நோர்வேஜியன் அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி

185

நோர்வேஜியன் அரசாங்கம் இலங்கைக்கு 60 மில்லியன் குரோனர் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.

கண்ணிவெடிகளை அகற்றும் செயற்திட்டத்திற்கு 3 வருட கால அடிப்படையில் குறித்த நிதியுதவியை நோர்வே அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளது.

இது குறித்து நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் மேரி எரிக்சென் சோரேடைட் தெரிவிக்கையில்,

இலங்கை நிலக்கண்ணிவெடியினால் பெரிதும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. ஆனால் இலங்கை கண்ணிவெடி அற்ற நாடு என்ற இலக்கை அடைய முன்னேறுகின்றது. இந்த இலக்கை இலங்கை அடைவதற்கு நோர்வே அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது.

நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையானது நல்லிணக்க முயற்சிகளுக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது. நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டால் தான் யுத்தத்தின்போது வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பாக தமது சொந்த வீடுகளுக்கு திரும்புவதற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, நோர்வே நாட்டிற்கான இராஜாங்கச் செயலாளர் மரியன் ஹேகனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே நோர்வே அரசாங்கம் இலங்கையில் கண்ணிவெடி அகற்றலுக்கு நிதியுதவி வழங்கும் நிலைப்பாட்டை அறிவித்தார்.

சர்வதேச அமைப்புக்கள் மற்றும் உள்ளூர் அமைப்புக்களின் உதவியுடன் விரைவான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த 2018 டிசம்பரில் 94 வீதமான நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இலங்கையில் நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு நோர்வே அரசாங்கம் ஆதரவளிக்க முன்வந்துள்ளது என இதன்போது அவர் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டியில் நோர்வே அரசாங்கம் 18 நாடுகளில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிக்காக 325 மில்லியன் குரோனர்களை வழங்கியிருந்தது. இந்நிலையில் குறித்த நிதியுதவி இவ்வாண்டும் நீடிக்கப்படுகின்றமை குறிப்பிடதக்தக்கது.

SHARE