பதவி துறக்கும் ரிஷாட் – அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பு

363

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தான் வகிக்கும் அமைச்சுப் பதவியை விரைவில் இராஜினாமா செய்யவுள்ளதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து அறிய முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் 18, 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றும், 19ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பிரேரணை விவாதத்துக்கு வருவதற்கு முன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி துறப்பார் என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுயாதீன விசாரணைகளுக்கு இடமளித்து அமைச்சர் ரிஷாட் பதவி துறக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அத்துரலிய ரதன தேரரும் போராட்டத்தில் குதித்துள்ளார். இதனால், அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே, கட்சி தலைமையின் ஆலோசனையின் பிரகாரம் ரிஷாட் பதவி துறக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE