இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த கொடூரமான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் சமாதானத்தை உருவாக்கும் நோக்குடன் நோர்வே நாடு சுமார் ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலம் இலங்கையில் அனுசரணை முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததை அனைத்துலகமும் நன்கறியும். இந்த முயற்சியை முன்னெடுப்பதற்காக அந்நாடு அங்குள்ள சிறிய கட்சியொன்றின் தலைவரும், அமைச்சருமான எரிக் சோல்கெய்ம் என்பவரை நியமித்திருந்ததும் அனைவரும் அறிந்த விடயம்.
நோர்வேயின் இந்தச் சமாதான தூதுவர் எண்ணற்ற தடவைகள் இலங்கை யுத்தத்தில் ஈடுபட்டு வந்த இரு தரப்பினருடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தியதுடன், ஒவ்வொரு தடவையும் இந்தியாவுக்கும் சென்று பேச்சுவார்த்தையின் பெறுபேறுகளை விளக்கி வந்தார்.
அத்துடன் தாய்லாந்து, யப்பான், சுவிஸ்லாந்து, நோர்வே எனப் பல நாடுகளில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி உயர்மட்டச் சந்திப்புகளையும் நோர்வே ஏற்பாடு செய்தது.ஆனாலும் நோர்வேயின் அனுசரணையுடன் நடந்த இப்பேச்சுவார்த்தைகள் உருப்படியான பயன் எதையும் தரவில்லை. இறுதியில் தோல்வியிலேயே முடிந்தது. அதற்குப் பிரதான காரணம் புலிகளின் விட்டுக்கொடுக்காத போக்கும், புதிது புதிதாக அவர்கள் முன்வைத்த நிபந்தனைகளும்தான் என்பதை, நோர்வே உட்பட அனைவரும் அறிவர். இப்பொழுது நோர்வே அரசு தனது சமாதான முயற்சிகள் தோற்றதற்கான காரணங்கள், அது சம்பந்தமான தனது கருத்துகள் மற்றும் எதிர்காலத்தில் தமிழர்களும் இலங்கை அரசும் செய்ய வேண்டியவை என்பன குறித்து ஒரு நீண்ட அறிக்கையை. வெளியிட்டுள்ளது.
அத்துடன் நோர்வேயின் சமாதான முயற்சிகளை முன்னெடுத்த எரிக் சோல்கெய்ம் தனது கருத்துகளையும் பி.பி.சி. செய்திச் சேவைக்கூடாக வெளியிட்டுள்ளார்.
நோர்வேயின் அறிக்கையையும், சோல்கெய்ம்மின் கருத்துக்களையும் இலங்கை அரசும் புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிப் பினாமிகளும் தத்தமது நிலைப்பாடுகளிலிருந்து விமர்சித்தும் கண்டித்துமுள்ளனர். பரபரப்பையும் சிலுசிலுப்பையும் ஏற்படுத்தி பணம் சம்பாதிப்பதிலும், மக்களைத் தவறாக வழி நடாத்துவதிலும், எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக இருக்கும் முதலாளித்துவ ஊடகங்கள், நோர்வேயின் அறிக்கையை வழமைபோல தலைப்புச் செய்திகளாக்கிவிட்டு ஓய்ந்துவிட்டன. நோர்வேயின் அறிக்கையிலுள்ள முக்கியமான விடயங்களை – குறிப்பாக சோல்கெய்ம் தமிழர்களையும் அரசையும் நோக்கிச் சொன்ன முக்கியமான கருத்துகளுக்கு இந்த ஊடகங்கள் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.
இலங்கை ஊடகங்களைப் பொறுத்தவரை அவ்வாறு செய்தமைக்கு ஒரு காரணமுண்டு. அதாவது நோர்வேயின் அனுசரணை முயற்சியை ஆரம்பம் முதலே இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் சந்தேகக் கண்கொண்டே நோக்கி வந்துள்ளனர். அந்தச் சந்தேகங்கள் இரண்டு வகையானவை. ஒன்று, நோர்வே மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு கருவியாக இலங்கைப் பிரச்சினையில் நுழைக்கப்பட்டுள்ளது என்ற கருத்தாகும்.
இரண்டாவது, நோர்வே புலிகளுக்குச் சார்பாகச் செயல்படுகின்றது என்பதாகும். உண்மையில் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கமே நோர்வேயை இலங்கையில் சமாதான முயற்சிகளுக்கு அழைத்தது என்ற போதிலும், நோர்வேயின் செயற்பாடுகள் இலங்கை மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையிலேயே இருந்து வந்துள்ளன.
உண்மையில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு 1987ல் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தமே ஓரளவு நீதியான, நடைமுறைச் சாத்தியமான தீர்வு ஒன்றைக் கொண்டு வந்தது. ஆனால் அன்று நிலவிய அமெரிக்க – சோவியத் பனிப்போர் காரணமாக, சோவியத் யூனியனுக்குச் சார்பான இந்தியா மேற்கொண்ட அந்த ஒப்பந்தத்தைச் சீர்குலைத்து, இலங்கையில் தமது காலை ஊன்றுவதற்கு ஏகாதிபத்திய சக்திகள் தீர்மானித்தன. அதற்கு விடுதலைப் புலிகளைப் பகடைக் காய்களாக உபயோகிக்கலாம் என அவை கண்டு கொண்டன. புலிகளின் அதிகார வெறி அதற்குப் பொருத்தமாக இருந்தது. எனவே புலிகள் அதனடிப்படையில் அந்த ஒப்பந்தத்தை நிராகரித்ததுடன், இந்திய அமைதிப்படையுடன் யுத்தத்திலும் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த யுத்தத்தில், புலிகள் இந்தியப் படையினால் முற்றுமுழுதாக அழிக்கப்படும் நிலையில் இருந்தனர். இந்தக் கட்டத்தில் புலிகள் தாம் சொல்லி வந்த அடிப்படைக் கொள்கைளைக்கூட மறந்து (சிங்களப் பேரினவாதத்தை எதிர்ப்பது, தமிழீழம் அமைப்பது) மோசமான சிங்களப் பேரினவாதியும், ஏகாதிபத்திய விசுவாசியும், அன்றைய ஜனாதிபதியுமான ஆர்.பிரேமதாசவின் உதவியை நாடி, இந்திய அமைதிப்படையை நாட்டைவிட்டு வெளியேற வைத்துத் தப்பிப் பிழைத்துக் கொண்டனர். இந்த ஏற்பாட்டைச் செய்வதில், ஏகாதிபத்தியத் தரகரும், புலிகளின் அரசியல் ஆலோசகருமான அன்ரன் பாலசிங்கம் முக்கிய பங்கு வகித்தார்.
புலிகள் இந்திய அமைதிப்படையை வெளியேற்றியதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தம் உருவாகிய காலத்தில் இந்தியப் பிரதமராகவிருந்த ராஜீவ் காந்தியை, இந்தியாவில் வைத்து – அதுவும் தமிழக மண்ணில் வைத்து மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்தனர். அதன் மூலம் இந்தியாவை இலங்கைப் பிரச்சினையிலிருந்து ஒதுங்க வைத்து, இலங்கையின் கள நிலவரத்தை ஏகாதிபத்தியத் தலையீட்டுக்குச் சாதகமான முறையில் ‘துப்பரவு’ செய்து வைத்தனர்.
அதன்பின்னர், புலிகள் வடபகுதி முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பிரேமதாச அரசுடன் கடுமையான யுத்தத்தை ஆரம்பித்ததுடன், இறுதியில் பிரேமதாசவையும் கொலை செய்தனர். அதன் பின்னரும் ஏகாதிபத்தியவாதிகள் தமக்கு விசுவாசமானவர் ஒருவரை இலங்கையின் ஜனாதிபதியாகக் கொண்டுவர முயன்ற போதிலும், 17 வருட ஐ.தே.க அரசின் கொடுமை தாங்காத இலங்கை மக்கள் சந்திரிகாவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர். ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பரியக் குடும்பத்திலிருந்தும், அரசியலிலிருந்தும் வந்த சந்திரிகா, இனப்பிரச்சினைக்கும் ஒரு நியாயமான தீர்வைக் காண விரும்பினார்.
ஆனால் ஏகாதிபத்திய சக்திகள் அதற்கு இடமளிக்கத் தயாராகவிருக்கவில்லை. அவர்கள் அரசியல் ரீதியாக முரண்பட்ட, ஆனால் இனவாத அடிப்படையில் ஒன்றுபடக்கூடிய ஐ.தே.க, ஜே.வி.பி, புலிகளால் வழிநடாத்தப்பட்ட தமிழர் விடுதலைக்கூட்டணி, ஹெல உறுமய, விக்கிரபாகு கருணரத்ன என அனைவரையும் ஓரணியில் திரட்டியதுடன், சந்திரிகாவின் அரசிலிருந்த சிலரையும் உடைத்தெடுத்து, சந்திரிகாவின் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகளுக்குக் குழி பறித்தனர். அத்துடன் புலிகள் முன்னெப்போதையையும்விட மிகவும் உக்கிரமான முறையில் அரச படைகள் மீதான தாக்குதலையும் ஆரம்பித்தனர்.
இவ்வாறான ஒரு கடுமையான சூழலை உருவாக்கி சந்திகாவுக்கு நெருக்கடியைக் கொடுத்து, சர்வதேச மத்தியஸ்தம் ஒன்றுக்குச் செல்லுமாறு அவரை நிர்ப்பந்தித்தனர். அதன் விளைவாகவே சந்திரிகா நோர்வேயை அனுசரணையாளராக அழைக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் நோர்வே இலங்கை அரசுடனும் புலிகளுடனும் சமமான பாரபட்சமற்ற செயற்பாடுகளைக் கொண்டிருந்த போதிலும், ஏகாதிபத்திய சக்திகளின் நோக்கங்கள் காரணமாகவும், நோர்வே இலங்கையின் வடக்குக் கிழக்கின் கரையோரப் பகுதிகளில் கொண்டிருந்த பொருளாதார அபிலாசைகள் காரணமாகவும், ஒரு பக்கச் சார்பாக – அதாவது புலிகள் சார்பாகச் செயற்படத் தொடங்கியது என்பதே, இலங்கையின் பெரும்பாலான அரசியல் நோக்கர்களின் அபிப்பிராயமாகும்.
இந்தச் சூழ்நிலையில்தான், 2002ல் ஏகாதிபத்திய சார்பான ஐக்கிய தேசியக் கட்சி, ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்றப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மேற்குலகின் ஆலோசனையுடனும் நிர்ப்பந்தத்துடனும், ரணிலின் அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் சமாதான ஒப்பந்தமொன்றை நோர்வே நிறைவேற்றியது.
இந்தச் சமாதான ஒப்பந்தம் மூலம், புலிகளுக்கு இலங்கை அரசிடமிருந்து பல விட்டுக் கொடுப்புகளையும் சலுகைகளையும் நோர்வே பெற்றுக் கொடுத்தது. அத்துடன் இந்தச் சமாதான ஒப்பந்த காலத்தை, புலிகள் தம்மை இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பலப்படுத்திக் கொள்வதற்கு நன்கு பயன்படுத்திக் கொண்டனர். ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி புலிகளின் பிரமுகர்கள் இராஜதந்திர கடவுச் சீட்டுக்களைப் பெற்று, உலகம் முழுவதும் பயணம் செய்து, புலம்பெயர் தமிழர்களிடம் பெரும் தொகை பணத்தை வசூல் செய்ததுடன், நவீன ஆயுதங்களையும், தொழில்நுட்ப சாதனங்களையும், விமான உதிப்பாகங்கள், அதிவேகப் படகுகள், மருந்து வகைகள் எனப் பலவற்றை வாங்கிக் குவித்தனர்.
நோர்வேயும் தனது பங்குக்கு புலிகளுக்கப் பல உதவிகளைச் செய்துள்ளமை இரகசியமானதல்ல. இந்தக் காலத்தில் புலிகளின் சில நூறு முக்கிய உறுப்பினர்கள் கல்வி கற்பதற்கு என குறிப்பிட்ட கால அட்டவணை விசா பெற்று நோர்வே செல்வதற்கு நோர்வே அரசு ஏற்பாடுகள் செய்து கொடுத்தது. அவர்களில் பலர் கல்வி கற்கும் காலம் முடிந்தும்கூட, நாடு திரும்பாமல் நோர்வேயிலேயே தங்கியிருப்பதற்கு நோர்வே அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் நோர்வே புலிகளுக்கு இந்த சமாதான ஒப்பந்த காலத்தில் பெருந்தொகைப் பணம், தொலைத் தொடர்புக் கருவிகள் வழங்கியதாகவும், புலிகளுக்கு இராணுவ ரீதியான பயற்சிகள்கூட வழங்கப்பட்டதாகவும் இலங்கையிலுள்ள சில அமைப்புகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அதுமாத்திரமின்றி, அமெரிக்காவும் கனடாவும் பிரித்தானியாவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாகத் தமது நாடுகளில் தடைசெய்து, அதை இன்று வரையும் தொடர்கையில,; நோர்வே அவ்வாறு செய்யாததுடன், இலங்கை அவ்வாறு செய்யும்படி பல தடவை வலியுறுத்தியும் நோர்வே புலிகளைத் தடை செய்வதற்கு இன்றுவரை மறுத்தே வருகின்றது. புலிகளில் இரண்டு சர்வதேசப் பிரிவுகளில் ஒன்றான, இன்னமும் வன்முறைப் பாதையை தீவிரமாக வலியுறுத்தி வருகின்ற குழுவுக்குத் தலைமை தாங்குகின்ற நெடியவன் என்பவர், நோர்வேயைத் தளமாகக் கொண்டுதான் தற்பொழுதும் செயற்பட்டு வருகின்றார்.