ஜப்பானால் நிலவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட ஸ்லிம் விண்கலமானது, வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஸ்லிம் விண்கலம்
நிலவில் பாறைகளை ஆய்வு செய்வது மற்றும் விண்கலத்தை துல்லியமாக தரையிறங்கும் நடைமுறைகளை காண்பிப்பதற்காக, 200 கிலோ எடை கொண்ட விண்கலத்தில் பிளாஸ்டிக் சோலார் பேனல், மிக நுண்ணிய கேமராக்கள், நேனோ டெக்னாலஜியால் சுருக்கப்பட்ட மின்னணு பாகங்கள் பொருத்தப்பட்டு ஸ்லிம் விண்கலம் விண்ணில் கடந்த செப்டம்பர் மாதம் ஏவப்பட்டது.
இந்த விண்கலமானது மோசமான வானிலை காரணமாக 3 முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த மாதத்தில் கோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
இது ஜனவரி 20ஆம் திகதி அன்று அதிகாலை நிலவில் தரையிறக்கப்படவுள்ளது. தரையிறங்கலில் திட்டமிடப்பட்டுள்ள துல்லியம் காரணமாக இது ’மூன் ஸ்னைப்பர்’ என்றும் அழைக்கப்படுகிறது.
சந்திரயான் தரையிறங்குவதற்கான பரப்பு 4கிமீ X 2.4கிமீ என்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஸ்லிம் 100மீ பரப்புக்குள் தரையிறக்கப்படவுள்ளது.
வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த ஸ்லிம்
இந்த விண்கலமானது நேற்று மாலை சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தற்போது நீள்வட்டத்தில் நிலவை சுற்ற ஆரம்பித்துள்ளது.
சந்திரனுக்கு அருகில் 600 கிமீ மற்றும் தொலைவில் 4,000 கிமீ என்பதாக இந்த நீள்சுற்றுவட்டப்பாதை அமைந்திருக்கிறது.
இந்திய நேரப்படி ஜனவரி 20 அன்று அதிகாலை 12.20 மணியளவில் சந்திரனின் பரப்பில் ஸ்லிமின் லேண்டர் தரையிறக்கப்படும்.
மேலும் இந்த திட்டம் வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகளை தொடர்ந்து ஜப்பான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.