படையினர் எமக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்று தமிழ் மக்கள் ஒருபோதும் கூறவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

492
படையினர் எமக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்று தமிழ் மக்கள் ஒருபோதும் கூறவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையில் இன்றைய தினம் காணி தொடர்பிலான விசேட அமர்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பொதுத்தேவை என அடையாளப்படுத்தி படையினருக்கு காணிகளை வழங்குகிறீர்களே? என்ன அடிப்படையில் வழங்குகிறீர்கள் என நான் அரசாங்க அதிபரை கேட்டிருந்தேன்.

அவர்கள் எனக்கு மேற்கண்டவாறு விளக்கமளித்தார். அதாவது படையினர் பொதுமக்களை பாதுகாக்கின்றார்களாம். எனவே படையினருக்கு காணிகளை வழங்குவது பொதுத்தேவையாம்.

ஆனால் உன்மை என்னவென்றால், படையினர் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என தமிழ் மக்கள் கூறப்போவதில்லை. இதுவரையில் கூறவுமில்லை.

மேலும் படையினரை நாங்கள் வெளியேற்றுவோம் என கூறிய தன் பின்னரே வடமாகாணசபை தேர்தலில் எமக்கு அமோக வாக்களித்து எம்மை இங்கே ஆட்சியமைக்கவும் தமிழ் மக்கள் அதிகாரமளித்தார்கள்.

எனவே படையே எங்கள் மண்ணிலிருந்து நீ வெளியேறு என்றே தமிழ் மக்கள் கூறுகின்றார்கள். தவிர படையினர் இங்கே இருக்க வேண்டும். அவர்கள் எமக்கு பாதுகாப்பு என்று ஒருபோதும் கூறவில்லை.

இனிமேல் கூறப் போவதுமில்லை. எனவே தமிழ் மக்களுடைய நிலங்களிலிருந்து படையினர் வெளியேற வேண்டும். மக்களுடைய நிலங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.

SHARE