பகல் நேர மின்சார தடை விரைவில்!

301

தற்போதைய பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக நாளாந்தம் இரண்டரை மணித்தியாலங்களுக்கு திட்டமிடப்பட்ட மின்சார விநியோகத்தை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மின்சக்தி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் P.W. ஹெந்தஹேவா இந்த பரிந்துரையை மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவுக்கு அனுப்பியுள்ளார்

இதன்படி முற்பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு மணி நேர மின்சார விநியோகத் தடையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வரும் உச்ச நேரங்களில் 45 நிமிடங்களுக்கு இரண்டு முறை மின்சார விநியோகத்தடையும் அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சாரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டொலர் நெருக்கடி காரணமாக அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதில் இருந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) விலகியுள்ளது.

அத்துடன் நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகு மற்றும் கெரவலப்பிட்டி யுகதனவி ஆலையின் ஒரு பகுதி பராமரிப்புக்காக மூடப்பட்டமை மற்றும் களனிதிஸ்ஸ 115 மெகாவாட் எரிவாயு விசையாழி ஆலையில் ஏற்பட்ட பழுதினால் மின்சார விநியோகத்தடையை அமுல்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

SHARE