நாட்டில் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை, 3 ஆயிரத்து 844 பரீட்சை நிலையங்களிலும், 542 இணைப்பு மத்திய நிலையங்களிலும் நடைபெறவுள்ளது.
இந்த முறை பரீட்சைக்கு 4 இலட்சத்து 7 ஆயிரத்து 129 பாடசாலை பரீட்சார்த்திகளும், 11 ஆயிரத்து 367 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்கலாக 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
கோவிட் தொற்று உறுதியான பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்தப் பரீட்சைக்கு 590 விசேட தேவையுடையவர்களும் தோற்றவுள்ளனர்.
இந்தநிலையில், பரீட்சைக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சைக்குரிய ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.
இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத தனியார் பரீட்சார்த்திகள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
இதேவேளை, க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை பணிக்குழாமினர் பரீட்சை மண்டபங்களுக்குச் செல்வதற்காக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து சாலைகளில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் மற்றும் பணிக்குழாமினரின் வாகனங்களுக்கான டீசலை விநியோகிக்கும் பணிகள் தற்போது இடம்பெறுகின்றன.
அத்துடன் வரிசைகளில் காத்திருக்காது நாடளாவிய ரீதியாகவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோலை பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பொதுமக்களைக் கோரியுள்ளார்.
பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் உரிய ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் நாட்களில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.