பாடங்களை இலகுவாக கற்க பல வழிகள் உள்ளன. ஆனால் எமக்கு இலகுவான முறையிலும் மற்றும் எம்மால் அதிக பயனைப்பெற்றுக்கொள்ளக் கூடிய வழி என்னவென்று கண்டுபிடித்தல் அவசியமாகும்.
ஆசிரியர் கற்பிக்கும் போது பாடங்கள் விளங்காவிடிலும் கூட அவர் கூறும் விடயங்களை அவதானித்தல் அவசியமாகும். ஆசிரியரால் கூறப்படும் விடயங்களை கிரகிக்காவிட்டாலும் அவதானித்தல் என்பது மிக முக்கியமாகும். அவ்வாறு அவதானிப்பதன் மூலம் சில விடயங்கள் எந்த வித சிரமமும் இன்றி மனதில் எளிதாக பதியும்.
இதன் படி நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிகளை சற்றே ஆராய்வோம்,
1. ஒரு பாடத்தை எடுத்து, கவனத்தை சிதர விடாது வாசித்து முடிக்க வேண்டும்.
2. பாடத்தை வாசித்த பின்பு பாடத்தில் உள்ள தலைப்புகள் உட்பட அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நாமே நமக்கு கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் அப்பாடப்பகுதியின் மீதான விருப்பத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.
3. பின்பு மீண்டும் அப்பாடத்தை அர்த்தம் விளங்கும் படியாக நமக்கு ஏற்கனவே அப்பாடப்பகுதி பற்றி தெரிந்த விடயங்களுடன் தொடர்புபடுத்தி படிக்கவேண்டும். (இந்த இடத்தில் தான் ஆசிரியர் கற்பிக்கும் போது நாம் அவதானித்த விடயங்கள் தேவைப்படும்)
4. பாடப்பகுதியை வாசித்து முடித்த பின் அப்பாடப்பகுதியில் நீங்கள் முக்கியமாக கருதும் விடயங்களை மட்டும் சிறு குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிறுகுறிப்பு எடுக்கும் போது ஒருபோதும் பாடப்புத்தகத்தை பார்த்தல் ஆகாது.
5. ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய நேரத்தை ஒதுக்கி அப்பாடப் பகுதிக்கான சிறுகுறிப்பை வாசிப்பதன் மூலம் ஞாபகமறதியை தவிர்க்க முடியும்.