பண்டாரவன்னியன் சிலை திறப்பும், தமிழ் அரசியல் கட்சிகளின் வங்குரோத்து அரசியலும்

346

கடந்த சில வாரங்களாக வன்னிப் பெருநிலப்பரப்பில் பண்டாரவன்னியன், காந்தி போன்றவர்களுக்கு சிலை திறப்பு என ஆரம்பிக்கப்பட்டு, இதில் மல்லாவியில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்களால் பண்டாரவன்னியன் சிலை ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் காந்தி சிலை முல்லைத்தீவில் அமைக்கப்படவிருந்த சமயம் வடமாகாண சபையின் உறுப்பினர் ரவிகரனின் அடியாட்களால் அச்சிலை உடைக்கப்பட்டதாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த செழியன் என்பவர் சுனாமி நினைவுதினத்தின்போது பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். இது இவ்வாறிருக்க மல்லாவியில் பண்டார வன்னியன் சிலை திறந்துவைக்கப்பட்டதன் பின்னர் இப்பண்டாரவன்னியனின் சிலையில் பல குறைகள் இருப்பதாகவும், இது ஒரு நோய்வாய்ப்பட்ட சிலை போலக் காணப்படுவதாகவும் அரசியல்வாதிகளால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதன் பிரதிபலிப்பாக நேற்றைய தினம் (10.01.2017)வடமாகாண சபையில் வடமாகாணசபை உறுப்பினர் மயூரன், சிவாஜிலிங்கம், ரவிகரன் போன்றோரால் இவ்விடயம் வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் குறிப்பிடப்பட்ட விடயம் என்னவெனில், முல்லைத்தீவு-மல்லாவி நகரில் மாவீரன் பண்டாரவன்னியனின் உருவச் சிலையை எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் தோற்றத்தில் அமைத்திருக்கின்றார்கள்.

இது மாவீரன் பண்டாரவன்னியனின் மாவீரத்தையும், தமிழர்களின் வீரத்தையும் கொச்சைப்படுத்தும் ஒரு செயல் என வடமாகாணசபையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் 82ம் அமர்வு மாகாணசபை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக மேற்படி விடயத்தை சபைக்கு கொண்டு வந்தார்.

குறித்த விடயத்தை முன்வைத்து அவர் மேலும் குறிப்பிடுகையில், மல்லாவி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு கீழ் பண்டாரவன்னியன் என எழுதியதால் மட்டுமே அது பண்டாரவன்னியனின் சிலை என மற்றவர்களுக்குத் தெரியும்.

ஒரு மாவீரனின் சிலையை சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் தோற்றத்தில் அமைத்திருக்கிறார்கள்.

வெளிநாட்டில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இங்கே வருகிறவர்கள் அந்த சிலையை பார்த்தால் தமிழர்களின் வீரம் குறித்து என்ன நினைப்பார்கள்? இது பண்டாரவன்னியனை கொச்சைப்படுத்தும் ஒரு செயல் என்றார்.

தொடர்ந்து பேசிய மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் 25ம் அமர்வில் பண்டாரவன்னியனின் சிலையை முல்லைத்தீவு நகரில் அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இதற்கிடையில் பண்டாரவன்னியனை கொச்சைப்படுத்தும் செயலாகவே நான் பார்க்கிறேன்.

இந்த சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மல்லாவி பிரதேச மக்கள் எனக்கு கொடுத்திருக்கும் கடிதம் ஒன்றில் ஒரு மகள் தனது தந்தையை பார்த்து பண்டாரவன்னியன் போலியோ நோயினாலா இறந்தார் எனக் கேட்டதாக கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த சிலை அமைப்பு தமிழ்மக்கள் பண்டாரவன்னியன் மீது கொண்டிருக்கும் கௌரவத்தையும், பண்டாரவன்னியனின் மா வீரத்தையும் கொச்சைப்படுத்தும் ஒரு செயல் எனச் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பேசுகையில் அந்த சிலைக்கு கீழ் 23ம் புலிகேசி என எழுதி விடுங்கள் என்றார். இவ்வாறான பல கருத்துக்களும் அங்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

வடமாகாண சபையின் உறுப்பினர்களான மயூரன், சிவாஜிலிங்கம், ரவிகரன் மூவரும் ஒரு விடயத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும். பண்டாரவன்னியனை நேரில் பார்த்தவர்கள் போல கருத்துக்களைத் தெரிவிப்பது சிறந்ததல்ல. வரலாறு தெரியாதவர்களும் கருத்துக்களைக் கூறுவது சிறப்பல்ல. விடுதலைப்புலிகளால் தேடப்பட்டவர்தான் சிவாஜிலிங்கம் அவர்கள். அதுமட்டுமல்லாது ஹிலாரி கிளின்ரன் வெற்றிபெறவேண்டும் என 1000 தேங்காய் உடைத்தவரும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக குருநாகலையில் போட்டியிட்டவருமான இவர், தானும் செய்யாது செய்பவர்களையும் விமர்சிப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. தான் அரசியலில் கோமாளித்தனமாக செயற்படுவதுபோன்று ஏனையவர்களும் செயற்படவேண்டும் என எதிர்பார்ப்பது உகந்ததொன்றல்ல.

அண்மைக்காலமாக ரவிகரன் அவர்களது செயற்பாடு மாத்திரமல்ல, பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் வன்னிப் பரப்பில் 08 சிலைகளை அமைக்கவுள்ளார் என்பதை அறிந்தவுடன் தமது பிரதேசத்தில் தான் எந்த சிலையையும் அமைக்கவில்லை. இதனால் சிவமோகன் அவர்கள் சிலையினை அமைத்தால் மக்களின் செல்வாக்கினைப் பெற்றுவிடுவார். இதனால் அவருக்கு எதிராக அவரது செயற்பாடுகளை குறைகூறும் ஒருவராகவே ரவிகரன் அவர்கள் திகழ்கிறார் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவரைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியம் பேசி அரசியலில் பிழைப்பு நடத்துபவராகவே அப்பிரதேச மக்கள் கருதுகிறார்கள். விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவர் இவ்வாறு செயற்படுகிறாரா? அல்லது இவரை இவரது கட்சியினர் பின்புலத்திலிருந்து தூண்டிவிடுகிறார்களா? என்கிற விடயமும் பேசப்படுகிறது.

வடமாகாண சபையின் உறுப்பினர் மயூரன் அரசியலுக்குப் புதிதானவர். இராணுவப் புலனாய்வுடன் நெருங்கிய தொடர்புடையவர். ரெலோ கட்சிக்கு தனது பணத்தை அள்ளி அள்ளி வழங்கியவர். அந்த விசுவாசத்தின் அடிப்படையில் வடமாகாணசபையின் உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு வரக்கூடியவர் ரெலோவின் விசுவாசியான ரவி அவர்களே. இவரது நிலைப்பாடு பற்றி ரவி அவர்களே விமர்சித்திருந்தார். இவர் தான் ஒரு போராளி என்றும் தனது குடும்பமும் போராட்டத்தில் கலந்துகொண்டது என்றும் தேர்தல் காலங்களில் மேடைகளில் முழங்கியவர். இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சம்பவங்கள் இருந்தாலும் அதனை அரசியலில் கொணர்ந்து இணைப்பது சிறப்பல்ல.

பொதுவாக அரசியலில் உள்ளவர்கள் கொலை, கொள்ளை, கப்பம் பெறல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் அரசியலுக்கு வந்தபின் சுத்தமானவர்கள் என தம்மைக் காட்டிக்கொள்வது மக்களுக்குத் தெரியாதவிடயமுமல்ல. சிவமோகன் சிலை திறந்தால் என்ன? சிவாஜிலிங்கம் சிலை திறந்தால் என்ன? சிறிதரன் சிலை திறந்தால் என்ன? அல்லது ஏனைய அரசியல்வாதிகள் சிலை திறந்தால் என்ன? இதனை விமர்சிப்பதில் மக்களுக்குத் தீர்வு கிடைக்குமா? தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றனர். இவர்கள் மக்களில் அக்கறையுள்ளவர்கள் அல்ல. எப்படி மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பது, அடுத்த தேர்தலில் தமது இருப்பினைத் தக்கவைத்துக்கொள்வது எவ்வாறு? என்ற குறிக்கோளில் செயற்படுகின்றார்கள்.

சிங்கள அரசியல்வாதிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இவற்றை முன்னின்று நீதிமன்றத்துக்கு வழக்குத்தாக்கல் செய்து அந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கின்றார்களா? தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டங்கள் குறித்து சிந்திக்கின்றார்களா?

குறிப்பாக தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை, காணி சுவீகரிப்பு, மீள்குடியேற்றம், அத்துமீறிய சிலைகள் திறப்பு, சமூக கலாச்சார பிரச்சினைகள், தமிழர் வரலாறுகள் அழிக்கப்படுவதைப் பாதுகாப்பது, தேசியம், சுயநிர்ணய உரி மையை பாதுகாத்தல், தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தில் ஒன்றிணைந்த சிந்தனை இவ்வாறு பொதுநோக்கில் பல விடயங்களை இவ்வரசியல்வாதிகள் ஒற்றுமையாக கையாண்டு செயற்படவேண்டும். சிவமோகன் சிலை திறந்துவிட்டார் என்பதற்காக அவரைத் தாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது, இதுதொடர்பாக பகிரங்கமாக விமர்சிக்கும் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் வங்குரோத்து நிலை யினை அடைவதால் இதனைக்கொண்டு பிழைப்பு நடத்துவதற்காகவே இவ்வாறான கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். தமிழ் மக்களின் விடுதலை பற்றி அக்கறைகொள்ளாத இவர்கள் அதுபற்றிச் சிந்தித்து நடவடிக்கையினை எடுத்துள்ளார்களா? அவ்வாறு செய்திருந்தால் இவர்கள் அவற்றை வெளிச்சம்போட்டுக் காட்டலாம். தமிழ் மக்களின் தீர்வுகளுக்காக செயற்படாத இவர்கள் கதிரைகள், மாடுகள், ஆடுகள் வழங்குவதிலும் ஈடுபட்டுவருகின்றார்கள். குறிப்பாக ஊடகங்களில் எமது செய்திகள் பிரசுரிக்கப்படாதா என்கிற ஏக்கத்துடன் வாழ்கிறார்கள்.

வன்னிப் பிராந்தியத்தில் சிலைகள் அமைப்பது தொடர்பில் குறிப்பாக செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், விநோதராதவிங்கம், சிறிதரன் போன்றோர் இதற்கு முன் ஏன் சிந்திக்கவில்லை. அதற்குப் பின்னர் மாகாண சபை, பாராளுமன்றத்திற்கு வந்தவர்கள் கூட தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சிலை கள் அமைக்க ஏன் சிந்திக்கவில்லை. 03தசாப்த காலங்களாக பாராளுமன்றில் இருப்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு புதிய சிந்தனையோடு வன்னிப் பகுதியில் சிலைகளை அமைப்பது தவறா? சிலைகளில் குறைபாடுகள் இருந்தால் சிவமோகனின் அலுவலகத்திற்குச் சென்று இதனைத் திருத்தி இவ்வாறு அமையுங்கள் எனக்கூறுவது ஒரு சிறந்தவனுக்கு ஏற்புடையது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களுக்கு சார்பாக இச்செய்தியை எழுதுவதாகக்கூட பலர் கருதலாம். ஆனால் இதுவரை காலமும் சிலைகள் வைக்கவேண்டும் என பாராளுமன்ற அல்லது மாகாணசபை உறுப்பினர்கள் சிந்திக்காமல் போனது ஏன்? இவ்வாறு விமர்சிப்பவர்கள் தேசியம், சுயநிர் ணய உரிமைக்காக எங்கே? எப்போது? குரல் எழுப்பினீர்கள். தமிழ் மக்களுக்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதில் வெற்றிபெற்றுள்ளீர்களா?

தமிழினம் ஒற்றுமையாக வாழ்வதற்கு நாம் முழு ஒத்துழைப்பையும வழங்கவேண்டும். தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையினை வளர்ப்பதில் முழு மூச்சாக செயற்படவேண்டும். கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் சுரேஸ் அவர்கள் செயற்பட்டுவந்தார். அவரை ஏனைய கட்சிகள் ஓரங்கட்டின. அவருடன் ஏனைய கட்சிகள் கைகோர்த்திருந்தால் இன்று தமிழரசுக்கட்சியினை ஓரங்கட்டியிருக்கலாம். பதவிக்காக ஆசைப்பட்டு வைகுண்டத்தில் இருக்கும் செல்வம் அடைக்கலநாதனும், அடுத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை தக்கவைத்துக்கொள்வதற்காக செயற்படும் சித்தார்த்தனும் தமிழரசுக்கட்சியின் வாலைப்பிடித்துக்கொண்டு இன்னமும் அரசியல் செய்கிறார்கள். புளொட் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் பவான் அவர்கள் இச்சிலை திறப்பு தொடர்பாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். சட்டத்திற்குப் புறம்பாக சிலை திறந்திருந்தால் அது அகற்றப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் பண்டாரவன்னியன் சிலையினை கேவலப்படுத்தவும், அரசியல்வாதிகளிடம் பிரிவினைகளை மேற்கொண்டு ஒற்றுமையுடன் செயற்படாததை ஏற்றுக்கொள்ள முடியாது.

காந்தி சிலை என்பது உலக நாடுகள் எங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று. அதனை வீழ்த்தியிருப்பதென்பது அஹிம்சைப் போராட்டத்தை அவமதிக்கும் ஒரு செயல். பொதுவாக அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். இவ்விடயத்தில் போட்டி இருக்கலாம்;. பொறாமை இருக்கக்கூடாது. ஒருவர் ஒன்றிணைச் செய்கிறார் எனில் அதனைவிட பன்மடங்காக நான் செய்யவேண்டும் என்பதை அரசியல்வாதிகள் கொண்டிருக்கவேண்டும். இன்று அரசை விட முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழருக்கு எதிராக மாறியுள்ளார்கள். அவர்களை அரசி யலில் இருந்து வெளியேற்றவேண்டும். அல்லது ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு விடுக்கவேண்டும். இன்று தனியான அலகுக்காக வடகிழக்கினை இணைக்கவிடாது பிளவுபடுத்தும நோக்கில் இவர்கள் செயற்படுகிறார்கள்.

சிலைகளை விமர்சிக்கும் அரசியல்வாதிகளிடம் ஒன்றிணைக் கேட்க விரும்புகிறேன். முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு எதிராக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள். அவர்களுக்கு ஏன் பயப்படுகிறீர்கள். கிழக்கினை முஸ்லீம்களிடம் தாரை வார்த்துக்கொடுப்பதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சம்பந்தனும் மிக முக்கிய காரணம். இதில் சுமந்திரன் அவர்களும் உடன் கட்டை ஏறியுள்ளார்.

 


தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவாருங்கள். தமிழரசுக்கட்சியினது காலைப் பிடிக்கவேண்டிய தேவை ஏற்படாது. எதை விமர்சிக்கவேண்டும் விமர்சிக்கக்கூடாது என்பதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். ஐ.நா சபை தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளை கொணர முயற்சிக்கிறது. அதற்கான கையெழுத்துக்களை சேகரியுங்கள். இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டுங்கள். எமது சமாதானப் பேச்சுக்களுக்கும் தீர்வுகளுக்கும் யார் முட்டுக்கட்டையாக செயற்படுகிறார்களோ அவர்களுக்கு எதிராக போர்க்கொடியினைத் தூக்குங்கள். இதனை விடுத்து தமிழ்க் கட்சிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் செயற்பாட்டில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். வடகிழக்கில் சமூக சேவைகளுக்காக பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக அமைப்புக்களாக 135இற்கும் மேல் இருக்கிறது. இதனை விட எத்தனையோ மீனவ சமாஜங்கள் இருக்கிறது. ஆளுக்கு 100பேரைத் திரட்டி தீர்வுகள் இல்லையேல் அஹிம்சை ரீதியாகப் போராடுங்கள்.

தமிழ் அரசியல்வாதிகளை விமர்சிப்பதை இத்துடன் நிறுத்திக்கொண்டு சிங்கள, முஸ்லீம் அரசியல்வாதிகளை விமர்சியுங்கள். அவர்களுடன் மோதுவதற்கு தகுதி இல்லையெனில் நீங்கள் தமிழ் அன்னையின் முளைப் பாலைக் குடித்து வளர்ந்தீர்களா? என்று கேட்கும் அளவிற்கு அரசியல் செய்யாதீர்கள். இவ்வாண்டும் தீர்வுகள் பெற்றுத்தரப்படாத பட்சத்தில் அரசியல் தலைமைகளில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். அது சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்றவர்களாலேயே சாத்தியம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்து போராட்டங்களை நடாத்த எதிர்க்கட்சிப் பதவியிலிருந்து விலகவேண்டும். இல்லையேல் அது சாத்தியமில்லை. மாவீரர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பல சம்பவங்கள் இடம்பெற்றுவருகிறது. அதிலே அவர்கள் தங்களது அரசியலை செய்ய முற்படுகிறார்கள். தமிழ் மக்கள் மத்தியில் இன ஒற்றுமையினை ஏற்படுத்தி இலங்கையரசு வியக்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்படவேண்டும்.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள கொப்பேகடுவா சிலையினை அகற்றுங்கள். மாங்குளம், கிளிநொச்சி ஆனையிறவு போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தூபிகளை அப்புறப்படுத்தி தமிழ் மக்களது நினைவுச்சின்னங்களை அமையுங்கள். இதற்காகக் குரல்கொடுத்து அவற்றை அகற்கும் நடவடிக்கையில் இவர்கள் அழுத்தம்கொடுத்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் அது வரவேற்கத்தக்கது. தமிழ் மக்களை பிரதிபலிக்கின்ற நினைவுச்சின்னங்களை அப்புறப்படுத்துவதற்கும் குறை கண்டுபிடிக்கவுமாக நீங்கள் செயற்படும் விதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இந்தக் கேள்வியை உங்களுக்குள் கேட்டுப்பாருங்கள். விடை தானாக வரும். சிங்கள ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்குங்கள். இதனைவிடுத்து உங்களுடைய சுயநல அரசியலுக்காக வங்குரோத்து அரசியல் செய்யாது தமிழினத்தின் விடுதலைக்காக குரல்கொடுத்து எதிர்கால சந்ததியினர் உங்களுக்கும் இந்த தமிழ் பிரதேசங்களில் சிலை வைக்கும் அளவிற்கு உங்களது செயற்பாடுகள் அமையப்பெறவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

சுழியோடி

SHARE