பதிவு செய்யாமல் பயன்படுத்தப்படுகின்ற கையடக்க தொலைபேசி இணைப்புக்களை துண்டிக்கப்படும் என தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கையடக்க தொலைபேசி இணைப்புக்களை பதிவு செய்வதற்கு போதுமானளவு கால அவகாசம் வழங்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட கூறியுள்ளார்.
குறித்த காலப் பகுதிக்குள் பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசி இணைப்புக்கள் உரிய தொலைபேசி நிறுவனங்களால் துண்டிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது 20 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் கையடக்க தொலைபேசி இணைப்புக்கள் பயன்படுத்துகின்றனர்.
இதில் ஐந்து வீதமானவர்கள் தமது பெயர்களில் சிம் அட்டைகளை பதிவு செய்யாதவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதுவரை பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசி இணைப்புக்களை உடனடியாக பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுப்பதற்கான நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.