பதவிகளை வைத்து  அதிகாரம் படைத்தவர்கள் என்று எண்ணுவது மிக ஆபத்தானது

19

 

 

அரசாங்கம் மக்களுக்கு மேலும் சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக, அரசு தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

 

வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் மற்றும் விசேட பிரிவுகளின் வரவு செலவுத் தலைப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இன்று (27) பாராளுமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டார்.

 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் கூறியதாவது:

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தற்போதைய அரசாங்க வேலைத்திட்டம் பற்றிய புரிதல் இல்லை என்பது அவர்களின் பேச்சுக்களில் இருந்து தெரிகிறது. அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சில வேலைத்திட்டங்களுக்கு இறுதி முடிவுகள் எட்டப்பட்டதைப் போன்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றன.  எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் புதிய அரசியல் கலாசாரத்திற்கான ஆரம்பமாகும்.

அரசியலமைப்பு திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் பேசின. மக்களின் பங்களிப்புடனேயே அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்வோம் என எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறியுள்ளோம்.  அந்த அரசியலமைப்பு மக்கள் அரசியலமைப்பாக இருக்க வேண்டும்.

இன்று ஆரம்பமாகும் வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் விசேட செலவின அலகுகள் மூலம் எமது புதிய அரசியல் கலாசாரத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை விளக்கியுள்ளோம்.  எதிர்க்கட்சிகள் அந்த தொலைநோக்கை புரிந்து கொள்ளாமல் ஒவ்வொரு விடயத்தையும் விமர்சிக்கின்றன.

அரசாங்கம் என்ற வகையில்  நாம் மக்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது. மக்கள் மீது சுமையை ஏற்றும் வகையிலேயே கடந்த அரசுகள் செயல்பட்டன. அரச சேவை மட்டுமின்றி அரசும் மக்களுக்கு சுமையாக மாறியிருந்தது. இந்த நாட்டின் அமைச்சர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் மக்களுக்கு சுமையாக மாறியிருந்தனர். மக்களின் சுமையை குறைப்பதே எங்கள் அரசின் நோக்கம். அதனால்தான் அந்த அலகுகளின் செலவுகளில் நாங்கள் விசேட கவனம் செலுத்துகிறோம்.

ஒரு அரசாங்கம் மக்களிடமிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பெறும் வரிகளாலேயே பராமரிக்கப்படுகிறது, மேலும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நாங்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள்.

பதவிகள் மற்றும் சிறப்புரிமைகளை தனிப்பட்ட ரீதியில் பெற்ற ஒன்றாக கருதுவது மோசடிக்கும் ஊழலுக்கும் காரணம் என்பதை அரசாங்கம் என்ற வகையில் நாம் புரிந்து கொண்டுள்ளோம். பதவியின் காரணமாக, சிறப்புரிமை காரணமாக கிடைக்கும் அதிகாரத்தை வைத்து தாம் தனித்துவமானவர்கள் என்று எண்ணும் அகங்காரம் மிகவும் ஆபத்தானது. சிறப்புரிமை பதவிக்கானதேயன்றி தனிநபருக்குரியது அல்ல என்பதை அரசியல்வாதிகள் மட்டுமின்றி அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகள் தமது பதவிகளுக்கு கிடைத்த சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்துள்ளனர், இதற்கு ஒரு உதாரணமாக வெளிநாட்டுப் பயணங்களை முன்வைக்கிறேன்.

2010-2014 காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு பயணங்களுக்கு 3572 மில்லியன் ரூபாவும், 2015-2019 மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வெளிநாட்டு பயணங்களுக்கு 384 மில்லியன் ரூபாவும், 2020-2022 கோட்டாபய ராஜபக்ஷ 126 மில்லியன் ரூபாவும், 2023-2024 ரணில் விக்கிரமசிங்க 533 மில்லியன் ரூபாவையும் செலவிட்டுள்ளனர். ஆனால் எமது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 2024 செப்டெம்பர் முதல் 2025 பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு பயணங்களுக்கு 1.8 மில்லியன் ரூபாவையே செலவிட்டுள்ளார். அதன் மூலம் மக்களின் பணத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை காட்டியுள்ளோம்.

ஜனாதிபதி ஒருவர் வெளிநாட்டுப் பயணத்தில் பங்கேற்கும் போது செல்ல வேண்டியவர்கள் சிலர் உள்ளனர் என்றும், வெளிநாட்டு பயணங்களை இலஞ்சமாக கொடுத்து அதிகளவானோரை பயணத்தில் அழைத்துச் சென்றிருப்பதே இங்கு பிரச்சினை எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.

SHARE