சிங்கள மக்களிடம் ஆதரவும் அனுதாபமும் தேடிக் கொள்வதே கோத்தாபய ராஜபக் ஷவினதும் மஹிந்த தரப்பினதும் இலக்காக இருக்கிறது. இதனை வைத்து சிங்கள மக்களை எப்படித் தமது பக்கம் திருப்ப முடியும் என்பது ராஜபக் ஷவினருக்கு நன்றாகவே தெரியும்.
படையினரைப் பாதுகாப்பது என்ற பெயரில் அவர்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளத் தான்
முற்படுகிறார்கள் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் சிங்கள மக்கள் கண்மூடித்தனமாக ஆதரவு அளிப்பார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஜெனீவாவில் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்திருக்கின்றன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வடக்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, கிளிநொச்சியில் வைத்து இதற்குப் பிள்ளையார் சுழியைப் போட்டிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கம், போர்க்குற்றங்கள் தொடர்பான விவாதங்களைக் கிளப்பி விடுவதல்ல.
அவருக்குத் தேவையானது, போர்க்குற்றங்களை இரண்டு தரப்புகளும் மறந்து, மன்னித்து விட வேண்டும் என்பது தான். அதனை வலியுறுத்தப் போய் அவர் தமிழ் மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதேவேளை, போர்க்குற்றங்களே நடக்காத நிலையில் போர்க்குற்றங்களை இரண்டு தரப்புகளும் மறந்து விட வேண்டும் என்று கூறியுள்ளதன் மூலம், போர்க்குற்றங்கள் நடந்திருப்பதை பிரதமர் ரணில் ஒப்புக்கொண்டு, இராணுவத்தினரையும் நாட்டையும் காட்டிக் கொடுத்து விட்டார் என்று மஹிந்த தரப்பினரும் சிங்கள அடிப்படைவாத சக்திகளும் அவரைத் தாக்க ஆரம்பித்திருக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க போர்க்குற்றங்கள் நடந்ததை ஒப்புக்கொண்டு விட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியதை வைத்துக் கொண்டு தான், மஹிந்த தரப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான தற்போதைய பிரசாரப் போரை ஆரம்பித்தது.
மஹிந்த தரப்பின், தாக்குதல் ஆரம்பித்த பின்னர், கிளிநொச்சியில் போர்க்குற்றங்கள் பற்றி மறைமுகமாக கூறியவற்றை ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் வைத்து வெளிப்படையாகவே கூறினார்.
மஹிந்த ராஜபக் ஷவும், கோத்தாபய ராஜபக்ஷவுமே போர்க்குற்றங்களை ஊக்குவித்தனர். அதனை அனுமதித்தனர் என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தநிலையில் தான், போர்க்குற்றங்கள் இப்போது கொழும்பு அரசியலில் பிரதான
பேசுபொருளாக மாறியிருக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்கள் நடக்கின்ற போது, பொதுவாகவே தமிழர் தரப்பு தான் போர்க்குற்றங்கள் என்ற விடயத்துக்கு முன்னுரிமை கொடுத்து போராட்டங்களை நடத்துவது வழக்கம். இந்தமுறை நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது.
இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்கள் நடந்தன என்றும் நடக்கவில்லை என்றும் சிங்கள அரசியல் தலைமைகள் மாத்திரமன்றி, படை அதிகாரிகளுக்குள்ளேயும் கூட முரண்பாடுகள் வெடித்திருக்கின்றன. இது 10 ஆண்டுகளாக போர்க்குற்றங்களுக்கான நீதியைக் கோரி போராட்டங்களை நடத்தி வருகின்ற தமிழர் தரப்புக்கு சாதகமான ஒரு நிலையாகும்.
ஏனென்றால், இதுவரை தமிழர் தரப்பில் இருந்து மாத்திரமே போர்க்குற்றங்கள் நடந்தன என்று பேசப்பட்டது. இப்போது அப்படியல்ல,
போர்க்குற்றங்களுக்கான நீதி வழங்கப்படுகிறதோ இல்லையோ, போர்க்குற்றங்கள் நடந்தன என்று ஒப்புக்கொள்ளும் நிலை ஒன்று தெற்கிலும் உருவாகியிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்களை வைத்துக் கொண்டு அவர் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார், இராணுவத்தினருக்கு துரோகம் இழைத்து விட்டார் என்று சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வதில் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது ஆதரவு அரசியல்வாதிகளும், கோத்தாபய ராஜபக் ஷவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
போர்க்குற்றங்களை ஒப்புக்கொண்டு, அவற்றை மன்னித்து மறந்து விட வேண்டும் என்று ரணில் தரப்பு வலியுறுத்தும் நிலையில், போர்க்குற்றங்களை ஒப்புக்கொண்டால் அதற்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு தமக்கு ஏற்படும் என்பதால், போர்க்குற்றங்களே நடக்கவில்லை என்று மஹிந்த தரப்பு ஒற்றைக்காலில் நிற்கிறது.
இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம், போருடன் தொடர்புபட்ட தரப்புகளே, போர்க்குற்றங்கள் நடந்தனவா- இல்லையா என்ற விடயத்தில் இரண்டுபட்டு நிற்பது தான்.
ரணில் விக்கிரமசிங்க இறுதிக்கட்டப் போருடன் தொடர்புபட்டிருக்கவில்லை. அவர் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தார்.
ஆனால் இப்போது அவரது கட்சியில் உள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தான் இறுதிக்கட்டப் போரில் இராணுவத்துக்கு தலைமை தாங்கியவர்.
அவர், போர்க்குற்றங்களில் படையினர் ஈடுபடவேயில்லை என்று கூறமுடியாது, சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்று தெளிவாக கூறுகிறார்.
அதேவேளை, போர்க்காலத்தில் தானே பாதுகாப்புச் செயலராக இருந்தேன் என்றும், படையினர் ஒழுக்கமாக செயற்பட்டனர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கோத்தாபய ராஜபக் ஷ கூறியிருக்கிறார்.
கடந்தவாரம், கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய முன்னாள் இராணுவத் தளபதி ஜெயரல் தயா ரத்நாயக்க, எயர் சீவ் மார்ஷல் றொஷான் குணதிலக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசார சமரசிங்க ஆகியோரும், போர்க்குற்றங்களை ஒப்புக்கொள்ளாவிடினும், சில ஒழுங்கீனங்கள் நடந்திருக்கலாம் என்பதை மறுக்கும் நிலையில் இருக்கவில்லை.
அவ்வாறான செயல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படலாம் என்பதை அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள்.
அத்துடன் இரண்டு தரப்புகளும் அனைத்தையும் மறந்து விட வேண்டும் என்பது போலவே அவர்களின் கருத்துக்களும் அமைந்திருந்தன.
ஆனால், கோத்தாபய ராஜபக் ஷவோ எந்தவொரு மீறல்களும் நடக்கவில்லை என்பதை வலியுறுத்தி வருவதுடன், அவ்வாறு மீறல்கள் நடந்ததாக ஒப்புக்கொள்ளப்படுவதை தேச துரோகமாக, நாட்டை காட்டிக் கொடுக்கும் செயலாக அடையாளப்படுத்த முற்படுகிறார்.
கோத்தாபய ராஜபக் ஷவும், மஹிந்த ராஜபக் ஷவும், போர்க்குற்றங்கள் என்ற விவகாரம் தலையெடுக்கும் போதெல்லாம், அதனை வன்மையாக மறுப்பதற்குக் காரணம் இருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக, பாதுகாப்பு அமைச்சராக இருந்போது தான், இறுதிக்கட்டப் போர் நடந்தது. அந்தக் காலகட்டத்தில் பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக் ஷ இருந்தார். அவரே போர் தொடர்பான முடிவுகளை எடுத்தார்.
எனவே, இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் நடந்தன என்பது உறுதிப்படுத்தப்பட்டால், முப்படைகளினதும் தளபதி என்ற வகையில், மஹிந்த ராஜபக் ஷவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை வழிநடத்தியவர் என்ற வகையில் கோபத்தாபய ராஜபக் ஷவும் பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்படும்.
இறுதிக்கட்டப் போரின் போது, கோத்தாபய ராஜபக் ஷ போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இரகசிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை வைத்திருந்தார் என்றும், அதற்கு மஹிந்த ராஜபக் ஷ அனுமதி அளித்திருந்தார் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.
ஆனால் அந்த இரகசிய நிகழ்ச்சி நிரல் என்னவென்பதை, அவர் வெளிப்படுத்தவில்லை.
எனினும், போரின் போது, தான் இராணுவத் தளபதியாக இருந்த போதும், அந்த இரகசிய நிகழ்ச்சி நிரலை தனக்குத் தெரியாமல் கோத்தாபய ராஜபக் ஷ செயற்படுத்தினார் என்றும், அதற்கு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஒத்துழைத்தார் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த இரகசிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், போரின் இறுதியிலும், அதன் பின்னரும் சில குற்றங்கள் இடம்பெற்றதாக எனக்குத் தகவல் கிடைத்தது. எனவே, இராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு மஹிந்த ராஜபக் ஷவும், கோத்தாபய ராஜபக் ஷவும், ஜெனரல் ஜகத் ஜயசூரியவும் பொறுப்புக்கூற வேண்டும் என்பது சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு.
இந்தவேளையில் ரணில் விக்கிரமசிங்க போர்க்குற்றங்கள் பற்றியும், மறப்போம் மன்னிப்போம் என்றும் பேசுவதால் அவர்களுக்கு பெரிய அரசியல் நலன்கள் ஏதும் கிடைத்து விடாது.
ஜெனீவாவைச் சமாளிக்கும் யுக்தியாக அது பார்க்கப்பட்டாலும், இத்தகைய கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. அது எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தக் கூடியது.
அதேவேளை, கோத்தாபய ராஜபக் ஷவோ, இந்த விவகாரத்தை அரசியல் மயப்படுத்தும் முனைப்பில் இருக்கிறார். இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை வைத்து, சிங்கள மக்களிடம் ஆதரவும் அனுதாபமும் தேடிக் கொள்வதே அவரதும் மஹிந்த தரப்பினதும் இலக்காக இருக்கிறது.
இதனை வைத்து சிங்கள மக்களை எப்படித் தமது பக்கம் திருப்ப முடியும் என்பது ராஜபக் ஷவினருக்கு நன்றாகவே தெரியும். படையினரைப் பாதுகாப்பது என்ற பெயரில் அவர்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளத் தான் முற்படுகிறார்கள் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் சிங்கள மக்கள் கண்மூடித்தனமாக ஆதரவு அளிப்பார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்.
இந்தச் சந்தடியில், கோத்தாபய ராஜபக் ஷ ஒரு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். தமிழ் மக்கள் மத்தியில் தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே, ரணில் விக்கிரமசிங்க பொய் கூறுகிறார் என்று அவர் கூறியிருக்கிறார்.
போர்க்குற்றங்கள் விடயத்தில் தமிழ் மக்களின் கருத்து தமது கருத்துடன் இணக்கமானது அல்ல என்பதை அவர் இதன்மூலம் ஏற்றுக் கொண்டுள்ளார்.
தமிழ் மக்களை விடுவிக்கவே போரை நடத்தினோம் என்றும், புலிகளிடம் இருந்து விடுவித்ததால் தமிழ் மக்கள் தமக்குப் பின்னால் இருக்கிறார்கள் என்றும் ராஜபக் ஷவினர் கூறி வருவது பொய்யே என்பதை, கோத்தாபய ராஜபக் ஷவின் இந்தக் கருத்தே வெளிப்படுத்தி நிற்கிறது.
அதைவிட, தமிழ் மக்களின் மத்தியில் தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள, ரணில் இவ்வாறு கூறியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ள கோத்தாபய ராஜபக் ஷ, தெற்கிலுள்ள மக்கள் ஒருபோதும் அவரை மன்னிக்கமாட்டார்கள், அதற்கான தண்டனையை தேர்தலின்போது அவர் எதிர்நோக்குவார் என்றும் கூறியிருக்கிறார்.
இதன்மூலம், தமிழர்களும், சிங்களவர்களும் போர்க்குற்றங்கள் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இல்லை என்பதையும் அவர் உறுதி செய்திருக்கிறார்.
ஆக, போர்க்குற்றங்கள் என்பது இப்போது தெரிந்தோ தெரியாமலோ, சிங்கள அரசியல் தலைமைகளின் காலைச் சுற்றிய பாம்பாக மாறி விட்டது