர்கொள்வது எப்படி இவற்றிற்குத் தீர்வு காண்பது என்பது பற்றியதாகவே புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நடைபெற்ற ஆறுசுற்றுப் பேச்சுக்களும் அமைந்திருந்தன. நடந்ததென்ன? ஒன்றுமேயில்லை.

வாழ்விட அழிவுகளைச் சரிசெய்வது என்றாலோ இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்துவது என்றாலோ தேவைப்படுவது முதலில் நிலம். பின்னர் பணம். இவையிரண்டுமே சிறிலங்கா அரசின் அசைக்கமுடியாத கட்டுப்பாட்டில் உள்ளன.

நிலத்தையும் நிதியையும் இவையிரண்டையும் உரிய முறையில் பயன்படுத்துவதற்குத் தேவையான நிறைவேற்று அதிகாரத்தையும் (executive power) எந்தவொரு கட்டமைப்பிற்கும் பகிர்ந்தளிப்பதை சிறிலங்காவின் அரசியல் யாப்பு தடைசெய்கிறது. இதனாலேயே போரில் அழிந்துபோன எமது வாழ்விடங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும் எந்தவொரு வலுவானதொரு கட்டமைப்பை உருவாக்குவதில் புலிகளும் ரணில் அரசும் தோல்வி கண்டனர்.

இவ்வாறான ஒரு கட்டமைப்பு சிறிலங்கா சட்டத்திற்கு முரணானதாக இருக்கும் என அப்போது சிங்களச் சட்டவல்லுனர்கள் சுட்டிக்காட்டினர். அதுமட்டுமின்றி அப்படியொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டால் அதை சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்க வேண்டுமென சில சிங்கள மேலாண்மையாளர்கள் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினர். இவையெல்லாம் ரணில் அரசுக்கு நல்ல சாட்டாகிவிட்டன.

சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்பதும் வாழ்விட அழிவுகள் இடப்பெயர்வு அகதிகள் என்பவை பற்றியதே. எனவே அதை ஏற்படுத்துவதில் மேற்கூறிய அடிப்படை முட்டுக்கட்டைகள் உண்டாகுவதை எவ்வகையிலும் தடுக்க முடியாது. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்பது வெறுமனே வெளிநாட்டு உதவிப் பணத்தைப் பெறுவது மட்டுமல்ல.

அது அடிப்படையில் நிலம் பற்றியதாகும். மக்கள் குடியமரும் இடங்களுக்கு மின்சாரம் நீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பது பற்றியதாகும். இவற்றைவிட மேலாக மேற்படி அலுவல்களைச் செய்வதற்கான அதிகாரம் பற்றியதாகும் இந்த சுனாமிப் பொதுக்கட்டமைப்பு விடயமாகும்.

UDசிறிலங்காவின் அரசியல் யாப்பு முற்றாகத் தூக்கியெறியப்படாமல் ஒரு வலுவுள்ள சுனாமிப் பொதுக்கட்டமைப்பு எப்படி சாத்தியம் என்பது கேள்விக்குறி. இதனாலேயே சிறிலங்கா அரசு சுனாமிப் பொதுக்கட்டமைப்பு விடயத்திலும் மிக நுட்பமாகப் பம்மாத்து விடத் தொடங்கிவிட்டது. இந்தப் பேய்க்காட்டலுக்கு சொல்ஹெய்மின் வருகைகளும் அறிக்கைகளும் வலுச்சேர்க்கின்றன என்பதுதான் இங்கு மீண்டும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இதில் இருக்கும் ஒரு பேராபத்தைப் பலரும் கவனிக்கத் தவறுகின்றனர். 1976 இலேயே நாம் தனித் தமிழ் ஈழமே எமது சிக்கலுக்கு ஒரே தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு அன்று எமக்கிருந்த காரணங்களைவிட இன்று 29 ஆண்டுகள் கழித்து மிக வலுவான காரணங்கள் காணப்படுகின்றன. ஆனால் அப்போதிருந்த அரசியல் ஒருமைப்பாடுää வெகுசன எழுச்சி முனைப்பு என்பன இன்று மழுங்கிக் காணப்படுகின்றன.

அது மட்டுமன்றி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எமது மக்களிடையே இருந்த அரசியல் முனைப்பும் எழுச்சியும்கூட மழுங்கிக் காணப்படுகின்றன. அது மட்டுமன்றி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எமது மக்களிடையே இருந்த அரசியல் முனைப்பும் எழுச்சியும்கூட மழுங்கிப் போவதை நாம் காண்கிறோம்.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன. காலத்திற்குக் காலம் ஏதோ ஒரு தீர்வு வரப்போகிறது என ஏற்படுத்தப்படும் எதிர்பார்ப்புகளும் இதில் ஒன்று என்பதுதான் உண்மை. நாங்கள் பேயராக்கப்படுகிறோம் என்ற தன்மான உணர்வு மமக்களிடையே கூர்மையடைந்தமையாலேயே எமது போராட்டம் எழுச்சியடைந்தது. அந்த அரசியல் எழுச்சியும் முனைப்புமே எமது போராட்டம் தடம்புரளாமல் இருக்க உதவின. இவை மழுங்கிப் போகுமாயின் நாம் சலுகைகளுக்காகச் சோரம் போகின்ற கேவலமானதொரு கூட்டாகி விடுவோம்.

எந்த ஒரு அரசும் அரசியல் ஒருமைப்பாடும் அறிவுமுள்ள ஒரு சமூகத்தை ஏமாற்றும்போது அந்த அரசுக்கும் அந்த மக்களுக்கும் முரண்பாடுகள் கூர்மையடைவது தவிர்க்க முடியாதது. இவ்வாறான முரண்பாடுகள் ஒருகட்டத்தை அடையும்போது அவை தமக்கெதிரான போராட்டங்களாக வெடிக்காமல் இருக்க அரசுகள் பலவழிகளைக் கையாள்கின்றன. அவற்றில் ஒன்று மாய எதிர்பார்ப்புகளை உண்டாக்குவதாகும்.

கருணா குழுவின் சாட்டில் சிறிலங்கா படைகள் கிழக்கில் கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளுமின்றி வடக்கு-கிழக்கில் எமது மக்கள் இன்னமும் வாழ்கின்றனர். போர் அழிவுகள் இன்னமும் மாறாது உள்ளன. யாழ்ப்பாணத்தில் தமது காணிகளையும் வீடுகளையும் ஊர்களையும் சிறிலங்கா படைகளிடம் பறிகொடுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் நாதியற்றுக் கிடக்கின்றனர். தமிழ்மொழி புறக்கணிப்பு இன்னமும் தொடர்கிறது. இப்படியே பல இன்னல்களைக் கூறிச் செல்லலாம்.

இவற்றையெல்லாம் விட சுனாமியும் பேரழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றுவரை எதற்கும் தீர்வில்லை. ஆனால் இவையெல்லாம் எமது மக்களிடையே எந்தவிதமான அரசியல் கோபத்தையும் உண்டாக்கவில்லை. இந்த இன்னல்கள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு எதிராக அவர்கள் அணிதிரளவில்லை. திரட்டப்படுவதிலும் அதிகம் நாட்டம் காட்டுவதில்லை.

யாழ்ப்பாணத்திலோ மன்னாரிலோ வவுனியாவிலோ மட்டக்களப்பிலோ அரசியல் பேரணிகளுக்கு வருகின்ற மக்களின் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது என்பது மறைக்க முடியாத உண்மை. அவர்களிடம் விடுதலை உணர்வு இருக்கின்றது. ஆனால் அது அரசியல் ரீதியாக அணிதிரளும் அளவுக்கு எழுச்சியுள்ளதாக இல்லை.

எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். அவரைப் புலிகள் சந்திக்கிறார்கள். சிரித்துக்கொண்டே கைகுலுக்குகிறார்கள். எல்லாம் சுமூகமாகப் போகிறது என்பதுபோல் மகிழ்ச்சியாகப் பேசுகிறார்கள். இப்படியான செய்தி விம்பங்களை பொதுமக்கள் திரும்பத் திரும்பக் காணும்போது அவர்களை அறியாமல் உளவியல் தாக்கம் ஒன்று ஏற்படுவது இயல்பு.

Prabhakaran-signing-a-historic-ceasefire-agreementவிரைவில் எமக்கு தீர்வு கிடைக்கப்போகிறது என்ற உளப்பாங்கை இந்த விம்பங்கள் மக்களிடம் உண்டாக்குகின்றன. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் சொல்ஹெய்மின் கூற்றுக்களும் அமைந்துவிடுகின்றன. இவையெல்லாம் நமது மக்களிடையே எழக்கூடிய அரசியல் சு10ட்சுமங்களைத் தணிக்கின்றன. “ஏதோவொரு தீர்வு அண்மித்துவிட்டது. எனவே நாம் எமதுபாட்டில் இருப்போம்” என்ற அரசியல் மலட்டுத்தனம் அவர்களிடையே பரவுகிறது.

புதிய மக்கள் படை (New Peoples Army-NPA ) என்பது எண்பதுகளில் உலகின் மிகப்பெரிய கெரில்லா இயக்கங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அது போராடி வந்தது. கடந்த பல ஆண்டுகளாக npa நோர்வேயின் அனுசரணையோடு பிலிப்பைன்ஸ் அரசுடன் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறது.

(அமெரிக்காவின் பின்னணியிலேயே நோர்வே அங்கும் அனுசரணையாளராக அமர்த்தப்பட்டது) NPA ஐ ஒரு பயங்கரவாத இயக்கமாக ஏலவே அமெரிக்கா தடைசெய்திருந்தது. அமைதிப் பேச்சுக்களில் குறிப்பிட்ட காலம் ஈடுபட்டு வந்தால் தன்மீதான தடையை அமெரிக்கா நீக்கும் எனவும்ää தனக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமெனவும் npa எதிர்பார்த்திருந்தது.

ஆனால் npய இன் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த பிலிப்பைன்சின் கிராமப்புற ஏழை மக்களிடம் காணப்பட்ட அரசியல் முனைப்பும் எழுச்சியும் பேச்சுக்கள் நடந்த காலத்தில் படிப்படியாக வீழ்ச்சியடையலாயின. இன்று npய வலுவிழந்த ஒரு அமைப்பாக காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது.

NPA ஐ புலிகளோடு ஒப்பிட முடியாதென சிலர் கூறலாம். படைபலத்தில் புலிகள் NPA ஐ விட பலநூறு மடங்கு வலுவுள்ளவர்களாக இருப்பது உண்மையாயினும் மக்களின் அரசியல் முனைப்பு வீழ்ச்சியடைவது பற்றிய யதார்த்தத்தை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும்.

எமது போராட்ட எழுச்சி மக்களிடையே மழுங்கடிக்கப்படாமல் இருக்கவேண்டுமாயின் நாம் சில வேலைகளை செய்தல் நல்லது. முதலாவது நமது கையில் திட்டவட்டமாக எதுவும் கிடைக்கும்வரை நாம் அதுபற்றிய ஊடக ஆரவாரத்தை சற்றேனும் குறைக்கவேண்டும். பிழையான எதிர்பார்ப்புக்களை மக்களிடம் ஏற்படுத்தும் செய்தி விம்பங்களை கூடியளவு தவிர்க்கவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சிறிலங்கா அரசு எமக்கு எதையுமே தரப்போவதில்லை என்ற உண்மையை மக்களிடம் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக சொல்ஹெய்ம் வந்துசெல்லும் ஒவ்வொரு முறையும் அதை நாம் உரத்துக் கூறவேண்டும்.

********************

இலங்கை அரசியலில் தமிழர் தலை விதியை எதிர்வு கூறிய சிவராமின் தீர்க்க தரிசனம்

உலகின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி எவ்வளவு தூரம் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றதோ அதேயளவு பங்கினை தனிமனித ஊடகவியலாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனித சமூகத்தின் அரசியல், பொருளியல், சமூகவியல் வளர்ச்சிக்கு ஊடகவியலாளர்களின் பங்கு அபரிமிதமானது.நம் சமூக மாற்றத்திற்கும், அரசியற்சிந்தனை மாற்றத்தினை சமூகத்திற்கு எடுத்துச் செல்லுகின்ற அல்லது சொல்லுகின்ற பேராசான்களாக ஊடகவியலாளர்கள் விளங்குகின்றனர்.

சமூகமாற்றத்தினை வேண்டி நிற்கின்ற சமுதாயங்களுக்கும் இனக்குழுமங்களுக்கும் புதிய அறிவியல், அரசியற் சிந்தனைகளை வழங்குகின்ற ஊடகவியலாளர்களை அரசியல் மாற்றத்தை விரும்பாத எதேச்ச அதிகார அரசுகள் அடக்குகின்றன, அடக்கி ஒடுக்க முனைகின்றன. அல்லது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடக்குகின்றன.

உலகின் அரசியற், சமூக பொருளாதார மாற்றத்தினை வேண்டிநிற்கின்ற நாடுகளில், அல்லது சமூகங்களில் ஊடக அடக்குமுறையில் முன்னணியில் திகழும் பர்மா, கெயிற்றி, ஈரான், ரஷ்யா சீனா. நேபாளம். இந்தியா. வங்காளதேசம். சேமாலியா போன்ற 16 நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தை வகிக்கின்றது.

இலங்கையில் கடந்த ஐம்பது வருடகால வரலாற்றில் இன முரண்பாட்டையும், சமூகவியல் மாற்றத்தினையும் ஏற்படுத்த முனைந்த பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது கடத்தப்பட்டனர். அல்லது கொலைமிரட்டல் விடுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளுக்குள் 40 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதிலிருந்து ஊடக அடக்குமுறையின் குரூரம் புரியும். இவ்வாறான ஒரு நெருக்கடி மிகுந்த இனவிடுதலைக்கான சிவில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் உண்மையின் குரலாக ஒலித்துக்கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நீண்ட வரிசையில் டி.சிவராம் தனித்துவமானவர்.

தமிழரின் நோக்குநிலையில் இருந்து இலங்கையின் அரசியல். சமூக விவகாரங்களையும். அன்றாடச் செய்திகளையும். ஆங்கில மொழிமூலம் வழங்கும் ‘தமிழ்நெற்’ இணையத்தளம் உலகப்பிரசித்தமானது. இலங்கையுடன் தொடர்புடைய வெளிநாட்டு இராசதந்திரிகளின் அலுவலக மேசைகளில் அதன் நாளாந்த கணனிப் பிரதிகள் எப்போதும் இருக்குமளவிற்கு செய்திகளின் உண்மைத்தன்மையும் நேர்த்தியும் செய்தி ஆய்வுகளும் தரம்வாய்ந்தவை இத்தகைய சர்வதேச தரத்திற்கும் கீர்த்திக்கும் காரணம் அவ் இணையத்தளத்திரனை உருவாக்கி வழிநடத்தியது டி.சிவராம் தான்.

சிவராம் பத்திரிகைத்துறை ஜாம்பவான். இனப்பற்றும், நேர்மையும், துணிச்சலும் மிக்க ஊடகவாதி ஆங்கிலம் தமிழ் இரு மொழிகனிலும் அறிவுசார் புலமையுள்ள ஒரு அரசியல். இராணுவ ஆய்வாளன். புத்திஜீவிகள் வியக்கும் வண்ணம் இலாவகமான பொருட்செறிவுடைய சொல்லாடல்களை பயன்படுத்தி அலாதியாக அவருடைய பேனா ஆய்வுக்கட்டுரைகளை வரையும் தர்கரீதியானதும், வாசிப்போரின் அறிவியல் தேடலுக்கு நல்ல தீனியாகவும் அதேநேரம் மனதைக்கவர்ந்து பதியும் வண்ணம் மாக்சீயக் கருத்துக்கள் அவருடைய ஆய்வுக்கட்டுரைகளில் பலமாகவும், ஆழமாகவும் பொதிந்து கிடக்கும்.

தமிழர் தாயகத்தின் புவியியல் கேந்திரத்தன்மை பிராந்திய வல்லாதிக்க புவிசார் அரசியல் நிலைப்பாடு என்பவற்றை போரியல் இராணுவ நோக்கில் தர்க்கீகமாகவும் ஆழமாகவும் அலசி ஆராய்ந்து அவர் எழுதும் இராணுவ ஆய்வுக்கட்டுரைகளை பாமரமக்கள் முதல் சிங்கள புத்திஜீவிகள் வரை ஏன் இராணுவத்தளபதிகளும் ஆர்வமாகப் படித்தனர். அவரது நடுநிலமையானதும் ஜதார்த்த பூர்வமானதுமான இராணுவ ஆய்வுகளிலிருந்து படைத்தரப்பு தமது போரியல் வியூகங்களை வகுக்க முற்பட்டது.

டி.சிவராம் என்ற சொல்லின் பின்னால் உண்மை, நேர்மை, நட்பு, துல்லியம், தர்க்கீகம் மாக்சீசம் தீர்க்கதரிசனம் எனப்பல்வகைப் பண்பும் பல்துறை ஆற்றலும் விரிந்துகிடக்கின்றது. ஒப்பாரும் மிக்காருமில்லாத தனித்துவமான, உலகமே வியந்து அந்த ஊடகப் போராளியை, அரசியற் சிந்தனையாளனை, மானிட நேயவாதியை நாட்டுப்பற்றளனை விடுதலைவிரும்பியை எல்லாவற்றிற்கும் மேலாக எனது மானசீகக் குருவை காலனிடம் பறிகொடுத்து ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையிலும் அந்த மாமனிதனின் வெற்றிடத்தை நிறப்புவதற்கு ஈழத்தாய் இன்னொரு பிரசவம் செய்யவேண்டும். இந்த நூற்றாண்டிலாவது முடியுமா என்றால் இல்லவே இல்லை. சிவராமுக்கு நிகர் சிவராம் தான் வேறு யாராலும் முடியாது.

ஆகவே இவ்வகைப்பட்ட கிடைத்தற்கரிய ஊடகவியலாளனின் வாழ்வும் வளமும் பற்றி என் சிறிய மனக்கண்ணில் விரிந்தவைகள். தர்மரட்ணம் சிவராம் 11.08.1959 இல் தமிழர் தாயகத்தில் கிழக்கில் உதித்த சூரியன். சென்.மிசேல் கல்லூரியில் கல்விகற்று பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தேர்வானவர். 1982 இல் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது அன்றைய நாளில் வடகிழக்கில் இளைஞர் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி, இன முரண்பாட்டின் தீவிரம், கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்கு முறையின் கொடூரம் என்பனவற்றினால் தமிழ் இளைஞர்கள் போராட்ட இயக்கங்களின் பால் சென்றபோது டி.சிவராமும் அந்த இளைஞர்களில் ஒருவராக இருந்தார்.

காந்தீயம் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் இணைந்திருந்த டி.சிவராம். பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர முடியாமல் தமிழர் சுய நிர்ணயத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக் அமைப்புக்களில் தமிழீழ விடுதலைக்கழக அமைப்பில் (புளொட்) இணைந்து தனது தாயகத்திற்கான பணிகளைச் செய்ய ஆரம்பித்தார்.

வடக்குக் கிழக்கின் மூலை முடுக்குக் கிராமங்கள் முதல் காடுகள், மலைகள் ஈறாக கால்நடையாகவும், உந்துருளியிலும், ஈருருளியிலும் அலைந்து திரிந்து மக்களைச் சந்தித்தவர். அவர் சென்ற இடமெல்லாம் அப்பிரதேசத்தின் சமூகப் பண்பாட்டு விழுமியங்கள், பொருளாதார வளங்கள், புவியியல் நிலமைகள், இராணுவக் கேந்திரத்தன்மை என்பவற்றினை மிக ஆழமாக்க் கிரகித்துக் கொண்டவர். இதனால் தான் பின்நாளில் அவரால் பத்திரிகைத்துறையில் ஜாம்பவானாக விளங்கமுடிந்தது.

1980களின் நடுப்பகுதியில் விடுதலைக்காகப் போராடிய விடுதலை அமைப்புக்கள் வழி தவறிப்போக விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்த முனைந்த விடுதலைப்புலிகள் இயக்கம். அவ்வாறு வழிதவறிப் போனவர்களை தமிழர் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தடைசெய்தனர். எஞ்சியவர்களை தம்முள் உள்வாங்கிக் கொண்டனர்.

இவ்வாறு தடைசெய்யப்பட்ட புளொட் அமைப்பில் யாழ்ப்பாணத்தின் முக்கியமான பொறுப்பாளர்களில் ஒருவராகவிருந்த டி.சிவராம். அதிகார பூர்வமாக புளொட் இயக்கம் தனது அரசியற் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் நிறுத்துவதாக பிரகடணப்படுத்தும் அறிவித்தலை ஈழநாடு பத்திரிகைமூலம் வழங்கிவிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் தனது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நண்பர்களின் உதவியோடு கொழும்பில் வசித்துவந்தாலும் புளொட் இயக்கத்திலிருந்து விலகாமலும், அதே நேரம் இலங்கையின் முக்கிய சிங்கள அரசியல் வாதிகளுடனும், கல்வி மான்களுடனும் தொடர்புகளைப் பேணி வந்ததார்.

1987 இல் நடந்த இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில் அப்போது புளொட்டின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் அவர்களால் புளொட் அமைப்பின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட போதும் புளொட் அமைப்பு மேற்கொண்ட மாலைதீவு ஆட்சிக்கவிட்பு, ஜே.வி.பி உடனான தொடர்பு, புளொட் அமைப்பின் கொள்கை விலகல், அமைப்பின் நிர்வாக ஒழுக்கச் சீர்கேடுகள் காரணமாக முற்றுமுழுதாக புளொட் அமைப்பிலிருந்து வெளியேறினார். உண்மையான ஒரு விடுதலை இயக்கம் அயல் நாடொன்றின் ஆட்சிக்கவிழ்பு சதி புரட்சிக்கு கூலிப்படையாகச் செல்லாது. அவ்வாறு செல்லின் அதை ஒரு விடுதலை இயக்கமாக்க் கொள்ளமுடியாது. என்பது அவருடைய கருத்து.

செப்டெம்பர் 8 1988 இல் ஜோகரஞ்சினி என்ற பெண்ணை திருமணம் முடித்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதோடு மானிட விடுதலை பற்றிய சிந்தனையோட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். இதிலிருந்து அவருடைய ஊடகப்பயணம் ஆரம்பமாயிற்று. இவருடைய பல்துறை அறிவியல் ஆற்றலைக்கண்டு வியந்த.

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரான ரிச்சட். டி. சொய்சா. இவரை காமினி வீரக்கோனுடைய ஆங்கிலப்பத்திரிகையான ஐலண்ட பத்திரிகைக்கு கட்டுரைகளை எழுதும்படி வேண்ட தராக்கி என்ற பெயரில் ஆய்வுக்கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். இவ்வாறு பத்திரிகைத் துறையுள் நுழைந்த சிவராம் குஞ்சி, சிவா, SR, தராக்கி, பொன்னம்பலம். ஞானசோதி எனப் பலபெயர்களில் ஊடகங்களில் வலம்வந்தார்.

இவருடைய அரசியல், இராணுவ ஆய்வுக்கட்டுரைகள் ஐலண்ட் பத்திரிகையிலும், வீரகேசரி வார இதழிலும், ஈழநாடு, ரைம்ஸ் போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்தன. இவருடைய தர்க்க ரீதியானதும். அறிவியல் சார்ந்த்தும், விஞ்ஞான பூர்வமுமான ஆய்வுக்கட்டுரைகள் இலங்கையில் புத்திஜீவிகளை மாத்திரமல்ல உலகின் ஊடகத்துறை சார்ந்தவர்களையும், கல்விமான்களையும் வெகுவாகக் கவர்ந்தது. இவ்வாறு பரிணமித்த சிவராம் என்ற பத்திரிகையாளன் 1990 களில் மனித உரிமை அமைப்புக்களினதும், அரசுசார்பற்ற நிறுவனங்களினதும் திட்டமிடல்களுக்கும், செயற்பாடுகளுக்கும் ஆலோசனை வழங்கும் அளவிற்று அறிவியல் ரீதியாக வளர்ச்சியடைந்திருந்தார். இவருடைய ஆங்கிலப்பத்திரிகை ஆய்வுக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து தேர்ந்த கட்டுரைகளின் தொகுப்பு என்ற பெயரில் நூலுருவில் வெளியிடப்பட்டு வடகிழக்கெங்கும் ஆர்வமாகப் படிக்கப்பட்டது.

இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொள்ளும் போதெல்லாம் அந்நாடுகளின் இராஜதந்திரிகளையும், ஊடகவியலாளர்களையும் சந்தித்து தமிழர் தரப்பு நியாயங்களை அறிவுபூர்வமாகவும், யதார்த்தபூர்வமாகவும் நிறுவி புதிய கருத்துருவாக்கத்தினை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியவர். இதன்மூலம் அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் நம்பிக்கைக்குரியவரானார். இவருடைய கருத்துக்கள் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு வெறுமதி வாய்ந்தவை.

சிங்களத் தலைவர்கள் மத்தியிலும், சிங்களப் பத்திரிகைக் குழாம், சிங்களப் புத்தி ஜீவிகளுடனும் மிக நெருங்கிய தொடர்பைப் பேணியதோடு அவர்களுடன் அன்னியோன்னியமாகப் பழகி கருத்துப் போர்களில் ஈடுபட்டு அவர்கள் யாவர் மத்தியிலும் புரையோடிக்கிடந்த பேரினவாத உணர்வுகளை கண்டு அவர்களுடன் விவாதித்து புதிய கருத்துப் பரிமாறலை ஏற்படுத்தும் கருத்தியல்ப் போர் புரிந்தும் அவர்கள் கேளாச் செவியர்களாகவும், அறிவுக்குருடர்களாகவும் இருப்பதையும் மாறாத உளப்பாங்குடைய இன வெறியர்களாக வளர்க்கப்பட்ட பௌத்தமத பீடங்களின் போக்கினை கண்டு மனம் நொந்ததன் வெளிப்பாடுதான் போர்நிறுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழர்

பிரச்சனையை சிங்கள மக்களுக்குப் புரிய வைக்க சிங்கள வானொலிச் சேவையை ஆரம்பித்தபோது 3.10 2004 இல் இதே வீரகேசரி வார வெளியீட்டில் “தமிழர் பிரச்சினையை சிங்கள தேசத்திற்கு விளக்க முனைவது பயன்ற்ற செயல்” என்ற தலைப்பில் தனது 15 வருடகால தென்னிலங்கை கல்விமான்களோடும், கருத்தியலாளர்களோடும் கொண்டிருந்த உறவின் மூலம் தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரை சிங்கள தேசம் தாம் விரும்பியதை மட்டுமே கேட்கத் தயாராக இருக்கின்றது என்பதை மிகச்சலிப்புடனேயே வெளிப்படுத்தியிருந்தார்.

சிவராமின் அரசியற் பார்வையில் ஏற்பட்ட இந்த மாற்றம் பேரினவாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது அவருக்குத் தொல்லைகள் அதிகரித்தன. கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இருந்தும் அஞ்சா நெஞ்சுடன் அவருடைய ஆக்கங்களில் தமிழர் அரசியலின் அடிநாதமாக தமிழ்த்தேசியம் இருக்கவேண்டும் என உறுதிபட எழுதுவார். தமிழ்மக்கள் தேசிய விழிப்புணர்வுடன் இருந்து தென்னிலங்கை அரசியற் காய்நகர்த்தல்களை விளங்கிக் கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறுவார்.

தமிழர் மத்தியில் பிரதேசவாத்த்தினை தூசுதட்டி எடுத்த கிழக்கு பிரிவிணை வாதிகளுக்கு எதிராக வீரகேசரி இதழிலேயே “கருணாவுக்கு ஒரு பகிரங்க மடல்” என்ற சிறந்த கடித்த்தின்மூலம் வரலாற்று ரீதியாக பிரதேசவாதம் பேசியவர்களின் வீழ்ச்சியும், அன்றைய அரசியல், புவியியல், இராணுவச் சூழலுக்கு கிழக்குப் பிராந்ந்தியம் எவ்வகையில் ஈடுகொடுக்க முடியும் என்றவகையிலான அவருடைய ஆழமான கருத்தியல் பிரதேச வாதத்திற்கு ஆப்புவைத்து சில வாரங்களிலேயே பிரதேசவாதிகளை சிங்களத்தின் கால்களில் தஞ்சமடைய வைத்தது. இது தமிழர் தாயகத்தின் கருத்தியலில் அவருடைய மேலாண்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

டி.சிவராம் அவர்களின் ஆக்கங்களிலே என்றும் அழியாப்புகழைத் தேடித்தந்த ஆக்கங்களாக “இந்தியக் கடற்பாதுகாப்பு வலையத்தில் இலங்கை”, “இந்து சமுத்திர வல்லாதிக்கப்போட்டியில் தமிழீழம்”, “தமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு விளக்க முயல்வது பயன்ற்ற செயல்” “கருணாவுக்கு ஓர் திறந்த மடல்” என்பவை அவருடைய பத்திரிகைத்துறை முதிர்ச்சியின் சிறந்த வெளிப்பாடுகள். சிங்களத்தின் அரசியல் நாடகங்களை அம்பலப்படுத்தி டி.சிவராம் பயன்படுத்தும் கடும் தொனி நிறைந்த சொல்லாடல்கள் இனவாத முகத்திரையை கிழித்தெறிவதுடன் தமிழ் மக்களிடம் விளிப்புணர்வை வேண்டிநிற்கும்.

தமிழரின் இனப்பிரச்சனைக்கு சிங்கள தேசம் ஒருபோதும் அரசியற்தீர்வை வழங்க முன்வர மாட்டாது என்பதை அவரது இறுதிக்காலத்தில் அழுத்திம் திருத்தமாக எழுதிவந்தார். அவருடைய தீர்க்கதரிசணக் கருத்துக்கள் தற்போதும் பொருந்தி நிற்கின்றன. முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் நடந்து ஒரு வருடமாகியும் தீர்வுத்திட்டமென்ற பொதி மாயமாக மறைந்திருக்க உலகிற்கு அரசியல் நாடக சித்துவிளையாட்டுத் தொடர்கிறது.

தற்போதைய அரசியற் சூழலில் விடுதலைப்புலிகளின் இராணுவப் பின்னடைவுக்குப் பின்பும் உருப்படியான அரசியற்தீர்வு யோசனைகள் கூட முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு தமிழர் தரப்பு அரசியற் தீர்வுத்திட்டம் கேட்பினும் அதனைச் செவிமடுக்க சிங்களதேசம் தயாரில்லை. இதனை ஆறு வருடங்களுக்கு முன்பே டி.சிவராமால் அனுமானிக்க முடிந்ததென்றால் அது அவருடைய ஆளுமை வீச்சின் கனதியை உலகுக்குப் புரியவைக்கும்.

இவ்வாறு பத்திரிகைத்துறையில் பல்வகைத்தன்மை கொண்டவராக விளங்கிய சிவராம் இலங்கையில் இனப்படுகொலை நிகழ்கின்றது என்பதனை வரலாற்று, அறிவியல், புள்ளிவிபரவியல்த் தரவுகளோடு வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த வேளை அவருக்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்களையும் பொருட்கடுத்தாது அசாத்தியத் துணிவுடன் “இந்த மண்ணை விட்டு நான் எங்கே போவது. சாவு வருவதெனில் இந்த மண்ணிலேயே எனக்கு நிகழட்டும்” என்று உறுதிபடக்கூறி சாவின் விளிம்பில் நின்றுகொண்டும் தனது பேனாவினால் புதிய சரித்திரமொன்றை படைத்துக் கொண்டிந்த அந்த மானிட நேயவாதியை பேரினவாத்த்தின் கொலைக்கரங்களும், தமிழினத்தின் கோடாரிக்காம்புகளும் சேர்ந்து கோழைத்தனமாக கடத்திச் சென்று கொடூரமாகக் கொன்று அவரது உடலை தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க ஆணையிடும் அந்த அதிகாரச்சின்னமான பாராளுமன்றத்தின் அருகே போட்டுவிட்டுச் சென்றனர்.

தமிழரின் விடுதலைப்போராட்ட கருத்தியல் வரலாற்றில் சிவராமுக்கு தனியிடமுண்டு. அவரின் மகத்தான ஊடகப்பணியைக் கௌரவித்து தமிழர் தேசம் மாமனிதராக போற்றுகின்றது. இவ்வாறே அமெரிக்காவின் கிளாக் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி யூட் பெர்ணாண்டோ அவர்கள் “சிவராமின் இழப்பு மனித நேய அமைப்புக்களுக்கும், கல்விசார் துறையினருக்கும், ஊடகத்துறையினருக்கும், பதிலீடு செய்யமுடியாத இழப்பு” எனக்குறிப்பிட்டதிலிருந்து அந்த மாமனிதனின் கருத்தியல் பரிமானத்தை உலகமே வியந்து நின்றது எனலாம்.

சிவராம் எனப்படுகின்ற அந்த ஊடகப் போராளி கொல்லப்பட்டு ஐந்து வருடங்கள் கழிந்தும் அவருடைய ஆளுமை உலகின் பல்வேறு தரப்பினரது மனப்பதிவிலும் அழியாத தாக்கத்தை ஏற்படுத்திற்று இதன் வெளிப்பாடுதான் லண்டனில் எதிர்வரும் 29.04.2010 வியாழக்கிழமை லண்டன் கொல்பேணில் அமைந்துள்ள கொன்வே மண்டபத்தில் (Conway Hall, 25 Red Lion Square, Holborn London WC1R 4RL)),மாலை 6.30 மணியளவில் சிவராம் ஞாபகார்த்த நினைவுக் கூட்டமும் அவருடைய ஊடகத்துறை பணிசார்ந்த புத்தவெளியீடும் இடம் பெறவிருக்கின்றது. இதில் தெற்குக் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் விக்டேகர் Professor. Mark Whitaker, அவர்கள் கலந்துகொண்டு பிரதம உரையை நிகழ்தவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மனித உரிமைகள் அமைப்பின் சட்டத்தரணி, லீ கரூ கியூசி, மற்றும் பிபிசி தமிழின் முன்னாள் அறிவிப்பாளர் ஆனந்தி, தமிழ் காடியன் பத்திரிகையின் ஆசிரியர் வினோ கணபதிப்பிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

THINAPPUYAL NEWS  ERANIYAN

SHARE