இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தின் காட்சிகள் இந்தோனேசியாவில் முழுமையாக தெரிந்தன. இதனை காண்பதற்காக ஏராளமான பயணிகள் அந்நாட்டுக்கு படையெடுத்தனர்.சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியஒளி மறைக்கப்படுகிறது. அதுவே சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது.
இதற்கு முன்பு முழு சூரிய கிரகணம் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்டது. அதற்கு பிறகு சூரிய கிரகணம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் 8ம் திகதி மாலையும் மற்ற பகுதிகளில் 9ஆம் திகதி காலையும் இந்த கிரகணம் ஏற்பட்டது மற்ற நாடுகளை விட இந்தோனேசியாவில் கிரகணத்தின் காட்சிகள் முழுமையாக தெரிந்தன. 33 ஆண்டுகளுக்கு பிறகு அந்நாட்டில் சூரிய கிரகணம் தெரிந்ததால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்நாட்டில் குவிந்தனர். அவுஸ்திரேலியா மற்றும் ஒருசில தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்த கிரகணம் தெரிந்தது. பார்வையாளர்களின் இருப்பிடத்தை பொருத்து இந்த கிரகணம் 90 வினாடிகள் முதல் 5 நிமிடங்கள் வரை தெரிந்தது. குறிப்பாக, இந்தோனேசியா மற்றும் பசிபிக் நாடுகளில் முழுமையாக ஏற்பட்டது. இந்தோனேசியாவில் பகல்நேரத்தில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. இந்தோனேசியாவில் பைலிடங் மாகாணத்தில் முழுசூரிய கிரகணமும் மிகத்தெளிவாக தெரிந்தது. அங்குள்ள ஆலிவியர் கடற்கரையில் திரளாக கூடிநின்ற பொதுமக்கள் சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனர். |