நீண்ட நாள் தலைவலியா… மூளையில் கட்டி இருக்கலாம்

416

 

நீண்டநாள் தலைவலிக்கு ஆளாகுபவர்கள் அதற்குரிய சிறப்பு சிகிச்சைக்குரிய டாக்டர்களை பார்ப்பது அவசியம். ஏனென்றால் சிலருக்கு மூளையில்  கட்டி மெதுவாக வளரும். சிலருக்கு வேகமாக வளரும். சிலருக்கு மூளையில் ரத்தம் கொஞ்சமாகவோ, அதிகமாகவோ கசியும். அதை கண்டறிந்து  உரிய சிகிச்சை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் வாந்தி, கை கால் வலிப்பு, நன்றாக இருக்கும்போதே மாறி, மாறி பேசுவது, மயக்கம் அடைதல்  ஏற்படும். இவற்றில் ஒன்றோ, சிலதோ, அனைத்துமோ ஏற்படும். அத்தகைய பாதிப்பிற்கு ஆளாகாமல் இருக்க உடனடியாக ஸ்கேன் மூலம்  பரிசோதனை மேற்கொண்டு அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டும். ரத்தக்கசிவை நிறுத்த வேண்டும்.

உடம்பின் வெளிப்பகுதியில் கட்டி ஏற்பட்டால் அதனால் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. மூளைக்குள் ஏற்படும் கட்டி வளரும்போது அது வளர்வதற்கு  இடமில்லாமல் உள்நோக்கியே வளரும், அத்தகைய கட்டி மூளையை நெருக்குவதால் மூளையின் செயல்திறன் தடைபடும். உடல் இயக்கத்தின்  ஆதாரமான மூளை பாதிக்கும்போது, உடல் செயல்பாட்டிற்கு கேடு ஏற்படும். மூளையில் கட்டியோ, ரத்தக்கசிவோ இருப்பது கண்டறியப்பட்டால் கவனம்  தேவை. ரத்த கொதிப்பு உள்ளவர்கள், சிகரெட் பிடிப்பவர்கள், உடம்பில் கொழுப்பு அதிகமுள்ளவர்கள் ஆகியோருக்கு ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு  அதிகம் உள்ளது.

ரத்தக்குழாயில் ஏற்படும் அழுத்தத்தால் ரத்தக்குழாய் பலூன் மாதிரி உப்பி வெடிக்கலாம். அதனால் கூட தலைவலியும், மயக்கமும் ஏற்படலாம்.  அவர்கள் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இது தவிர தற்போது இருசக்கரத்தில் வேகமாக செல்லும்போது  விபத்திற்குள்ளாவது, ஹெல்மெட் போடாததால் தலை பாதிப்புக்குள்ளாவது, வீட்டிலோ, வெளியிலோ கீழே விழுந்து தலை காயம் ஏற்படுவது, யாராவது  தாக்குவதன் மூலம் தலையில் காயம் ஏற்படுவது ஆகியவற்றாலும் சிலருக்கு தலைவலி, மயக்கம் அல்லது சில நிமிடங்கள் அவ்வப்போது மயக்கம்,  வாந்தி, தலை சுற்றல் ஆகியவை ஏற்படும். அதுவும் ரத்தக்கசிவு காரணமாக இருக்கலாம்.

இத்தகைய சூழ்நிலைக்கு ஆளாகுபவர்கள் உடனடியாக ஸ்கேன் செய்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிலருக்கு விபத்து, கீழே விழுதல்,  தாக்குதல் காரணமாக உடனடியாக எந்த வித பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும் 2 அல்லது 3 மாதத்திற்கு பிறகு ரத்தக்கசிவோ, கட்டியோ ஏற்படும்.  அப்போது ஏற்படும் அறிகுறிகளை உணர்ந்து தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை பரிசோதனை மூலம் உறுதி செய்து ஆபரேஷன் மூலம் குணப்படுத்த  வேண்டிய நிலை வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்

SHARE