கனவுகளைப் பற்றி விளக்கும்போது, ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்லப் படுகிறது. பொதுவாக வாதம், பித்தம், கபம் ஆகிய தாதுக்களின் மாறுபாட்டால் விளைவது கனவு என்று ஆயுர்வேதம் விவரிக்கும்.
கனவுகள் குறித்து தேவகுருவான பிரகஸ்பதி பகவானும் விளக்கியுள்ளதாக ஞானநூல்கள் விவரிக்கின்றன. ப்ரச்ன மார்க்கமும் கனவுகள் பற்றி குறிப்பிடுகிறது. நாம் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத, எதிர்பார்க்காத கனவு கள் தோன்றுவதே உண்மையான கனவுகள் ஆகும். அப்படிப்பட்ட கனவுகளுக்கு உரிய பலன்களைத் தான் சொப்பன சாஸ்திரம் சொல்கிறது.
கனவுகள் எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். இரவு உறங்கும் போது எந்த நேரத்திலும் வரலாம். அதாவது படுத்துறங்கிய சில மணிகளிலோ, நள்ளிரவிலோ, விடியல் நேரத்திலோ வரக்கூடும். இப்படி நாம் காணும் கனவுகள் பலிக்கும் காலம் பற்றியும் கனவு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும்; இரண்டாவது ஜாமத்தில் கண்ட கனவு எட்டு மாதத்திலும்; மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு நான்கு மாதங்களிலும்; விடியும் வேளையில் அதாவது நான்காவது ஜாமத்தில் காணும் கனவு பத்துநாள் அல்லது ஒரு மாதத்துக்குள்ளும் பலிக்கும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு வரும் கனவுகளைப் பற்றி நமது முன்னோர் ஆராய்ந்து பல குறிப்புகளை எழுதித் தந்து விட்டுப் போயிருக்கிறார்கள்.
அவற்றில் இருந்து அபூர்வமான தகவல்கள், உங்களுக்காக! அகர வரிசைப்படி ஒவ்வொன்றாய் அறிவோமா?
அரசர்: அரசர் (தற்போது ஜனாதிபதி, பிரதமர்) போன்ற பெரும்பதவியில் உள்ளவர்களுடன் அறிமுகம் ஏற்படுவதாகக் கனவு கண்டால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உண்டாகும். மணமாகாத இளம்பெண் மேற்படி கனவைக் கண்டால், அவளை மணம் முடிக்க வரப்போகும் ஆடவன், அவள் குடும்பத்தைவிட பன்மடங்கு வசதியுடன் இருப்பான் என்று கூறலாம். அரச குடும்பத்தாருடன் பழகுவதாக கனவு வந்தால், நண்பர்கள் மூலமாக பொருள் உதவி கிடைக்கும்.
அப்சர ஸ்திரீகள்: தேவலோகப் பெண்களை ஆண்கள் கனவில் கண்டால், எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். திருமணமாகாத மகளிர் கண்டால், விரைவில் திருமணம் நிகழும். மணமான மங்கையர் கண்டால், பொருள் வரவு உண்டு.
அழகற்ற பெண்: அழகு இல்லாத பெண் ஒருத்தியை, மணமாகாத ஓர் ஆடவன் கனவில் கண்டால், பலன் நேர்மாறாக நிகழும். மிகவும் அழகான பெண் மனைவியாவாள்.
அதிசயமானவர்: விந்தையான மனிதர் அல்லது நூதனப் பொருட்கள் கனவில் வந்தால், வரும் தீமையைச் சுட்டிக்காட்டும். நம்பிக்கை மோசடி – ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.
அடிதடி: சண்டை சச்சரவுகளில் சிக்கிக் கொண்டு தவிப்பதுபோல் கனவு கண்டால், அவரது வாழ்க்கை அமைதியானதாக எல்லோருடனும் சுமுக உறவு கொண்டதாக அமையும்.
சண்டையில், பிறர் அடிப்பது போன்று கனவு கண்டால் அவர்களுக்கு விரோதிகளே இல்லை எனலாம். பகைவர் இருப்பின் அவர்களும் பகை மறந்து நண்பர்களாக மாறுவார்கள்.
தான் பிறரை அடிப்பதாகக் கனவு கண்டால்: நண்பர்களால் புகழப்படும் நிலை உருவாகும். புதிய நண்பர்கள் உண்டாவர், புகழ் பெருகும். தான் அடிபட்டு காயமடைந்ததாகக் கனவு கண்டால், பொருள் அபிவிருத்தி ஏற்படக்கூடும் எனலாம். ஆனால், கத்தி போன்ற ஆயுதங்களால் அடிபட்டு காயமடைந்ததாக கனவு காண்பது நல்லதல்ல; பழி ஏதேனும் வந்து சேரும்.
அழுகை: வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு காணின் அவரது வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படக்கூடும்.
அபாயம்: தனக்கு அபாயமும், தொல்லைகளும் ஏற்படுவதாக கனவு கண்டால், பலன் நேர்மாறாக நிகழும். அவரது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக நிம்மதியுடையதாக அமையும். பிறர் அபாயத்தில் சிக்கியிருப்பதுபோல் கனவு கண்டால், நண்பர்களால் தொந்தரவு ஏற்படக்கூடும்.
அரிசி: அரிசியைக் கனவில் கண்டாலோ, சந்தையில் வாங்கி வருவதுபோல் கனவு கண்டாலோ செய்யும் தொழில் அபிவிருத்தி அடையும்; லாபம் அதிகரிக்கும்.
அன்னப் பறவை: கனவில் காணும் விலங்குகளும் பட்சிகளும் விநோதமாக காட்சி தருவது உண்டு. அவ்வகையில், கறுப்பு நிற அன்னப் பறவையைக் காண்பது சிலாக்கியம் என்று கூறுவதற்கில்லை.
பருவ வயதில் உள்ள ஓர் இளைஞனின் கனவில் கறுப்பு நிற அன்னம் தோன்றுமானால், பெரும் ஏமாற்றங்களுக்கு அவன் ஆளாக வேண்டியிருக்கும். அவனுடைய தன்மானத்துக்கு இழுக்கும் அபவாதமும் சூழும்.
மணமாகாத மங்கை ஒருத்தியின் கனவில் கறுப்பு அன்னத்தைக் கண்டால், உடனடியாக ஏதேனும் வருத்தத்துக்கு உரிய செய்தியைக் கேட்க நேரிடும். ஆனால், வெள்ளைநிற அன்னத்தைக் காண்பவர் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
ஆசிரியர்: கல்வி போதிக்கும் ஆசிரியப் பெருமக்களில் ஒருவரை கனவில் சந்திப்பவரின் வாழ்க்கை வளங்கள் அமோகமாகப் பெருகிடும். பொருள் வரவும் மிகுதியாகும்.
ஆலயம்: கோயிலைக் கனவில் காண்பது நன்மையான பலன்களைத் தரும். செய்யும் வியாபாரம் முன்னேறும். நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகுக்கும். புனித யாத்திரைகளையும் மேற்கொள்ள நேரிடலாம். ஆனால், பாழடைந்த அல்லது தெய்வ விக்ரகம் இல்லாத கோயிலைக் காண்பது கூடாது. முன்னதற்கு நேர்மாறான பலன்களைத் தரும். முயற்சிக்கும் செயல்களில் தோல்வியும் பொருள் நஷ்டமும் உண்டாகும்.
ஆலயத்தில் நுழைந்து இறைவனை வழிபடுவதுபோல் கனவு தோன்றும் எனில், ஈடுபடும் செயல்களில் முதலில் சில முட்டுக்கட்டைகள் எதிர்ப்படும். ஆனாலும் தெய்வத்தின் அருளால் முடிவில் செயல் நன்மை யாகவே முடியும்.
கனவில், ஆலய மணியோசை யைக் கேட்பதாக உணர்ந்தால், அதற்கும் பலன் உண்டு. ஆலய மணியோசை ஒரே சீராக ஒலிக்கும் எனில், மக்கள் சந்ததியற்றவர்களுக்கு குழந்தைச் செல்வம் உண்டாகும். பொருள் வரவும் பெருகும். ஆனால், மணியோசை சீரற்றதாக ஒலிக்குமானால் பல சிக்கல்கள் குறுக்கிடுவதோடு பொருள் நஷ்டமும் உண்டாகும்.
ஆலமரம்: கனவில் ஆலமரத்தைக் கண்டால், செய்கின்ற தொழில் மேலும் அபிவிருத்தி அடையும். பொருள் வரவும் சுற்றத்தார் சூழலும் உண்டாகும்.
ஆசியுரை: தன்னைவிட வயதில் மூத்தவர்கள் அல்லது மகான்கள் தன்னை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வதாக கனவு கண்டால், தொழிலில் உயர்வும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் வந்தடையும்.
ஆரஞ்சு: கனவில் ஆரஞ்சுப் பழத்தைக் காண்பவருக்கு, எதிர்பாராத பொருளிழப்பு ஏற்படும். நோய் அல்லது விபத்தில் உடல் காயம் உண்டாகலாம். வீண் பழி சுமத்தப்பட்டு பெயர் கெடவும் கூடும்.
இஞ்சி: கனவில் இஞ்சியைக் கண்டால், நோய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும்.
இனிப்பு: இனிப்பான பலகாரங் களைக் கனவில் காண்பது மிகவும் நல்லது. வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
இளைப்பு: தான் இளைத்து விட்டதுபோல் ஒருவர் கனவு காண்பது, அவரது குடும்பத்தின் நிலை மேன்மையுறும்.
இறந்தவர்கள்: இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு காணின், பெயரும் மேலான புகழும் பெறும் நிலை ஏற்படும்.
இறந்துபோன தாய்-தந்தையர் கனவில் தோன்றுவார்களேயானால், கனவு கண்டவருக்கு அண்மையில் வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறைச் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்பது பொருள். தான் இறந்துவிட்டதுபோல் ஒருவருக்குக் கனவு வருமாகில், நன்மைகளையே குறிப்பிடும் எனலாம். சுக வாழ்க்கை ஸித்திக்கும். எனவே அச்சமுற வேண்டாம். உறவினர் ஒருவர் இறந்து விட்டதுபோல் கனவு காண்பது, அவருடைய துன்பங்கள் நீங்கும் என்பதைக் குறிப்பிடும்.
நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு காண்பவனுக்கு, வெகு விரைவில் நற்செய்தி ஒன்று வரும்.
குழந்தைகள் இறப்பதுபோல் கனவு காண்பது அவருக்கு வரவிருக் கின்ற பேராபத்து ஒன்றைக் குறிப்பிடும். தன்னுடைய மனைவி இறந்துவிட்டாற்போல் கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க இருப்பதைக் குறிப்பிடும். இறந்துபோன மனைவி, மேலுலகில் மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால், வாழ்க்கை நிம்மதியாக அமையும். மாறாக, அவள் முகம் துயரம் தோய்ந்ததாக இருப்பின் வாழ்க்கை நிலையற்றதாகும்.
இரும்பு: இரும்பை கனவில் காண்பவருக்குப் பொதுவாகவே மனோவலிமை மிகுந்திருக்கும். ஆனாலும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். சிலருக்கு கஷ்டங்கள் வந்து நிவர்த்தியாகும். வேறு சிலருக்கோ, தரித்திரத்தை உண்டாக்கும். இரும்பைத் தொட்டு எடுப்பதுபோல் காண்பது மிகவும் கெடுதலானது.
ஈன்ற பசு: பசு கன்று போடுவதைக் கனவில் காண்பது நல்லதல்ல. துன்பங்கள் வந்தடையும். ஆனால் கன்று ஈன்ற பசுவைக் காண்பது செல்வ வளத்தை உண்டாக்கும்.
உத்தியோகம்: ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுவதுபோல் கனவு கண்டால் நற்காலம் நெருங்கி விட்டது என்பதற்கு அறிகுறி. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.
வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதுபோல் கனவு கண்டால், அவ்வாறே செயலில் நிகழவும் கூடும். இல்லையேல், ஏதேனும் நிர்வாகத் தவறுகள் செய்து, மேலிட விரோதத்தைச் சம்பாதிக்க நேரிடலாம்; வருங்கால உயர்வுகளும் பாதிக்கக்கூடும். தொழில் செய்பவர்கள், அதில் பிரச்னைகள் எழுவதாக கனவு கண்டால், தொழிலில் சிக்கல்கள் ஏற்படலாம்.
உழவு: ஒருவர் தாமே உழவுத் தொழில் செய்வதாக கனவு கண்டால், அவரது வாழ்க்கை வளம் அனைத்தையும் பெற்றுத் திகழும்.
உற்ஸவம்: தேரோட்டம் போன்ற திருவிழாக்களைக் கனவில் காணின், உடனடியாக உறவினர் ஒருவரின் மரணச் செய்தியைக் கேள்வியுற நேரிடும்.
உண்ணல்: தான் மட்டும் தனித்து உண்பதுபோல் கனவு காணின் துன்பங்கள் உண்டாகும். உறவினர்களைப் பிரிய நேரிடும். தொழில் நஷ்டம் ஏற்படும்.
அவ்வாறு கனவு காண்பவர் விவசாயியாக இருப்பின் விளைச்சல் மோசமாக இருக்கும்; குடும்பத்தில் சச்சரவுகள் அதிகமாகும்.
பலருடன் சேர்ந்து விருந்தில் உண்பது போல் கனவு கண்டால், உத்தியோக உயர்வு ஸித்திக்கும். திருமணம் ஆகாதவர்கள் இந்தக் கனவைக் கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்கள், விருந்துண்டு மகிழ்வ தாகக் கனவு கண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
ஊற்று: கலங்கல் அற்ற தூய்மையான நீர் ஊற்றைக் கனவில் கண்டால், அவரது வாழ்க்கையில் எவ்வித துன்பமும் தொடராது. ஆனால், கலங்கிய சுத்தமற்ற நீர் ஊற்றை கனவில் காண்பது கஷ்டங்களைக் குறிப்பிடும்.
எதிரிகள்: கனவில் எதிரிகளைக் கண்டால், மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். கனவு காண்பவருக்கு எதிராக சதித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன என்பதை இக்கனவு குறிப்பிடும்.
எலும்பு: கனவில் எலும்பைக் காண்பது விசேஷம். சதைத்திரள் ஒட்டியதாக உள்ள எலும்பைக் கண்டால் விரைவில் அவர் செல்வந்தராகக் கூடும். மனிதரின் எலும்பைக் கண்டால், மூதாதையர் வைத்துச் சென்ற சொத்து அவரை வந்தடையும்.
எழுத்தாணி: எழுதப் பயன்படும் பேனா போன்ற பொருள்களைக் கனவில் கண்டால், கடிதப் போக்குவரத்தால் பொருள் வரவு வரக்கூடும் என்று பொருள்.
எழுதுதல்: எழுதிக் கொண்டிருப்பது போல் ஒருவர் கனவு காணின், நற்செய்திகள் விரைவில் அவரை நாடி வரும்.
எண்ணெய்: எண்ணெயை தனியா கவோ, அதை தேய்த்துக் குளிப்பதாகவோ கனவு காணக் கூடாது. அவ்வாறு கனவு வந்தால், வெகு விரைவில் அவர் நோயால் பாதிக்கக்கூடும். ஆனால், நோயாளிகள் மேற்படி கனவைக் காணில், அவரது நோய் விலகி உடல் ஆரோக்கியமுடையதாக மாறும்.
ஏழ்மை நிலை: கனவில் ஒருவர் தாம் மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து விட்டாற்போல கண்டால், எதிர்பாராத வகையில் அவருக்கு திரண்ட செல்வம் வந்து சேரும். எல்லா வகையிலும் முன்னேறி உயர் நிலையை அடைவார்.
ஏமாற்றம்: ஒருவர் தாம் ஏமாற்றப்பட்டது போல் கனவு கண்டால், தீமை உண்டாக வாய்ப்பு உண்டு. வஞ்சக சூழ்ச்சிகளுக்கு அவர் ஆளாகி பொருள் இழக்க நேரிடும்.
ஏலக்காய்: கனவில் ஏலக்காயைக் காண்பவர், பிறரால் மதிக்கப் பெறும் நிலையை அடைவார். ஏலக்காயை உண்பது போல கனவு காணின், திரண்ட செல்வம் வந்து சேரும்.
ஒட்டடை: வீட்டுச் சுவரில் அல்லது கூரையில் நூலாம்படை அப்பியிருப்பது போல கனவு கண்டால், குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படும்.
ஓட்டம்: தான் ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு காண்பது, நிகழ்கால நிலைமை மேன்மை அடையும் என்பதற்கு அறிகுறியாகும். தொழில் அபிவிருத்தியடையும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஸித்திக்கும்.
ஓசைகள்: கனவில் ஓசைகளைக் கேட்பது நல்லதல்ல. பேரோசையைக் கேட்பது, கள்வர்களால் பொருள் இழப்பு நேர்வதோடு, துன்பம் விளைவதையும் குறிக்கும். சிறிய ஓசையைக் கேட்பதுபோல் வரும் கனவு, வீண் சச்சரவுகள் ஏற்படுவதைக் குறிக்கும்.
ஹோம குண்டம்: கனவில் வேள்விக் குண்டம், ஹோமத் தீ முதலானவற்றைக் காண்பவர், தெய்வ அருள் பெற்றவராகி பல்வேறு நற்பேறுகளையும் அடைவார்.
கடல்: கனவில் கடலைக் காண்பவர்கள், சிறிது முயற்சி செய்தால் வெளிநாடுகளுக்குப் போவதற்கான வாய்ப்பு எளிதாக ஸித்திக்கும். இல்லையேல், அயல் தேசத்தாருடன் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டு பெரும் பொருள் ஈட்டுவர். பிற தேச உறவுடைய அலுவலகங் களில் வேலை கிடைக்கும்.
கண்டங்கள்: ஆபத்து உண்டாக்கும் கண்டங்களில் சிக்கிக் கொள்வதுபோல கனவு காண்பது நன்மையையே தரும். ஆனால், பிறர் கண்டங்களால் பாதிக்கப்பட்டது போல, கனவு காண்பது கெடுதலானது. திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், இப்படி கனவு கண்டால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
கஷ்ட காலம்: கஷ்ட திசையில் சிக்கித் தவிப்பதுபோல் வரும் கனவு, நேர்மாறான பலனைத் தரும். வாழ்க்கையில் உயர்வும் புகழும் ஸித்திக்கும்.
கற்பூரம்: கற்பூரம் எரிவதுபோல் கனவு கண்டால், பிறருக்காக சாட்சி சொல்லவோ அல்லது ஜாமீன் கொடுக்கவோ நேரிடலாம்.
கன்றுக்குட்டி: கன்றுக்குட்டியைக் கனவில் கண்டால், செல்வ சேமிப்பு ஏற்படும்.
காதணிகள்: கனவில் காதணிகளைக் கண்டால், பொன் நகைகள் பலவும் தனக்கு உரிமையாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
காய்கறி: காய்கறிகளைச் சமைப்பதுபோல கனவு காண்பது, நம்பியவர்களின் நம்பிக்கை மோசடியைச் சுட்டிக்காட்டும். காய்கறிகளை உண்பதுபோல கண்டால், பொருள் இழப்பு ஏற்படும். காய்கறிகளைப் பறிப்பதுபோல கனவு கண்டால், சண்டை – சச்சரவுகள் உண்டாகும்.
காக்கை: காக்கை கனவில் வருவது கெடுதலானது. தொழில் அல்லது உத்தியோக பாதிப்பு, விரோதிகளின் சூழ்ச்சி, வீண் விரோதம் போன்ற பல தொல்லைகளை சந்திக்க நேரிடும். காகம் கரைவதாக கனவு காண்பதும் கெடுதலான காலத்தைக் குறிப்பிடும்.
முதியவர்: முதியவர்களைக் கனவில் காண்பது நற்பலன்களை விளைவிக்கும். மிகுந்த செல்வம் வரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். தானே கிழவராகிவிட்டாற்போல ஒருவர் கனவு கண்டால், அவருடைய குடும்பநிலை மேம்படும்; சந்ததிகள் பெருகுவர்.
கிணறு: கனவில் கிணற்றைக் காண்பது நல்லதாகும். மணம் ஆகாதவர்களுக்கு மணமாகும். மணம் ஆனவர்களுடைய குடும்பத்தில், வேறு எவருக்கேனும் திருமணம் நடைபெறும். கிணற்றில் இறங்கி நீந்தும்போது, நீருக்கு மேலே தலையைத் தூக்கியிருப்பது போல கனவு கண்டால், முயற்சிகள் வெற்றி பெறும். மாறாக தலை தண்ணீரில் ஆழ்த்தப்பட்டிருந்தால், வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களும் நஷ்டங்களும் உண்டாகும். கிணற்றிலிருந்து தண்ணீரை எடுப்பதுபோல கனவு காண்பது, நினைத்த செயல்கள் இனிதே முடியும் என்று குறிப்பிடும்.
வியாபாரி ஒருவர் கண்டால், அவருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெண் ஒருத்தி கண்டால், சகல செல்வங்களும் ஸித்திக்கும்.
கீழே விழுவது: கீழே விழுவது போல கனவு கண்டால், பொருள் நஷ்டமடைய நேரிடும்.
குடுகுடுப்பைக்காரர்: கனவில் குடுகுடுப்பைக்காரர்களைக் கண்டால், ஆலோசிக்காமல் எக்காரியத்திலும் இறங்கக் கூடாது; எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவை.
குடிசை: குடிசை ஒன்றில் தாம் வசிப்பதாகக் கனவு காணின், வறிய நிலையை அவர் அடைய நேரிடும் என்பதைக் குறிக்கும். குடிசை தீப்பற்றி எரிவதுபோல் கனவு காணின், வீட்டில் களவு போகலாம்.
குண்டூசி: கனவில் குண்டூசி களைக் காணின், சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
குறட்டை: குறட்டை விடுவது போல கனவு கண்டால், சுக வாழ்க்கை ஸித்திக்கும்.
கூச்சல்: கூச்சல் ஒலிக்கும் இடத்தில் இருப்பதுபோல கனவு கண்டால் உடல் நலம் கெடும். பலர் கூச்சலிட்டு தன்னை நோக்கிப் பேசுவதாக காண்பதும் கெடுதலானது.
கூலி: கூலி வேலை செய்பவர், தனக்குக் கொடுக்கப்பட்ட கூலி குறைக்கப்பட்டது போல கனவு காணின், அவருக்கு தற்போதைய வேலையைவிட பெரிய வேலை கிடைக்கக்கூடும்.
கேலி: பிறர் நம்மை கேலி செய்வதுபோல கனவு கண்டால், தொழிலில் மேம்பாடு, உத்தியோகத்தில் உயர்வு, பொருள் சேர்க்கை உண்டாகும். மாறாக மற்றவர்களை, நாம் கேலி செய்வது போல கனவு கண்டால் பண நஷ்டம், உண்டாகும்.
கைவளையல்: கைவளையல் அணிந்திருப்பது போல் கனவு காணும் மங்கையர்களின் மணவிழா வெகுவிரைவில் நடைபெறும். மணமானவர்கள் எனில், அவர்தம் கணவருக்கு வருமானம் அதிகரிக்கும். கைவளையலைக் கண்டெடுத்தாற் போல கனவு கண்டால், எதிர்பாரா வகையில் பெரும் சொத்து வந்து சேரும். ஆனால், வளையல் உடைத்து விட்டாற்போல காண்பது கெடுதல்.
கொய்யாமரம்: மரம் அல்லது பழத்தைக் காண்பது நல்லது. பழத்தை உண்பதுபோல காணின் நோய்கள் விலகும். தொழில் உயர்வு அடையும். உத்தியோக பதவியும் உயர்வடையும். இந்தக் கனவை விவசாயி ஒருவர் கண்டால், விளைச்சல் செழிக்கும். குழந்தைப் பேறு கிட்டாதவர்களுக்கு மகப்பேறு உண்டாகும். மணமாகாதவர்களுக்கு மணம் நடைபெறும்.
சமயத் தலைவர்கள்: இவர்களைத் தரிசிப்பது போலவோ, இவர்களுடைய உபதேசத்தைக் கேட்பது போலவோ கனவு கண்டால், தெய்வபக்தி மேலோங்கும், வருவாய் மிகுதியாகும்.
சந்திரன்: வானில் சந்திரன் பிரகாசிப்பதுபோல கனவு காணின், லாபங்கள் உண்டாகும். பலரும் விரும்பி நட்பு பாராட்டுவார்கள்.
சந்நியாசம்: சந்நியாசம் மேற்கொள்வதுபோல காணும் கனவு, வர இருக்கும் இடையூறு களையும் இன்னல்களையும் குறிப்பிடும். ஆனால், முடிவில் யாவும் நிவர்த்தியாகி நிம்மதியுண்டாகும். ஆனாலும், இப்படியொரு கனவை மணம் ஆகாதவர்கள் கண்டால், அவர் இல்வாழ்வில் ஈடுபட மாட்டார் என்று கூறலாம்.
சந்தன மரம்: கனவில் சந்தன மரத்தைக் காண்பது நல்லது. வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற்படும். உறவினர்களால் பொருள் உதவி கிடைக்கும்.
சாரைப்பாம்பு: கனவில் இந்த பாம்பை கண்டால், தனக்கு எதிரிகள் இருக்கின்றனர் என்று அறிந்து கொண்டு எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்.
சிவலிங்கம்: கனவில் சிவ லிங்கத்தைக் கண்டால் தெய்வ அருளும், செல்வ வசதியும் உண்டாகும்.
சிங்கம்: கனவில் சிங்கத்தைக் காண்போர், தொழிலில் அல்லது தனது உத்தியோகத்தில் உயர்வு அடைவர். சிங்கத்தைக் கண்டு பயந்தாற்போல கனவு கண்டால், யாவும் நஷ்டமாகவே முடியும். உடல்நலனும் பாதிக்கப்படும்.
சிங்கத்தை நாம் கொல்வது போல் கனவு கண்டால், பகைவர்கள் புறம் காட்டி ஓடுவர் என்று கூறலாம். சிங்கம் நம்மைக் கடித்து விட்டது போல கனவு கண்டால் ஆபத்து களும், சோதனைகளும், கஷ்டங் களும் உண்டாகும்.
சீப்பு: கனவில் சீப்பைக் கண்டால் சிக்கல்கள் உண்டாகும் எனலாம். ஆனால், சீப்பால் தலை வாரிக் கொள்வதுபோல கண்டால், காரிய வெற்றி ஏற்படும். நோயாளி ஒருவர் இந்தக் கனவைக் கண்டால், அவருடைய நோய் விரைவில் குணமாகும்.
சூரிய கிரகணம்: சூரிய கிரகணம் பிடித்திருப்பதாக கனவு காண்பது கெடுதலானது. தொழில் நஷ்டம் ஏற்படும். அதேநேரம், கர்ப்பிணிகள், சூரிய கிரகணங்கள் தண்ணீரில் பட்டு, பிரதிபலிப்பதாக கனவு கண்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தையால் எதிர் காலத்தில் குடும்பம் மிகவும் மேலான நிலையடையும்.
செடிகள்: மலர்கள் நிறைந்த செடிகளைக் கனவில் கண்டால், எண்ணிய செயல்கள் யாவும் நிறைவேறும். பழங்கள் நிறைந்த செடியைக் கண்டால், திரவிய சேர்க்கையும், புத்திர சம்பத்தும் உண்டாகும். ஆனால், காய்கள் மட்டுமே உள்ள செடிகளைக் கண்டால் காரியக் கேடும், பொருள் நஷ்டமும் உண்டாகும்.
செருப்பு: புத்தம் புதிய செருப்பு அணிந்து கொண்டிருப்பதுபோல கனவு கண்டால் சோதனைகளும், கெடுதிகளும் ஏற்படும். கால்களுக்குப் பொருந்தாத செருப்புகளை அணிந்து கொண்டிருப் பதாகவோ, அதனால் கால்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவோ கனவு கண்டால், இல்லற வாழ்க்கையில் இன்பம் இருக்காது.
சோம்பல்: மிகவும் சோம்பலாக இருப்பது போல காணும் கனவு, நிகழ்கால நிலைமை மாற இருத்தலைக் குறிப்பிடும்.
தவசிகள்: தவயோகச் செல்வர்களைக் கனவில் காண்போர், பொதுநல தொண்டில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவார்கள்.
தவம்: தவம் செய்வதாக கனவு கண்டால் இறை அருள் உண்டாகும். உடலுறுதி ஏற்படும். செல்வமும் செல்வாக்கும் மேம்படும்.
தவளை: தவளைகளைக் கனவில் காண்பது நல்லது. தொழிலில் அபிவிருத்தி ஏற்படக் கூடும். தவளைகளைப் பிடிப்பதாகக் காண்பதும் நல்லதே விளைவிக்கும். ஆனால், தவளைகள் கத்துவதாகக் கனவு காண்பது கெடுதலாகும்.
தாலி: மங்கலநாணை கனவில் காண்பது, மேலான பதவிகளைக் கொடுக்கும்; பண வசதியை உண்டாக்கும்; மணமாகாதவர்களுக்கு மணம் நிகழ வைக்கும்.
தித்திப்பு: தித்திப்பு உணவை உண்பதாகக் கனவு கண்டால் தொழில் உயர்வும், பண வரவும், நண்பர் சேர்க்கையும் உண்டாக்கும்.
தீக்குச்சி: கனவில் தீக்குச்சி சம்பந்தப்பட்டவை தோன்றின் திடுக்கிடத்தக்க செய்திகள் வரக்கூடும்.
துணி: துணிகளை வாங்குவது போல கனவு வந்தால், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் எண்ணியவை இனிதே நிறைவேறும்.
தொழிற்சாலை: கனவில் தொழிற்சாலையைக் காண்போருக்கு பரம்பரைச் சொத்து வரக்கூடும்.
தோட்டம்: நாம் தோட்டம் ஒன்றில் உலவுவதுபோல கனவு கண்டால், மகிழ்ச்சிக்குக் குறைவே இல்லை!
நண்டு: கனவில் நண்டைக் கண்டால் முயற்சிக்கும் செயல்களில் பல இடையூறுகள் இன்னல்கள் உண்டாகும். அச்செயல் வெற்றி பெறாது போகக்கூடும். கடலில் பயணம் செல்லும் மாலுமிகள் கனவில் நண்டைக் காண்பது, கப்பலுக்கு பேராபத்தாக முடியும்.
நாவல் பழம்: கனவில் நாவல் பழத்தைக் கண்டால், காரிய ஸித்தி ஏற்படும். தன சம்பத்தும், சந்தான சம்பத்தும் மிகுந்திடும்.
நிச்சய தாம்பூலம்: கனவில் இந்த வைபவத்தைக் காண்பது நல்லது. மணம் ஆகாதவர்கள், இந்த வைபவத்தைக் கனவில் கண்டால், விரைவில் அவர்களுக்குத் திருமணம் நடந்தேறும்.
நீதிமன்றம்: நீதிமன்றத்தைக் காண்பதாகவோ, நாம் நீதிமன்றத்தில் இருப்பதாகவோ கனவு கண்டால், வழக்குகளை எதிர்கொள்ளவோ அதனால் செலவுகளை ஏற்கவோ நேரிடும்.
நெசவாலை: நெசவு தொடர்பான கனவுகள், நன்மை அளிக்கும்.
போர் வீரன்: நாம், ஒரு போர் வீரனாக இருப்பதாகக் கனவு வந்தால், தற்போதையை உத்தியோகத்தை விட்டுவிட நேரிடும். தொழில் செய்வோர் நஷ்டப்பட நேரிடும். போர் நடப்பதாகக் கனவு கண்டால் ஏதேனும் சச்சரவு உண்டாகும்.
மெழுகுவத்தி: கனவில் மெழுகுவத்தி சுடர்விடுவதாகக் கண்டால் மகிழ்ச்சி ஏற்படும்.
மலர்கள்: மலர்கள் பூத்துக் குலுங்குவதுபோல் கனவு வந்தால், நல்ல பலன்கள் கைகூடும். ஆனால், வாடிய மலர்களை கனவில் கண்டால், வியாதி உண்டாகும் என்பது குறிப்பு.
வர்ணம்: நாம் வர்ணம் பூசுவதாக கனவு காண்பது கெடுதல். ஆனால், வர்ணம் அடிக்கும் நபர்களைக் காண்பது நல்லது.
வீணை: ஒருவர் வீணையை இசைக்க, நாம் கேட்டு ரசிப்பதுபோல் கனவு காண்பது நல்லது; சுப காரியங்கள் ஸித்திக்கும்.
கெட்ட கனவுகள் வராமல் இருக்க… மஹாவிஷ்ணு அருளிய ஸ்தோத்திரம்
கெட்ட கனவுகள் வராமல் தடுப்பதோடு சகலவிதமான பாவங்களையும் போக்கி, மோட்சத்தை அருளும் அற்புதமான இந்த ஸ்தோத்திரம், கஜேந்திரன் எனும் யானைக்கு மகாவிஷ்ணு உபதேசித்ததாக, ஸ்ரீமத் பாகவதம் விவரிக்கிறது. இதை, தினமும் படித்து வர, கெட்ட கனவுகள் மட்டுமின்றி, வேறு எவ்விதமான தீவினைகளும் நம்மை அண்டாது!.
யே மாம் த்வாம் ச ஸரஸ்சேதம்
கிரிகந்தர கானனம்
வேத்ர கீசக வேணூனாம்
குல்மானி ஸுரபாதபான்
ஸ்ருங்காணீமானி திஷ்ண்யானி
ப்ரஹ்மணோ மே ஸிவஸ்ய ச
க்ஷீரோதம் மே ப்ரியம் தாம
ஸ்வேதத்வீபஞ்ச பாஸ்வரம்
ஸ்ரீவத்ஸம் கௌஸ்துபம் மாலாம்
கதாம் கௌமோதகீம் மம
ஸுதர்ஸனம் பாஞ்சஜன்யம்
ஸுபர்ணம் பதகேஸவரம்
ஸேஷம் ச மத்கலாம் ஸூக்ஷ்மாம்
ஸ்ரியம் தேவீம் மதாஸ்ரயம்
ப்ரம்ஹாணம் நாரதம்ருஷிம்
பவம் ப்ரஹ்லாதமேவ ச
மத்ஸ்ய கூர்ம வராஹாத்யை-
ரவதாரை: க்ருதானிமே
கர்மாண்யனந்த புண்யானி
ஸுர்யம் ஸோமம் ஹுதாஸனம்
ப்ரணவம் ஸத்யமவ்யக்தம்
கோவிப்ரான் தர்மமவ்யயம்
தாக்ஷாயணீர் தர்ம பத்னீ:
ஸோம கஸ்யபயோரபி
கங்காம் ஸரஸ்வதீம் நந்தாம்
காளிந்தீம் ஸிதவாரணம்
த்ருவம் ப்ரம்ஹரிஷீன் ஸப்த
புண்ய ஸ்லோகாம்ஸ்ச மானவான்
உத்தாயாபரராத்ராந்தே
ப்ரயதா: ஸுஸமாஹிதா:
ஸ்மரந்தி மம ரூபாணி
முச்யந்தே ஹ்யேநஸோச கிலான்
யே மாம் ஸ்துவந்த்யனேனாங்க
ப்ரதிபுத்ய நிஸாத்யயே
தேஷாம் ப்ராணாத்யயே சாஹம்
ததாமி விமலாம் மதிம்
இத்யாதிஸ்ய ஹ்ருஷீகேஸ
ப்ரத்மாய ஜலஜோத்தமம்
ஹர்ஷயன் விபுதாநீக
மாருரோஹ ககாதிபம்
கருத்து: “கஜேந்திரா! என்னை யும், உன்னையும் மட்டுமின்றி, முதலையால் நீ பாதிக்கப்பட்ட இந்தக் குளம், அது அமைந்திருக்கும் இந்த த்ரிகூட மலை, அதன் குகை, காடுகள், மூங்கில்கள், தேவ விருட்சங்கள், இந்த மலையிலுள்ள சிகரங்கள், நானும் பிரம்மனும் சிவனும் வசிக்கும் இடங்கள், எனக்குப் பிரியமான பாற்கடல், வெண்மை நிறமுள்ள ச்வேத தீவு, ஸ்ரீவத்ஸம் என்ற எனது மச்சம், கௌஸ்துபம், வன மாலை, கௌமோதகீ என்ற கதாயுதம், சுதர்சனம், பாஞ்சஜன்யம் என்ற சங்கு ஆகியவற்றை அனுதினமும் தியானிக்க வேண்டும்.
மேலும் கருடன், ஆதிசேஷன், லட்சுமிதேவி, பிரம்மதேவன், நாரதர், பரமேஸ்வரன், பிரகலாதன் ஆகியோரையும், மச்சம், கூர்மம், வராஹம் முதலிய அவதாரங்களில் என்னால் செய்யப் பட்ட புண்யமான சரிதங்களையும், சூரியனையும், சந்திரனையும், அக்னியையும், ப்ரணவத்தையும் ஸத்யமான பரம்பொருளையும், பசுக்களையும், வேத வித்துக்களையும், அழியாத தர்மத்தையும், தட்சனின் பெண்களான தர்மதேவதையின் பத்தினிகளையும், சந்திரன், கச்யபர் ஆகியோரின் பெருமைகளையும், கங்கை, சரஸ்வதி, யமுனா ஆகிய நதிகளையும், ஐராவதம், துருவன், பிரம்ம ரிஷிகள் எழுவர், புண்ணிய சரித்திரம் உள்ள நளன், தருமபுத்திரர் ஆகியோரைக் குறித்த சிந்தனைகளுடன், எனது ரூபங்களை… விடியற்காலையில் எழுந்ததும் பரிசுத்தர்களாகவும். ஒருமைப்பட்ட மனமுடையவர்களாகவும் இருந்துகொண்டு எவரொருவர் தியானிப்பார்களோ, அவர் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபடுவார்.
அனு தினமும் அதிகாலையில் இந்த ஸ்தோத்திரங்களை எவர் படிக்கிறாரோ, அவருடைய மரண காலத்தில் சிறந்ததான மோட்சத்தை அளிப்பேன்” என்று கஜேந்திரன் எனும் யானைக்கு திருவருள் புரிந்த மகாவிஷ்ணு, தன்னுடைய சங்கை எடுத்து முழங்கிவிட்டு, தேவர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துவிட்டு, கருடன் மீது ஏறிச் சென்றார்.
ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருவாக்குப்படி, இந்த தெய்வ ஸ்தோத்திரத்தை அனுதினமும் உடல்-உள்ள சுத்தியோடு பாராயணம் செய்து, மகிழ்வான வாழ்வைப் பெறுவோம்.
– See more at: http://www.manithan.com/news/20160929121820#sthash.WP3ZV1it.dpuf