நேதாஜி ஆவணங்கள் வெளியீடு : மத்திய அரசிற்கு நேதாஜி உறவினர் கோரிக்கை

325

கோல்கட்டா : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஆவணங்களை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (செப்டம்பர் 18ம் தேதி )வெளியிட்டுள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கைக்கு, நேதாஜியின் உறவினர் சந்திரபோஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஆவணங்களை மேற்குவங்க அரசு இன்று (செப்.,18) காலை 9.30 மணிக்கு வெளியிட்டுள்ளது. மொத்தம் 64 ஆவணங்களை மேற்குவங்க அரசு வெளியிட்டுள்ளது. 12,744 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை கோல்கட்டா போலீஸ் கமிஷ்னர் சுரஜீத் வெளியிட்டார். வெளியிடப்பட்ட நேதாஜி குறித்த ஆவணங்கள் பிரத்யேக டெமைன் மூலம் வெளியிடப்பட உள்ளதாகவும், கோல்கட்டா போலீஸ் அருங்காட்சியகத்திலும் இந்த ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாகவும், செப்டம்பர் 21ம் தேதி முதல் இந்த ஆவணங்கள் பொது மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளியிட்டப்பட்ட ஆவணங்களில், நேதாஜியின் இறப்பு குறித்த மர்மங்களுக்கு விடை ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் நேதாஜி அவரது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதங்கள், இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது, அரசுக்கும் உளவாளிகளுக்கும் இடையேயான தகவல் தொடர்பு உள்ளிட்ட விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நேதாஜியின் குடும்பத்தினர் அரசால் உளவு பார்க்கப்பட்டதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளது. அமெரிக்காவோ, இங்கிலாந்தோ நேதாஜி இறந்ததற்கான ஆதாரங்களை அளிக்கவில்லை. அதேசமயம், நேதாஜி உயிருடன் வந்து விடுவாரோ என்ற பயம் ஆங்கிலேயர்களிடம் இருந்துள்ளது. இது போன்ற நேதாஜி தொடர்பான பல முக்கிய ரகசியங்கள் அந்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த ஆவணங்கள் நேதாஜியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேதாஜி ஆவணங்கள் வெளியீடு தொடர்பாக, சந்திரபோஸ் மேலும் கூறியுள்ளதாவது, நேதாஜி குடும்பத்தினரை முன்னாள் பிரதமர் நேருவின் உத்தரவின்பேரில், அப்போதைய ஆளும்கட்சியான காங்கிரஸ் அரசு உளவு பார்த்துள்ளதாக வந்துள்ள தகவல் எங்களுக்கு மி்கவும் அதிர்ச்சியாக உள்ளது. சுதந்திர இந்தியாவில், இதுபோன்ற நடவடிக்கைகள் மற்ற நாடுகளுக்கிடையே, இந்தியாவிற்கு எதிரான கருத்துகளையே உருவாக்கியுள்ளது.

உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட காங்கிரஸ் அரசில் ஈடுபட்டவர்கள் மீது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று சந்திரபோஸ், மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE